பாரத ஸ்டேட் வங்கியில் நகை-பணத்தை அள்ளிச்சென்ற கொள்ளையர்களை பிடிக்க மேலும் 6 தனிப்படை அமைப்பு
பொங்கலூர் அருகே பாரத ஸ்டேட் வங்கி கிளையில் நகை-பணத்தை அள்ளிச்சென்ற கொள்ளையர்களை பிடிக்க மேலும் 6 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
பொங்கலூர்,
திருப்பூர் மாவட்டம் பொங்கலூர் அருகே டி.கள்ளிபாளையத்தில் பாரத ஸ்டேட் வங்கி கிளை உள்ளது. இந்த வங்கிக்கு சம்பவத்தன்று புகுந்த கொள்ளையர்கள், அங்கிருந்த பாதுகாப்பு பெட்டகம் மற்றும் பணம் வைக்கும் பாதுகாப்பு பெட்டி ஆகியவற்றை உடைத்து அதில் இருந்த 10 கிலோவுக்கும் அதிகமான நகை மற்றும் ரூ.19 லட்சம் ஆகியவற்றை மூட்டையாக கட்டிக்கொண்டு தப்பிச்சென்று விட்டனர். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
இந்த சம்பவத்தை தொடர்ந்து நகையை இழந்த வாடிக்கையாளர்களும், வங்கியில் கணக்கு வைத்துள்ள வாடிக்கையாளர்களும் அச்சம் அடைந்தனர். மேலும் பாதிக்கப்பட்ட வாடிக்கையாளர்கள், நகையை மீட்டுத்தரக்கோரி சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பெண் குழந்தைகளின் திருமணத்திற்காக வங்கியில் பாதுகாப்பாக வைத்திருந்த நகைகள் கொள்ளை போனதால், அவர்களின் திருமணம் நடக்குமா? என்ற கவலையில் நகையை இழந்த பெண் குழந்தைகளின் பெற்றோர் கவலை அடைந்துள்ளனர். ஏற்கனவே இந்த வங்கியில் முதல் முறையாக மர்ம ஆசாமிகள் கொள்ளை முயற்சியில் ஈடுபட்ட நிலையில் அதை தொடர்ந்து வங்கியின் பாதுகாப்பை பலப்படுத்தி இருந்தால், இந்த சம்பவம் நடந்து இருக்காது என்றும், வங்கி நிர்வாகத்தின் அலட்சிய போக்கே கொள்ளைக்கு காரணம் என்றும் வாடிக்கையாளர்கள் குற்றம் சாட்டுகிறார்கள்.
இந்த நிலையில் வங்கியில் துணிகர கொள்ளையில் ஈடுபட்ட கொள்ளையர்களை பிடிக்க முதல் கட்டமாக 5 தனிப்படை அமைக்கப்பட்டது. அதை தொடர்ந்து மேலும் 6 தனிப்படைகள் அமைத்து மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு திஷா மித்தல் உத்தரவிட்டார். இதையடுத்து மொத்தம் 11 தனிப்படைகள் அமைக்கப்பட்டுள்ளன.
ஒவ்வொரு தனிப்படை போலீசாரும் பல்வேறு கோணங்களில் விசாரணை மேற்கொண்டு வருகிறார்கள். சம்பவத்தன்று இரவு பல்லடம்-தாராபுரம் சாலையில் சென்ற வாகனங்கள் குறித்து அந்த பகுதிகளில் பொருத்தப்பட்டு இருந்த கண்காணிப்பு கேமராவில் பதிவாகி இருந்த காட்சிகளை ஒரு தனிப்படையினர் ஆய்வு செய்து வருகிறார்கள். 2-வது தனிப்படையினர் ஏற்கனவே கிடைத்த தடயம் மற்றும் தகவல்களை கொண்டு வட மாநிலங்களுக்கு சென்று முகாமிட்டுள்ளனர். 3-வது தனிப்படையினர் வங்கியில் கணக்கு வைத்துள்ளவர்களில் வட மாநிலத்தவர் யார் யார்? என்றும் அவர்களின் முகவரி, அவர்கள் தொடர்ந்து வங்கியில் வரவு செலவு வைத்துள்ளார்களா? அல்லது வரவு- செலவு கணக்கை பராமரிக்க வில்லையா? வரவு செலவு கணக்கை பராமரிக்க வில்லை என்றால் எத்தனை நாட்களாக பராமரிக்கவில்லை என ஆய்வு செய்து வருகிறார்கள்.
3-வது தனிப்படை போலீசார் பொங்கலூர் பகுதியில் சமீபத்தில் வீடு மற்றும் அறைகளை காலி செய்த வடமாநிலத்தவர் யார்? என்ற பட்டியலை தயாரித்து வருகிறார்கள். அப்படி வீடு மற்றும் அறைகளை காலி செய்து இருந்தால் எதற்காக காலி செய்தனர் என்றும் விசாரித்து வருகிறார்கள்.
4-வது தனிப்படை போலீசார், ஏற்கனவே கொள்ளை நடந்த பகுதியில் பதிவான கைரேகையை கொண்டு மற்ற கொள்ளையில் ஈடுபட்டவர்களின் கைரேகையுடன் ஒப்பிட்டு பார்த்து வருகிறார்கள்.
மற்றொரு தனிப்படையினர் வாகன தனிக்கையில் ஈடுபட்டு வருகிறார்கள். இப்படி ஒவ்வொரு தனிப்படையினரும் பல்வேறு பணிகளில் ஈடுபட்டுள்ளனர். கொள்ளையில் ஈடுபவர்கள் எந்த தடயத்தையும் விட்டு செல்வது இல்லை. ஆனால் இந்த வங்கி கொள்ளையில் ஈடுபட்ட ஆசாமிகள், கொள்ளையடித்த பின்பு கையுறை மற்றும் பர்தாவை வங்கியின் ஜன்னல் சிமெண்டு சிலாப் மீது வீசி சென்று உள்ளனர். எனவே போலீசாரின் விசாரணையை திசை திருப்பவும், ஒரு அமைப்பின் மீது போலீசாரின் கவனத்தை ஒருங்கிணைக்கவும் இப்படி வீசி சென்று இருக்கலாம் என்றும் தனிப்படை போலீசார் கூறுகிறார்கள்.
மேலும் கொள்ளை போன வங்கியில் பிரதான சர்வர் எங்கு இருக்கும், எத்தனை கண்காணிப்பு கேமரா பொருத்தப்பட்டு இருக்கும். வங்கியின் பணம் எந்த பெட்டியில் வைக்கப்பட்டு இருக்கும், பாதுகாப்பு பெட்டக வசதி எந்த பகுதியில் உள்ளது. எந்த பகுதியில் கண்காணிப்பு கேமரா பொருத்தப்படாமல் உள்ளது என்பது வங்கிக்கு செல்பவர்களுக்கே தெரியும். எனவே வங்கியை பற்றி நன்கு தெரிந்த ஆசாமிகளே இந்த கொள்ளையில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
வங்கியில் கொள்ளை நடந்த நிலையில் நேற்று தான், வங்கி பாதுகாப்பு பெட்டகத்தை கொள்ளையர்கள் எப்படி துளை போட்டுள்ளனர், நகை வைத்து இருந்த பாதுகாப்பு பெட்டகத்தை சுற்றி கட்டப்பட்டு இருந்த கான்கிரீட் சுவரை அவர்கள் இடித்து இருந்த விதம் ஆகியவற்றின் புகைப்படத்தை போலீசார் வெளியிட்டுள்ளனர்.
அதன்படி பணம் வைத்து இருந்த பாதுகாப்பு பெட்டக அறையின் லாக்கரை கொள்ளையர்கள் திறக்க முயன்று தோல்வியில் முடிந்த நிலையில், அந்த பெட்டகத்தின் ஒரு பகுதியில் இரும்பு கதவில் கை நுழையும் அளவுக்கு அறுத்து உள்ளனர். பின்னர் அதில் இருந்த பணம் முழுவதையும் அள்ளி உள்ளனர்.
அதன்பின்னர் வாடிக்கையாளர்கள் நகை வைத்து இருந்த பாதுகாப்பு பெட்டக அறையின் லாக்கரை திறக்க முயன்றும் அவர்களால் முடியவில்லை. அதன்பின்னரே பாதுகாப்பு பெட்டக கான்கிரீட் சுவரை கீழ் இருந்து மேல் வரை உடைத்துள்ளனர். கான்கிரீட் சுவரை உடைத்த பின்னர், பாதுகாப்பு பெட்டக இரும்பு தகடை 3 புறமும் துண்டித்து அதை மேல் புறமாக மடித்து வைத்துள்ளனர். பின்னர் அங்கிருந்த நகைகளையும் கொள்ளையடித்து சென்று உள்ளனர். அதே போல் மற்ற 2 லாக்கர்களின் கான்கிரீட் சுவரை உடைத்து, பின்னர் பாதுகாப்பு பெட்டக இரும்பு தகடை அறுத்து அதில் இருந்த நகையை அள்ளி சென்று உள்ளனர். நகை இருந்த மொத்தம் 31 பாதுகாப்பு பெட்டகமும் உடைக்கப்பட்டு இருந்தது. அவற்றில் இருந்த நகை முழுவதையும் கொள்ளையர்கள் அள்ளி சென்று இருப்பது தெரியவந்துள்ளது.
வங்கிக்குள் நுழைந்தவுடன் பாதுகாப்பு பெட்டகத்தை சுற்றி உள்ள கான்கிரீட் சுவரையும், பாதுகாப்பு பெட்டகத்தின் இரும்பு தகடையும் உடனே அகற்றி விட முடியாது. பல மணிநேரம் முயற்சி செய்தால் மட்டுமே அது சாத்தியமாகும். எனவே கொள்ளையர்கள் வங்கிக்குள் புகுந்து பல மணி நேரம் அமர்ந்து தங்களது கொள்ளையை கச்சிதமாக முடித்துள்ளனர்.
மேலும் கான்கிரீட் சுவரை இடிக்கும்போது, வங்கிக்குள் இருந்து எந்த ஒரு சத்தமும் வராமல் இருந்தது எப்படி என்ற சந்தேகமும் எழுந்துள்ளது. எனவே வங்கியை பல நாட்கள் நோட்டமிட்டு அதன் பின்னரே கொள்ளையர்கள் இந்த செயலில் ஈடுபட்டு இருக்கலாம் என்றும் போலீசார் தெரிவித்தனர்.
Related Tags :
Next Story