கம்பம் பகுதியில் இலவங்காய் விளைச்சல் அமோகம்


கம்பம் பகுதியில் இலவங்காய் விளைச்சல் அமோகம்
x
தினத்தந்தி 27 Feb 2020 4:00 AM IST (Updated: 27 Feb 2020 12:47 AM IST)
t-max-icont-min-icon

கம்பம் பகுதியில் இலவங்காய் அமோகமாக விளைச்சல் அடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

கம்பம், 

கம்பம் பள்ளத்தாக்கு பகுதியின் மேற்கு பகுதியான ஏகலூத்து, புதுக்குளம், மணிகட்டி ஆலமரம், கம்பம்மெட்டு மலை அடிவார பகுதிகளில் ஆயிரக்கணக்கான ஏக்கர் பரப்பளவில் மானாவாரி நிலங்கள் உள்ளன. இந்த மானாவாரி நிலங்களில் விவசாயிகள் கம்பு, சோளம், எள், தட்டைப்பயறு, மொச்சை, சூரியகாந்தி உள்ளிட்ட பயிர்களை சாகுபடி செய்து வருகின்றனர்.

இதுதவிர முந்திரி, புளியமரம், இலவ மரங்களையும் வளர்த்து வருகின்றனர். மேற்கு தொடர்ச்சி மலை அடிவாரப்பகுதியானது கேரள எல்லையில் அமைந்துள்ளது. இதனால் அங்கு நிலவக்கூடிய தட்பவெப்ப மாற்றங்கள் மலை அடிவாரப்பகுதியிலும் நிலவுகின்றன. மேலும் இலவ மரம் வளர்ப்பதற்கு தேவையான தட்ப வெப்ப சூழ்நிலை, மண்வளம் உள்ளது. எனவே இலவ மரங்களை வளர்க்க விவசாயிகள் ஆர்வம் காட்டி வருகின்றனர்.

கடந்த ஆண்டு பருவமழை பரவலாக பெய்ததால் இலவமரங்களில் பூக்கள் பூத்தன. தற்போது இலவ மரங்களில் காய்கள் கொத்துக் கொத்தாய் காய்த்து குலுங்குகின்றன. விரைவில் அறுவடை பணிகள் தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இலவங்காய் அமோகமாக விளைச்சல் அடைந்துள்ளதால் விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

இதுகுறித்து விவசாயிகள் கூறுகையில், ‘இலவங்காய் சீசன் ஏப்ரல், மே மாதங்களில் தொடங்கும். காய்த்துள்ள காய்கள் நெத்துகளாக மாற்றப்பட்டு இலவம் பஞ்சு பிரிக்கப்படும். இந்த பஞ்சு, மெத்தை, தலையணை தயாரிப்பதற்கு பயன்படுத்தப்படுகிறது. மேலும் கம்பம் பகுதியில் விளையக்கூடிய இலவங்காய் தரமானதாக உள்ளதால், இதனை கொள்முதல் செய்வதற்கு வெளி மாவட்ட வியாபாரிகள் ஆர்வம் காட்டுகின்றனர். கடந்த ஆண்டு பருவமழை கை கொடுத்ததால் தற்போது இலவங்காய் விளைச்சல் அடைந்துள்ளது. இதனால் இந்த ஆண்டு நல்ல விலை கிடைக்கும்’ என்றனர். 

Next Story