தொழிலாளி கொலை வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை - மாவட்ட கோர்ட்டு தீர்ப்பு
திண்டுக்கல்லில் கூலித்தொழிலாளியை கொலை செய்த வழக்கில் 2 பேருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
திண்டுக்கல்,
திண்டுக்கல் குடைப்பாறைப்பட்டியை சேர்ந்த சீனிவாசன் மகன் சந்துரு (வயது 22). கூலித்தொழிலாளி. இவருக்கும், அதே பகுதியை சேர்ந்த சுரேஷ் (32), உறவினர் சின்னமுத்து (30) மற்றும் 17 வயது உடைய சிறுவன் ஆகியோருக்கும் இடையே முன்விரோதம் இருந்தது. இந்த நிலையில் கடந்த 11.6.2011 அன்று இரவு சந்துரு, குடைப்பாறைப்பட்டி ரேஷன்கடை அருகே நின்று கொண்டிருந்தார்.
அப்போது அவருக்கும், சுரேஷ் உள்ளிட்ட 3 பேருக்கும் இடையே மீண்டும் தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரம் அடைந்த 3 பேரும் சேர்ந்து, சந்துருவை கத்தியால் சரமாரியாக குத்திவிட்டு தப்பி ஓடிவிட்டனர். இதில் ரத்த வெள்ளத்தில் கீழே சாய்ந்த சந்துரு பரிதாபமாக இறந்தார். இதுகுறித்து திண்டுக்கல் தெற்கு போலீசார் வழக்குப்பதிவு செய்து, சுரேஷ் உள்பட 3 பேரையும் கைது செய்தனர்.
அதில் 17 வயது உடைய சிறுவன் மீதான வழக்கு, இளம்சிறார் நீதிமன்றத்துக்கு மாற்றப்பட்டது. அதேநேரம் சுரேஷ், சின்னமுத்து ஆகியோர் மீதான கொலை வழக்கு விசாரணை, திண்டுக்கல் மாவட்ட கோர்ட்டில் நடைபெற்றது. இதில் அரசு தரப்பு சாட்சிகளாக மொத்தம் 24 பேரிடம் விசாரணை நடத்தப்பட்டது.
இதற்கிடையே அந்த வழக் கின் விசாரணை நிறைவுபெற்றதை தொடர்ந்து, நீதிபதி ஜமுனா நேற்று தீர்ப்பளித்தார். அதில் குற்றம்சாட்டப்பட்ட சுரேஷ், சின்னமுத்து ஆகியோருக்கு ஆயுள் தண்டனை விதித்தார். மேலும் 2 பேருக்கும் தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து உத்தரவிட்டார்.
Related Tags :
Next Story