கவர்ச்சிகரமான திட்டத்தை கூறி ஏமாற்றியதாக புகார்: எல்பின் நிறுவனத்தை சேர்ந்த மேலும் ஒரு நிர்வாகி கைது


கவர்ச்சிகரமான திட்டத்தை கூறி ஏமாற்றியதாக புகார்: எல்பின் நிறுவனத்தை சேர்ந்த மேலும் ஒரு நிர்வாகி கைது
x
தினத்தந்தி 27 Feb 2020 4:00 AM IST (Updated: 27 Feb 2020 1:01 AM IST)
t-max-icont-min-icon

கவர்ச்சிகரமான திட்டத்தை கூறி ஏமாற்றியதாக வந்த புகாரின் பேரில் எல்பின் நிறுவனத்தை சேர்ந்த மேலும் ஒரு நிர்வாகியை போலீசார் கைது செய்தனர்.

தஞ்சாவூர்,

தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த பொதுமக்களின் வாட்ஸ்-அப்பில் திருச்சியை தலைமையிடமாக கொண்டு இயங்கி வரும் எல்பின் ஈ-காம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தால் தஞ்சையில் ஒரு நிகழ்ச்சி நடைபெறும் என கூறப்பட்டு இருந்தது. அதில் இந்த நிகழ்ச்சியில் அதிக அளவில் கலந்து கொள்வதோடு, அதிக வருமானமும் ஈட்டவும் முடியும் என கூறப்பட்டு இருந்தது.

இதனைப்பார்த்த பட்டுக்கோட்டையை சேர்ந்த ஒருவர், நிகழ்ச்சி நடைபெறும் அரங்கிற்கு சென்று அங்கிருந்த ஒருங்கிணைப்பாளரை அணுகி அது குறித்து கேட்டறிந்தார். அப்போது அவர், ரூ.12 ஆயிரம் கட்ட வேண்டும். அத்துடன் இதில் மேலும் 2 நபர்களை சேர்க்க வேண்டும். அதற்கு ஈடாக வீட்டு உபயோகப்பொருட்கள், மளிகை பொருட்கள், துணிமணிகள், சுற்றுலா ஏற்பாடுகள், வீட்டுமனை இவற்றில் ஏதாவது ஒன்று வழங்கப்படும் என கூறி உள்ளார்.

போலீசில் புகார்

அதன்படி அவர் ரூ.12 ஆயிரம் பணம் கட்டினார். ஆனால் பணத்தை பெற்றுக்கொண்டதற்கான ரசீது கொடுக்கப்படவில்லை. பணத்தை திருப்பி கேட்டதற்கு கொடுக்காமல் தகாத வார்த்தைகளால் திட்டி ஒருங்கிணைப்பாளர் கொலை மிரட்டல் விடுத்துள்ளார்.

இது தொடர்பாக தஞ்சை மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் கொடுத்த புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து எல்பின் ஈ-காம் பிரைவேட் லிமிடெட் நிறுவனத்தின் தஞ்சை மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரசன்ன வெங்கடேசனை கடந்த 8-ந் தேதி கைது செய்தனர்.

மேலும் ஒரு நிர்வாகி கைது

இந்த வழக்கில் தலைமறைவாக இருந்தவர்களை போலீசார் தேடி வந்தனர். இந்த நிலையில் மற்றொரு ஒருங்கிணைப்பாளரான தஞ்சை அருளானந்த நகரை சேர்ந்த கிங்ஸ்லீ(வயது42) என்பவர், வீட்டிற்கு வந்து இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில் நேற்று முன்தினம் இரவு போலீசார் விரைந்து சென்று கிங்ஸ்லீயை கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சத்யபிரியாவை போலீசார் தேடி வருகின்றனர்.

Next Story