விருத்தாசலம் அருகே பரபரப்பு, ஓய்வுபெற 2 நாட்களே இருந்த நிலையில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது - இடைத்தரகரும் சிக்கினார்


விருத்தாசலம் அருகே பரபரப்பு, ஓய்வுபெற 2 நாட்களே இருந்த நிலையில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய பெண் அதிகாரி கைது - இடைத்தரகரும் சிக்கினார்
x
தினத்தந்தி 27 Feb 2020 4:00 AM IST (Updated: 27 Feb 2020 1:38 AM IST)
t-max-icont-min-icon

விருத்தாசலத்தில் ஓய்வுபெற 2 நாட்களே இருந்த நிலையில் ரூ.3 ஆயிரம் லஞ்சம் வாங்கிய சமூக நலத்துறை பெண் அதிகாரியையும், அவருக்கு உடந்தையாக செயல்பட்ட இடைத்தரகரையும் லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர்.

விருத்தாசலம்,

அரியலூர் மாவட்டம் ஜெயங்கொண்டத்தை சேர்ந்தவர் கோவிந்தராஜ் (வயது 55). தற்போது கடலூர் மாவட்டம் விருத்தாசலம் அண்ணா நகரில் வசித்து வரும் இவர், பழைய இரும்பு பொருட்களை வாங்கி விற்கும் தொழில் செய்து வருகிறார். இவருக்கு இரண்டு மகள்கள் மற்றும் ஒரு மகன் உள்ளனர். இவருடைய மூத்த மகள் தமிழரசி என்பவருக்கு கடந்த 9-ந்தேதி திருமணம் நடந்தது. இந்நிலையில் அவரது மகளுக்கு, தமிழக அரசின் தாலிக்கு தங்கம் வழங்கும் திட்டத்தில் பயனடைவதற்காக விருத்தாசலம் ஊராட்சி ஒன்றிய அலுவலகத்தில் உள்ள சமூக நலத்துறை விரிவாக்க அலுவலர் அலுவலகத்தில் விண்ணப்பம் கொடுத்தார்.

விண்ணப்பத்தை பெற்றுக் கொண்ட சமூகநல விரிவாக்க அதிகாரி ஜெயபிரபா, கோவிந்தராஜியிடம் ரூ.4000 லஞ்சம் தருமாறு கேட்டுள்ளார். ஆனால் அவ்வளவு பணம் தரமுடியாது என அவர் தெரிவித்ததால், 200 ரூபாய் குறைத்துக் கொண்டு, ரூ.3800 தருமாறு கேட்டுள்ளார். இதையடுத்து வேறு வழியின்றி பணத்தை தருவதாக ஒப்புக்கொண்ட கோவிந்தராஜ், 800 ரூபாயை முன்பணமாக ஜெயபிரபாவிடம் கொடுத்துள்ளார். ஆனால் மீதி பணம் தராததால் அவரிடம் ஜெயபிரபா பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். இதுகுறித்து கோவிந்தராஜ் கடலூர் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசில் புகார் செய்தார்.

இதையடுத்து லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார், ரசாயனம் தடவிய ரூபாய் நோட்டுகளை கோவிந்தராஜியிடம் கொடுத்து அனுப்பியுள்ளனர். அதன்படி ரூ.3 ஆயிரத்தை எடுத்துக்கொண்டு, ஒன்றிய அலுவலகம் சென்ற அவர் விருத்தாசலம் பூதாமூரை சேர்ந்த கார்த்திக் என்ற இடைத்தரகர் மூலம் சமூக நலத்துறை விரிவாக்க அதிகாரி ஜெயபிரபாவிடம் பணத்தை கொடுத்தார்.

அந்த பணத்தை அவர் வாங்கிய போது, அங்கு மாறு வேடத்தில் மறைந்திருந்த லஞ்ச ஒழிப்பு போலீசார், ஜெயபிரபாவை கையும் களவுமாக மடக்கிப் பிடித்தனர். மேலும் அவருக்கு உடந்தையாக இருந்த இடைத்தரகர் கார்த்திக்கையும் கைது செய்தனர். ஜெயபிரபா வருகிற 29-ந்தேதியுடன் ஓய்வு பெற இருந்த நிலையில், தற்போது லஞ்ச வழக்கில் சிக்கி உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கதாகும். இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

Next Story