அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுமா? எடப்பாடி பழனிசாமி பதில்


அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுமா? எடப்பாடி பழனிசாமி பதில்
x
தினத்தந்தி 27 Feb 2020 6:00 AM IST (Updated: 27 Feb 2020 1:58 AM IST)
t-max-icont-min-icon

அ.தி.மு.க. கூட்டணியில் உள்ள தே.மு.தி.க.வுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவி வழங்கப்படுமா? என்பதற்கு முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி பதில் அளித்துள்ளார்.

திருச்சி,

ஏற்கனவே கொள்ளிடம் கதவணைகள் வலுவிழந்து உடைந்த காரணத்தினால், அதற்கு மாற்றாக புதிய கதவணைகள் கட்டப்படும் என்று அறிவிக்கப்பட்டு சுமார் ரூ.387.60 கோடி மதிப்பீட்டில் இந்தத் திட்டம் தொடங்கப்பட்டு, பணிகள் துரிதமாக நடைபெற்று வருகிறது. இதுவரை 35 சதவீத பணிகள் நிறைவு பெற்றிருக்கின்றன. எஞ்சிய பணிகள் 2021-ம் ஆண்டு ஜனவரி இறுதிக்குள் முடிக்கப்பட்டு பயன்பாட்டிற்கு கொண்டுவர திட்டமிடப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 1,650 மீட்டர் நீளமுள்ள அடித்தள சுவற்றில் 711 மீட்டர் நீளமுள்ள அடித்தள சுவர் முடிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 1,532 மீட்டர் நீளமுள்ள குறுக்கு வெட்டு சுவரில், 500 மீட்டர் நீளமுள்ள குறுக்கு வெட்டு சுவர் முடிக்கப்பட்டுள்ளது. மொத்தமுள்ள 7,800 எண்ணிக்கையிலான கான்கிரீட் பிளாக்குகளில், 1,489 எண்ணிக்கையிலான கான்கிரீட் பிளாக்குகள் முடிக்கப்பட்டுள்ளன.

45 மதகு கதவுகள் செய்து முடிக்கப்பட்டுள்ளன. இப்பணியானது விரைந்து மேற்கொள்ளப்பட்டு வருகிறது. இந்த பணிகளை விரைந்து முடிப்பதற்கு இரவு, பகல் பாராமல் பணியாளர்கள் பணியாற்றிக்கொண்டிருக்கிறார்கள். 2021-ம் ஆண்டு ஜனவரி இறுதிக்குள் பணிகள் அனைத்தும் முடிக்கப்பட்டு மக்களுடைய பயன்பாட்டிற்கு கொண்டு வருவதற்கு திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

அதனைத்தொடர்ந்து நிருபர்கள் கேட்ட கேள்விகளும், அதற்கு எடப்பாடி பழனிசாமி அளித்த பதில்களும் வருமாறு:-

சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்புக்கு எதிரானது

கேள்வி:- மேட்டூரில் தண்ணீர் முழுவதுமாக இருப்பதினால் ஜூன் மாதம் இயற்கையாகவே திறந்துவிட வாய்ப்பிருப்பதினால், பணிகள் ஏதும் பாதிக்கப்படுமா?.

பதில்:- ஜூன் மாதம் டெல்டாவிற்கு தான் திறந்துவிடுகின்றோம். அதனால் இங்கே பாதிக்க வாய்ப்பு இல்லை. ஸ்டீல் பைப் அடித்திருக்கிறோம், எந்தவித பாதிப்பும் இல்லாமல் இந்த பணிகள் துரிதமாக நடைபெறுவதற்கு அனைத்து முதற்கட்ட பணிகளும் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

கேள்வி:- பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் அமைத்ததற்கு விவசாயிகள் 7-ந்தேதி உங்களுக்கு பாராட்டு விழா வைத்துள்ளார்கள். ஆனால், அவர்களுக்கு ஒரு அச்சத்தை ஏற்படுத்தும் விதத்தில், நேற்று காவிரி மேலாண்மை ஆணையத்தில் மீண்டும் மேகதாது அணை பிரச்சினையை கர்நாடகா எழுப்பியிருக்கிறது?.

பதில்:- கர்நாடகா இப்பொழுதா எழுப்புகின்றார்கள்?. ஆரம்பத்தில் இருந்தே எழுப்பிக் கொண்டிருக்கின்றார்கள். இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டு வழக்கு நிலுவையில் இருக்கின்றது. ஏற்கனவே, சுப்ரீம் கோர்ட்டில் காவிரி நதிநீர் இறுதித்தீர்ப்பில் நமக்கு வழங்கப்படும் நீரை தடுக்கவோ, திருப்பி அனுப்பவோ கூடாதென்று தெளிவாக குறிப்பிடப்பட்டிருக்கிறது. அனைத்து பத்திரிகை, ஊடகங்களிலும் வெளியிட்டிருக்கின்றீர்கள். அவர்கள் வேண்டுமென்றே இப்படிப்பட்ட ஒரு செயலில் ஈடுபடுகின்றார்கள், இது தீர்ப்பிற்கு எதிரானது.

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம்

கேள்வி:- மத்திய அரசின் ஆதரவு இருப்பதினால்தானே கர்நாடகா இந்த பிரச்சினையை தொடர்ந்து எழுப்பிக்கொண்டிருக்கிறது?.

பதில்:- நாம் யாரையும் குற்றம்சாட்டவில்லை. நான் ஏற்கனவே தெரிவித்ததை போல சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பில் யாரும் தலையிட முடியாது.

கேள்வி:- சேலத்தில் நீங்கள் பேசும்பொழுது, திருச்சி மற்றும் அரியலூர் மாவட்டங்கள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் இணைக்கப்படும் என்று சொல்லியிருந்தீர்கள்?.

பதில்:- மீத்தேன் எடுக்கக்கூடிய பகுதிகள் என்று ஆய்வு செய்து அதிகாரிகளிடம் கேட்டபொழுது, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம் மாவட்டங்கள், கடலூர் மாவட்டத்தின் ஒரு பகுதி, புதுக்கோட்டை மாவட்டத்தின் ஒரு பகுதி ஆகியவைகள் மீத்தேன் இருக்கின்ற பகுதிகள் என்றதனால், அவைகள் மட்டும் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டன.

கேள்வி:- ஏற்கனவே இருக்கின்ற திட்டங்கள் செயல்படுத்தப்படுமா என்கிற அச்சம் இருக்கிறதே?

பதில்:- ஏற்கனவே இருக்கின்ற திட்டங்களை நாங்கள் நிறுத்தவில்லை. நாங்கள் அறிவிப்பிலும், அரசிதழிலும் தெரியப்படுத்தியிருக்கிறோம், பத்திரிகைகளிலும் நீங்கள் வெளியிட்டிருக்கின்றீர்கள். இன்னும் அந்த சந்தேகத்தை எழுப்ப வேண்டிய அவசியம் இல்லை.

திருச்சி மற்றொரு தலைநகரமா?

கேள்வி:- மத்திய அரசு தானே இதைச்செய்ய வேண்டும்?

பதில்:- மத்திய அரசு செய்ய வேண்டும் என்று கிடையாது. வேளாண் துறையில் மாநில அரசுக்கு இருக்கின்ற அதிகாரத்தைப் பயன்படுத்தி நாங்கள் தெளிவாகச் சொல்லியிருக்கின்றோம். மத்திய அரசிடமும் இதுகுறித்து குறிப்பிட்டு அவர்களும் வேளாண் துறை சம்பந்தமாக மாநில அரசு எடுக்கின்ற முடிவு மாநிலத்தின் அதிகாரத்திற்கு உட்பட்டது என்று தெளிவுபடுத்தியுள்ளனர்.

கேள்வி:- திருச்சியை இரண்டாவது தலைநகரமாக்க வேண்டும் என்று நீண்டகாலமாக ஒரு கோரிக்கை இருக்கின்றதே?

பதில்:- அப்படிப்பட்ட எண்ணம் இதுவரை அரசுக்கு இல்லை.

கேள்வி:- பாசனப் பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் சேர்க்க வேண்டும், எதிர்காலத்தில் ஏதும் திட்டம் வந்தால் சிக்கலாகி விடும் என்று விவசாயிகள் கோரிக்கைகள் வைக்கின்றனரே?.

பதில்:- அதுபோல இதுவரைக்கும் என்னிடம் கோரிக்கை வைக்கவில்லை. திருச்சி, அரியலூர், கரூர் பகுதிகளில் அதிக தொழிற்சாலைகள் இருப்பதினால், அவைகள் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவிக்கப்பட்டால் இங்குள்ள தொழிற்சாலைகள் எதையும் செயல்படுத்த முடியாது. ஆகவே, அரசு ஆய்வு செய்து, ஆய்வின்படி நான் குறிப்பிட்ட பகுதிகளையெல்லாம் பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவிக்கப்பட்டுள்ளது.

அரசு பரிசீலனை

கேள்வி:- வரவிருக்கும் மாநிலங்களவைத் தேர்தலுக்கான 3 வேட்பாளர்கள் தேர்ந்தெடுப்பது பற்றி?

பதில்:- அதை அ.தி.மு.க. தலைமைக்கழகம் கூடி, தலைமைக்கழகத்தின் மூத்த நிர்வாகிகள் தேர்ந்தெடுப்பார்கள். இன்றைக்குத்தான் இந்திய தேர்தல் ஆணையம் அறிவிப்பு வெளியிட்டுள்ளது, இனிதான் முடிவு செய்வோம்.

கேள்வி:- பிரேமலதா விஜயகாந்த் கூட்டணி தர்மத்தை மதித்து தங்களுக்கு மாநிலங்களவை உறுப்பினர் பதவியை அ.தி.மு.க. வழங்க வேண்டும் என்று கோரிக்கை விடுத்து இருக்கிறாரே?.

பதில்:- கேட்பதற்கு எல்லோருக்கும் உரிமை இருக்கிறது. ஆனால், அதை அ.தி.மு.க. தலைமைக்கழகம் தான் முடிவு செய்ய வேண்டும். அ.தி.மு.க.வில் பல மூத்த தலைவர்கள் இருக்கிறார்கள். அதையும் நாங்கள் பார்க்க வேண்டும். எல்லாமே தலைமைக்கழக நிர்வாகிகள் கூடி முடிவு செய்வார்கள்.

கேள்வி:- மீத்தேன், ஹைட்ரோ கார்பன் எதிர்ப்பு போராட்டத்தில் ஈடுபட்டதற்கான வழக்குகள்.....?

பதில்:- அது அரசின் பரிசீலனையில் இருக்கிறது.

கேள்வி:- பா.ஜ.க. கூட்டணி கட்சியாக இருக்கக்கூடிய பீகாரில் தேசிய குடிமக்கள் பதிவேடுக்கு எதிராக தீர்மானம் போட்டுள்ளனரே? அதுபோல் நம் மாநிலத்திலும் வாய்ப்பிருக்கிறதா?

பதில்:- அவையெல்லாம் அரசின் பரிசீலனையில் இருக்கிறது.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story