ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு: அண்ணன், 2 தம்பிகளுக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு


ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கு: அண்ணன், 2 தம்பிகளுக்கு ஆயுள் தண்டனை சேலம் கோர்ட்டு தீர்ப்பு
x
தினத்தந்தி 27 Feb 2020 12:30 AM GMT (Updated: 26 Feb 2020 8:38 PM GMT)

ரியல் எஸ்டேட் அதிபர் கொலை வழக்கில் அண்ணன், 2 தம்பிகளுக்கு ஆயுள் தண்டனை விதித்து சேலம் கோர்ட்டு தீர்ப்பளித்தது.

சேலம்,

சேலம் நரசோதிப்பட்டியில் உள்ள டவுன் பிளானிங் நகரை சேர்ந்தவர் செல்வராஜ் (வயது 40). ரியல் எஸ்டேட் அதிபர். இவருடைய வீட்டில் தர்மபுரி மாவட்டம் பாப்பிரெட்டிப்பட்டி அருகே உள்ள கோம்பூர் பகுதியை சேர்ந்த மாதேஸ்வரன்(30) என்பவர் குடும்பத்துடன் வாடகைக்கு வசித்து வந்தார். மாதேஸ்வரன், வாடகைக்கு குடியேறுவதற்கு முன்பு முன்பணமாக ரூ.15 ஆயிரம் செல்வராஜிடம் கொடுத்தார். இந்த நிலையில் திடீரென செல்வராஜ் மற்றும் மாதேஸ்வரன் இடையே தகராறு ஏற்பட்டது. இதனால் மாதேஸ்வரனை வீட்டை காலி செய்யுமாறு செல்வராஜ் கூறினார். அதைத்தொடர்ந்து அவரும் வீட்டை காலி செய்து வேறு இடத்துக்கு சென்று குடியேறினார். அதன்பின்னர் மாதேஸ்வரன் தான் முன்பணமாக கொடுத்த ரூ.15 ஆயிரத்தை செல்வராஜிடம் கேட்டு உள்ளார். ஆனால் முன்பணத்தை செல்வராஜ் கொடுக்காமல் இருந்துள்ளார்.

தகராறு

இந்த நிலையில் கடந்த 2013-ம் ஆண்டு டிசம்பர் மாதம் 22-ந் தேதி மாதேஸ்வரன், அவரது அண்ணன் பெருமாள் (37), தம்பி செல்வம் (42), தாயார் ஜெயமா (45), உறவினர் வைரி அம்மாள் (65), நரசோதிப்பட்டியை சேர்ந்த புரோக்கர் முருகேசன் (40) ஆகியோர் செல்வராஜ் வீட்டுக்கு வந்தனர். பின்னர் அவர்கள் அங்கு முன்பண தொகையை செல்வராஜிடம் திருப்பி கேட்டனர். இதையடுத்து மாதேஸ்வரன் தரப்பிற்கும், செல்வராஜ் தரப்பிற்கும் தகராறு ஏற்பட்டது. அப்போது மாதேஸ்வரன் உள்ளிட்டோர் இரும்பு கம்பியால் தாக்கியதில் செல்வராஜ் சம்பவ இடத்திலேயே இறந்தார்.

3 பேருக்கு ஆயுள்

இந்த கொலை குறித்து சூரமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து மாதேஸ்வரன் உள்பட 6 பேரை கைது செய்தனர். இந்த வழக்கு சேலம் 2-வது கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கின் விசாரணை முடிந்து நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

இதில், குற்றவாளிகளான அண்ணன், தம்பிகளான மாதேஸ்வரன், பெருமாள், செல்வம் ஆகியோருக்கு ஆயுள் தண்டனையும், ரூ.2 ஆயிரம் அபராதமும் விதித்து நீதிபதி ராஜேந்திரன் தீர்ப்பு கூறினார். மேலும் இந்த வழக்கில் இருந்து ஜெயமா, வைரி அம்மாள், முருகேசன் ஆகியோர் விடுவிக்கப்பட்டனர்.

Next Story