முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா விவசாயிகள் சார்பில் திருவாரூரில் வருகிற 7-ந் தேதி நடக்கிறது


முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு பாராட்டு விழா விவசாயிகள் சார்பில் திருவாரூரில் வருகிற 7-ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 27 Feb 2020 12:30 AM GMT (Updated: 26 Feb 2020 8:55 PM GMT)

காவிரி டெல்டா பகுதிகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்ததற்காக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு விவசாயிகள் சார்பில் திருவாரூரில் வருகிற 7-ந் தேதி பாராட்டு விழா நடைபெற உள்ளது.

திருச்சி,

முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று காலை சேலத்தில் இருந்து கார் மூலம் தஞ்சை செல்லும் வழியில் திருச்சி வந்தார். திருச்சி டி.வி.எஸ். டோல்கேட் அருகே உள்ள சுற்றுலா மாளிகையில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். அப்போது காவிரி டெல்டா பாசன விவசாயிகள் சங்கத்தின் பொது செயலாளர் மன்னார்குடி ரெங்கநாதன், தலைவர் ராஜாராம், நிர்வாகிகள் சத்யநாராயணன், வரதராஜன், புலியூர் நாகராஜன் மற்றும் விவசாயிகள் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமியை சந்தித்து, காவிரி டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலமாக அறிவித்து, மசோதா நிறைவேற்றியதற்கு நன்றி தெரிவித்தனர். மேலும் விவசாயிகள் சார்பில் வருகிற 7-ந் தேதி அவருக்கு பாராட்டு விழா நடத்த இருப்பது குறித்தும் கூறினர். அதன்பின் வெளியே வந்த மன்னார்குடி ரெங்கநாதன் நிருபர்களுக்கு பேட்டியளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-

காவிரி நடுவர் மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியானதற்காக அப்போது முதல்-அமைச்சராக இருந்த ஜெயலலிதாவுக்கு கடந்த 2013-ம் ஆண்டு மார்ச் மாதம் 9-ந் தேதி தஞ்சாவூரில் பாராட்டு விழா நடத்தினோம். ஹைட்ரோ கார்பன் என்பது பெரிய அச்சத்தை ஏற்படுத்தி காவிரி அழிந்து விடுமோ? என்ற கவலை எங்களுக்கு இருந்தது. ஆனால் காவிரி நிரந்தரமாக இருக்கும் என்று டெல்டா பகுதியை பாதுகாக்கப்பட்ட மண்டலமாக அறிவித்த முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு வருகிற 7-ந் தேதி திருவாரூரில் அம்மா சதுக்கத்தில் பாராட்டு விழா நடத்த உள்ளோம். இதில் அனைவரும் கலந்து கொண்டு அவரை பாராட்டி நன்றியை தெரிவிக்க வேண்டும் என கேட்டுக்கொள்கிறேன்.

எடப்பாடி பழனிசாமிக்கு பட்டம்

விவசாயிகள் சார்பில் ஜெயலலிதாவுக்கு ‘பொன்னியின் செல்வி’ என்கிற பட்டம் கொடுக்கப்பட்டது. அதேபோல எடப்பாடி பழனிசாமிக்கும் என்ன மாதிரி பட்டம் கொடுக்கிறது என யோசித்து வருகிறோம். அதனை வருகிற 7-ந் தேதி அறிவிப்போம். பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலம் என அறிவிக்கப்படும்போது சட்டரீதியாக பல சிக்கல் உள்ளது. ஆனால் அறிவித்த உடனே சட்டமன்றத்தில் மசோதா நிறைவேற்றப்பட்டுள்ளது. இதனை தீவிரமாக திட்டம் தீட்டி செயல் திட்டம் நிறைவேற்றி உள்ளனர். எடப்பாடி பழனிசாமி ஒரு சிறந்த செயல் வீரர்.

காவிரியை யாரும் அரசியல் ஆக்க வேண்டாம். இது எல்லாருக்கும் பொதுவானது. ஹைட்ரோ கார்பன் திட்டம் வரக்கூடாது என கோர்ட்டில் தடை வாங்கப்பட்டுள்ளது. அந்த அடிப்படையில் செயல் திட்டத்தை எடப்பாடி பழனிசாமி சரியாக செய்திருக்கிறார்.

காவிரி டெல்டா

பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலத்தில் எந்தெந்த பகுதி எனவும், சட்ட முன்வடிவில் தெளிவாக ஊர் விவரமும் குறிப்பிடப்பட்டுள்ளது. இதில் தவறு நடக்கவில்லை என்று சொல்ல முடியும். காவிரி டெல்டா என்பது ஒரு நிரந்தர பகுதி என்பதை அனைவரும் உணருவார்கள். தொடர்ந்து நாட்டுக்கும், ஊருக்கும் உணவளிக்கும் என்ற உத்தரவாதத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி கொடுத்திருக்கிறார். அதற்காக அவருக்கு பாராட்டை தெரிவிக்கிறோம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story