மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்கு தேர்வு ஒரு மாதத்துக்குள் நடத்தப்படும் அமைச்சர் தங்கமணி பேச்சு


மின்வாரியத்தில் கேங்மேன் பணிக்கு தேர்வு ஒரு மாதத்துக்குள் நடத்தப்படும் அமைச்சர் தங்கமணி பேச்சு
x
தினத்தந்தி 26 Feb 2020 11:30 PM GMT (Updated: 26 Feb 2020 9:33 PM GMT)

மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களுக்கான தேர்வு ஒரு மாதத்துக்குள் நடத்தப்படும் என அமைச்சர் தங்கமணி கூறினார்.

பள்ளிபாளையம்,

தமிழக அரசின் கால்நடை பராமரிப்புத்துறை சார்பில் பெண்களுக்கு விலையில்லா கறவை பசுக்கள், வெள்ளாடு, கோழிக்குஞ்சுகள் அடங்கிய வழங்கும் விழா பள்ளிபாளையம் அருகே புதுப்பாளையத்தில் நடைபெற்றது. திருச்செங்கோடு உதவி கலெக்டர் மணிராஜ் தலைமை தாங்கினார். கால்நடை இணை இயக்குனர் பொன்னுவேல் வரவேற்றார். பள்ளிபாளையம் ஒன்றியக்குழு தலைவர் தனலட்சுமி செந்தில் முன்னிலை வகித்தார். விழாவில் தமிழக மின்சாரம் மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி கலந்து கொண்டு 120 பெண்களுக்கு ரூ.47 லட்சம் மதிப்பில் கறவை பசுக்களும், 145 பயனாளிகளுக்கு ரூ.19 லட்சத்தில் வெள்ளாடுகளும், ரூ.17 லட்சத்தில் 700 பயனாளிகளுக்கு கோழிக்குஞ்சு அடங்கிய பெட்டி களையும் வழங்கினார். பின்னர் அமைச்சர் பேசும்போது கூறியதாவது:-பெண்களின் வருவாயை பெருக்கும் வகையில் தற்போது விலையில்லா ஆடுகள், பசுக்கள், கோழிக்குஞ்சுகள் வழங்கப்படுகிறது. இதன்மூலம் பெண்கள் வருவாய் ஈட்டி குடும்பத்தை பராமரிக்க முடியும். பொது சுத்திகரிப்பு நிலையம் அமைக்க மறைந்த முதல்-அமைச்சர் ஜெயலலிதா ரூ.700 கோடி அறிவித்தார். இதில் நாமக்கல் மாவட்டத்துக்கு ரூ.400 கோடி ஒதுக்கப்பட்டது. இதையடுத்து இடம் ஒதுக்குவதில் சிக்கல் ஏற்பட்டதால் பணியை விரைவாக முடிக்க முடியவில்லை.

சுத்திகரிப்பு நிலையம்

தற்போது தட்டாங்குட்டை பகுதியில் இடம் ஒதுக்கீடு செய்து வழங்கப்பட்டுள்ளது. மத்திய அரசின் அனுமதி கிடைத்தவுடன் சுத்திகரிப்பு நிலையம் அமைக்கப்படும். மின்வாரியத்தில் கேங்மேன் பணியிடங்களுக்கான தேர்வு ஒரு மாதத்துக்குள் நடத்தப்படும். இவ்வாறு அவர் கூறினார்.இதில் மாவட்ட ஊராட்சிக்குழு உறுப்பினர் செந்தில், பள்ளிபாளையம் நகராட்சி முன்னாள் தலைவர் வெள்ளிங்கிரி, டி.சி.எம்.எஸ். தலைவர் திருமூர்த்தி உள்பட பலர் கலந்து கொண்டனர்.

ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி பள்ளிபாளையத்தில் அமைச்சர் தங்கமணி கட்சி கொடியேற்றி இனிப்பு வழங்கினார். மேலும் ஜெயலலிதா உருவப்படத்துக்கு மாலை அணிவித்து மலர்தூவி மரியாதை செலுத்தினார். பள்ளிபாளையம் அரசு ஆஸ்பத்திரியில் நோயாளிகளுக்கு பால், ரொட்டி வழங்கப்பட்டது.

Next Story