டெல்லி சம்பவத்தை கண்டித்து ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட த.மு.மு.க.வினர் 100 பேர் கைது
டெல்லி சம்பவத்தை கண்டித்து கோவை ரெயில் நிலையத்தை முற்றுகையிட்ட த.மு.மு.க.வினர் 100 பேர் கைது செய்யப்பட்டனர்.
கோவை,
டெல்லியில் நடந்த வன்முறை சம்பவத்தை கண்டித்து தமிழ்நாடு முஸ்லிம் முன்னேற்ற கழகம் (த.மு.மு.க.) சார்பில் கோவை ரெயில் நிலையத்தை முற்றுகையிடும் போராட்டம் நடந்தது. போராட்டத்துக்கு கோவை வடக்கு மாவட்ட தலைவர் அகமது கபீர் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் முஜிபுர் ரகுமான், மாநில செயலாளர் சாதிக் அலி, மாநில தொண்டர் அணி செயலாளர் சர்புதீன் உள்ளிட்டோர் முன்னிலை வகித்தனர். முற்றுகை போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் கோவை ரெயில் நிலையத்துக்குள் நுழைந்து ரெயில் மறியலுக்கு முயன்றனர். அங்கு பாதுகாப்புக்கு நின்று இருந்த போலீசார் அவர்களை தடுத்து நிறுத்தினர்.
அப்போது போராட்டக்காரர்களுக்கும், போலீசாருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இதையடுத்து ரெயில்நிலையத்தை முற்றுகையிட்ட 100 பேர் கைது செய்யப்பட்டு, தனியார் மண்டபத்துக்கு அழைத்து செல்லப்பட்டனர். பின்னர் இரவு விடுவிக்கப்பட்டனர். இந்த போராட்டம் காரணமாக அங்கு சிறிது நேரம் போக்குவரத்து பாதிப்பு ஏற்பட்டது.இதேபோல் எஸ்.டி.பி.ஐ. கட்சி சார்பில் கோவை கரும்புக்கடை பகுதியில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. ஆர்ப்பாட்டத்துக்கு கட்சியின் மாவட்ட துணை தலைவர் அன்சர் செரீப் தலைமை தாங்கினார். பொதுச்செயலாளர் முகமது இஷாக், மண்டல செயலாளர் முஸ்தபா ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் திரளானவர்கள் கலந்துகொண்டு கண்டன கோஷங்களை எழுப்பினர்.
Related Tags :
Next Story