எருதுகளுடன் சாதனை படைத்தவர்: சீனிவாச கவுடாவுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க பயிற்சி கம்பளா போட்டி அமைப்பாளர் தகவல்


எருதுகளுடன் சாதனை படைத்தவர்:   சீனிவாச கவுடாவுக்கு ஒலிம்பிக்கில் பங்கேற்க பயிற்சி   கம்பளா போட்டி அமைப்பாளர் தகவல்
x
தினத்தந்தி 27 Feb 2020 4:47 AM IST (Updated: 27 Feb 2020 4:47 AM IST)
t-max-icont-min-icon

எருதுகளுடன் சாதனை படைத்த சீனிவாச கவுடா ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சிபெறுவார்என்று கம்பளா போட்டி அமைப்பாளர் தெரிவித்தார்.

தட்சிண கன்னடா, 

தட்சிணகன்னடா மாவட்டம் மூடபித்ரியை சேர்ந்தவர் சீனிவாச கவுடா. 28 வயது வாலிபரான இவர் கட்டிட தொழிலாளி ஆவார். சேற்று வயலில் எருதுகளை ஓட்டிச் செல்லும் கம்பளா போட்டி வீரரான சீனிவாச கவுடா தற்போது நாடு போற்றும் சாதனை வீரராக திகழ்கிறார்.

இவர் சமீபத்தில் மூடபித்ரி அருகே ஐகாலாவில் நடந்த கம்பளா போட்டியில் கலந்துகொண்டு, 142.5 மீட்டர் தூரத்தை ஏர் கலப்பையில் பூட்டப்பட்ட எருதுகளை ஓட்டியப்படி 16.52 வினாடிகளில் கடந்து சாதனை நிகழ்த்தியுள்ளார். இந்த போட்டியில் சீனிவாச கவுடா ஓடிய வேகத்தை கணக்கிட்டால் இவர் 100 மீட்டர் தூரத்தை 9.55 வினாடிகளில் கடந்து சரித்திரம் படைத்துள்ளார். அதாவது ஒலிம்பிக் போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் ஜமைக்காவின் உசேன் போல்ட் 100 மீட்டர் தூரத்தை 9.58 வினாடிகளில் கடந்து சாதனை படைத்திருந்தார். அவரது சாதனையை சீனிவாச கவுடா முறியடித்திருப்பதாக சொல்லப் படுகிறது.

கர்நாடக உசேன் போல்ட்

இதனால் சீனிவாச கவுடாவை கர்நாடகத்தின் உசேன் போல்ட் என்று கர்நாடக மக்கள் மட்டுமின்றி நாடுமுழுவதும் மக்கள் கொண்டாடி வருகிறார்கள். சீனிவாச கவுடாவின் சாதனையை பாராட்டும் வகையில், டுவிட்டர், பேஸ்புக் உள்ளிட்ட சமூகவலைத்தளங்களில் நெட்டிசன்கள் பாராட்டுகளை குவித்தனர்.

டுவிட்டர் பதிவு மூலம் சீனிவாச கவுடாவின் சாதனையை அறிந்த மத்திய விளையாட்டு துறை மந்திரி கிரண் ரிஜிஜு, சீனிவாச கவுடாவை இந்தியாவின் சார்பில் ஒலிம்பிக் போட்டியில் ஓட்டப்பந்தயத்தில் பங்கேற்க பயிற்சி அளிக்கப்படும் என்று அறிவித்தார்.

ஒலிம்பிக் போட்டி களம் வேறு

ஆனால், நான் வெறுங்காலுடன் சேற்று வயலில் எருதுகளை ஓட்டிச் சென்று இத்தகையை சாதனையை படைத்துள்ளேன். நான் சாதனை படைத்த களம் வேறு. ஒலிம்பிக் போட்டி களம் ேவறு என்று கூறி தயக்கம்காட்டினார். மேலும் அவருக்கு தடகள வீரர்கள், பயிற்சியாளர்கள் பலரும் ஊக்கமளித்தனர். அத்துடன் ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்க பயிற்சிக்கு செல்லுமாறும் வேண்டுகோள் வைத்தனர்.

கம்பளா போட்டி பொதுவாக ஜனவரி முதல் மார்ச் மாதம் வரை நடைெபறும். உடுப்பி, தட்சிணகன்னடா, கார்வார், காசர்கோடு பகுதிகளில் இந்த போட்டி நடத்தப்படுகிறது. ஆண்டுக்கு சுமார் 50-க்கும் மேற்பட்ட கம்பளா போட்டி நடத்தப்பட்டு வருகிறது. அடுத்த மாதம் (மார்ச்) 7-ந்தேதி வரை கம்பளா போட்டிகள் நடக்கிறது. இதில் கலந்துகொள்ள சீனிவாச கவுடா முன்பதிவு செய்திருப்பதாகவும், இந்த போட்டிகள் முடிந்த பின்னர் அவர் ஒலிம்பிக் போட்டிக்கான பயிற்சிக்கு தயார் ஆவார் என்றும் சொல்லப்பட்டது.

ஒலிம்பிக் போட்டி பயிற்சிக்கு செல்வார்

இந்த நிலையில் கம்பளா போட்டி அமைப்பாளர் குணபால் கடம்பா நிருபர்களிடம் கூறியதாவது:-

கேரள மாநிலம் காசர்கோடு மாவட்டம் பைவாலிகே பகுதியில் நடந்த கம்பளா போட்டியில் சீனிவாச கவுடா கலந்துகொண்டார். அந்த சமயத்தில் அவரை இந்திய விளையாட்டு ஆணையத்தின் தென்னிந்திய இயக்குனர் அஜய் குமார் பீகல் சீனிவாச கவுடாவுடன் பேச்சுவார்த்தை நடத்தினார். உடன் தடகள பயிற்சியாளர் குரியன் பி. மேத்யூ, ஹரீஷ் ஆகியோர் இருந்தனர்.

அப்போது அஜய்குமார், ஒலிம்பிக் போட்டிக்கு தயாராகும் வகையில் பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்திற்கு பயிற்சிக்கு வரும்படி முறைப்படி அழைப்புவிடுத்தார். இதை சீனிவாசகவுடா ஏற்றுக்கொண்டு உள்ளார். தற்போது கம்பளா போட்டிகள் நடந்து வருகிறது. இந்த போட்டிகள் முடிந்த பிறகு சீனிவாச கவுடா தடகள போட்டி பயிற்சியில் பங்கேற்பார்.

தடகளம் பற்றி சீனிவாசகவுடாவுக்கு தெரியாது. இதனால் அவர் தயக்கம் காட்டுகிறார். அவருக்கு தடகள பயிற்சியாளர்கள் ஆரம்ப கட்ட பயிற்சியை மூடபித்ரியில் உள்ள சுவராஜ் மைதானம் மற்றும் மங்களூருவில் உள்ள மங்களா மைதானத்தில் வழங்க உள்ளனர். கம்பளா போட்டிகள் முடிந்து சிறிது ஓய்வுக்கு பிறகு ஏப்ரல் மாதம் சீனிவாச கவுடா பெங்களூருவில் உள்ள இந்திய விளையாட்டு ஆணைய பயிற்சி மையத்திற்கு பயிற்சி பெற செல்ல வாய்ப்பு உள்ளது.

இவ்வாறு அவர் கூறினார்.

39 பதக்கங்களை குவித்துள்ளார்

இதுகுறித்து கம்பளா அகாடமி பயிற்சியாளர் வசந்த் ஜோகி கூறுகையில், ஒலிம்பிக் போட்டியில் பங்கேற்கும் வகையில் சீனிவாச கவுடாவுக்கு தேசிய தடகள பயிற்சியாளர் பயிற்சி அளிப்பார் என்றார்.

கம்பளா போட்டியில் சாதனை நிகழ்த்தியுள்ள சீனிவாச கவுடா நடப்பு கம்பளா போட்டி தொடரில் 39 பதக்கங்களை குவித்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.

Next Story