திருச்செந்தூர் அருகே அரசு பஸ் விபத்து; டிரைவர் உள்பட 2 பேர் காயம்


திருச்செந்தூர் அருகே அரசு பஸ் விபத்து; டிரைவர் உள்பட 2 பேர் காயம்
x
தினத்தந்தி 28 Feb 2020 4:00 AM IST (Updated: 27 Feb 2020 7:43 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் அருகே அரசு பஸ் மரக்கிளையில் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் அருகே அரசு பஸ் மரக்கிளையில் மோதிய விபத்தில் டிரைவர் உள்பட 2 பேர் காயமடைந்தனர்.

அரசு பஸ் 

நெல்லையில் இருந்து திருச்செந்தூருக்கு நேற்று காலையில் அரசு பஸ் புறப்பட்டு சென்றது. அந்த பஸ்சை ஸ்ரீவைகுண்டத்தைச் சேர்ந்த துரை (வயது 37) ஓட்டிச் சென்றார். பஸ்சில் சுமார் 30 பயணிகள் பயணம் செய்தனர்.

திருச்செந்தூர் அருகே கோயில்விளையை கடந்து சென்றபோது, முன்னால் சென்ற வேனை பஸ் முந்தி செல்ல முயன்றது. அப்போது நிலைதடுமாறிய பஸ், சாலையின் வலதுபுறத்தில் உள்ள மரங்களின் கிளைகளில் மோதியவாறு சென்றது. இதில் பஸ்சின் முன்பக்க கண்ணாடி முழுவதும் நொறுங்கி விழுந்தது. இதில் டிரைவர் துரை காயமடைந்தார். உடனே டிரைவர் திடீரென்று ‘பிரேக்‘ பிடித்து பஸ்சை நிறுத்தினார்.

போலீசார் விசாரணை 

அப்போது பஸ்சின் முன்பக்கத்தில் தனி இருக்கையில் இருந்த பாளையங்கோட்டை சமாதானபுரத்தைச் சேர்ந்த ஜெயா (25) நிலைதடுமாறி சாலையில் தவறி விழுந்து காயமடைந்தார். இந்த விபத்தில் காயம் அடைந்த ஜெயா, டிரைவர் துரை ஆகிய 2 பேரையும் திருச்செந்தூர் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதித்து சிகிச்சை அளித்து வருகின்றனர். இதுகுறித்து திருச்செந்தூர் போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். அதிர்ஷ்டவசமாக சாலையோர மரத்தில் பஸ் மோதாததால் பெரும் விபத்து தவிர்க்கப்பட்டது.

Next Story