திருச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியல்
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக திருச்சியில் கல்லூரி மாணவ-மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
கே.கே.நகர்,
குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தி திருச்சி ஜமால்முகமது கல்லூரி அருகே கல்லூரி மாணவர்கள் கடந்த சில நாட்களாக ஆர்ப்பாட்டம் நடத்தி வருகிறார்கள். இந்தநிலையில் நேற்று பகல் 12 மணியளவில் கல்லூரி அருகே ஆர்ப்பாட்டம் நடந்தது. இதில் மாணவ-மாணவிகள் பலர் கலந்து கொண்டு, குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்ப பெற வலியுறுத்தியும், டெல்லியில் நடந்த கலவரத்தை கட்டுப்படுத்த தவறிய காவல்துறையை கண்டித்தும் கோஷங்களை எழுப்பினர். பின்னர் மாணவ, மாணவிகள் சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அங்கு போக்குவரத்து பாதிக்கப்பட்டது. போலீசார் போக்குவரத்தை ஒழுங்குபடுத்தும் பணியில் ஈடுபட்டனர். இதையடுத்து அங்கு பாதுகாப்புக்கு நின்ற போலீசார் மாணவர்களிடம் போராட்டத்தை கைவிட்டு கலைந்து செல்லும்படி அறிவுறுத்தினார்கள். ஆனால் மாணவர்களோ, கலைந்து செல்ல மறுத்து தொடர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் மாலை 4 மணிக்கு மேல் மாணவ, மாணவிகள் போராட்டத்தை கைவிட்டு கலைந்து சென்றனர்.
குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக தென்னூர் உழவர்சந்தை மைதானத்தில் கடந்த 17-ந் தேதி இரவு முதல் முஸ்லிம்கள் தொடர் காத்திருப்பு போராட்டத்தில் ஈடுபட்டு வருகிறார்கள். இதில் ஏராளமானோர் பங்கேற்றுள்ளனர். நேற்று 11-வது நாளாக அவர்களுடைய போராட்டம் நீடித்தது.
இந்தநிலையில் போராட்டம் நடைபெற்ற உழவர்சந்தை மைதானத்துக்கு காங்கிரஸ் கட்சியை சேர்ந்த திருநாவுக்கரசர் எம்.பி. வந்து ஆதரவு தெரிவித்துவிட்டு சென்றார். இதற்கிடையே குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவித்து திருச்சி ராமகிருஷ்ணா மேம்பாலம் பகுதியில் எஸ்.டி.பி.ஐ. கட்சியினர் சார்பில் நேற்று முன்தினம் அனுமதியின்றி ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது. இதுதொடர்பாக திருச்சி காந்திமார்க்கெட் போலீசார் அந்த கட்சியின் மாவட்ட தலைவர் முகமது ஹசன் உள்பட 350 பேர் மீது வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
Related Tags :
Next Story