கோட்டைமேடு பகுதியில் பரபரப்பு : மக்கள்தொகை கணக்கெடுக்க வந்ததாக கூறி 4 பேர் சிறைபிடிப்பு - போலீஸ் விசாரணைக்கு பிறகு விடுவிப்பு


கோட்டைமேடு பகுதியில் பரபரப்பு : மக்கள்தொகை கணக்கெடுக்க வந்ததாக கூறி 4 பேர் சிறைபிடிப்பு - போலீஸ் விசாரணைக்கு பிறகு விடுவிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2020 3:15 AM IST (Updated: 27 Feb 2020 11:26 PM IST)
t-max-icont-min-icon

கோவை கோட்டைமேடு பகுதியில் மக்கள்தொகை கணக்கெடுக்க வந்ததாக கூறி 4 பேர் சிறைபிடிக்கப்பட்டனர். அவர்கள், போலீஸ் விசாரணைக்கு பிறகு விடுவிக்கப்பட்டனர்.

கோவை,

மத்திய அரசு கொண்டு வந்துள்ள குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடிமக்கள் பதிவேடு, தேசிய மக்கள்தொகை கணக்கெடுப்பு ஆகியவற் றுக்கு எதிராக முஸ்லிம்கள் உள்பட பல்வேறு அமைப்பினர் போராட்டம் நடத்தி வருகிறார்கள்.

இந்த நிலையில் நேற்று காலையில் கோவை கோட்டைமேடு பகுதிக்கு 7 பேர் சென்றனர். அவர்கள். ஒவ்வொரு வீடு வீடாக சென்று குழந்தைகளுக்கான உணவு பொருட்கள் விற்க வந்ததாக கூறினர். அவர்கள், பொருட்கள் வாங்க விரும்பிய சில பெண்களிடம், குழந்தைகளுக்கு தடுப்பூசி போட்டப்பட்டு உள்ளதா? என்றும், ஆதார் கார்டு எண், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றையும் கேட்டதாக தெரிகிறது.

இதனால் சந்தேகம் அடைந்த பெண்கள் கொடுத்த தகவலின் பேரில் அந்த பகுதியில் ஏராளமானோர் திரண்டனர். இதை பார்த்து அதிர்ச்சி அடைந்த 3 பேர் தப்பி ஓடி விட்டனர். 2 பெண்கள், 2 ஆண்கள் என 4 பேரை பொதுமக்கள் சிறைபிடித்தனர். உடனே அவர்கள் நாங்கள் 4 பேரும் குழந்தைகளுக்கு தேவையான பொருட்களைதான் விற்பனை செய்ய வந்தோம் என்று கூறினார்கள்.

குழந்தைகளுக்கான பொருட்களை விற்பனை செய்வதற்கு ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவை எதற்கு? மக்கள் தொகை கணக்கெடுக்கிறீர்களா என்று பொதுமக்கள் சரமாரியாக கேள்வி எழுப்பினார்கள்.

இந்த தகவல் பரவியதும் ஏராளமானோர் சின்ன பள்ளிவாசல் முன்பு திரண்டனர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவல் அறிந்த உக்கடம் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்தனர். அவர்கள், பொதுமக்கள் சிறைபிடித்து வைத்திருந்த 4 பேரையும் போலீஸ் நிலையத்துக்கு அழைத்துச்சென்று விசாரித்தனர்.

அதில் அவர்கள் வில்சன் கேர் என்ற தனியார் நிறுவனத்தில் வேலை செய்யும் ஊழியர்கள் என்பதும், மாதத்தவணையில் குழந்தைகளுக்கான பொருட்களை விற்க வந்தவர்கள் என்றும், மாத தவணை தொகையை செலுத்த ஆதார் எண், வாக்காளர் அடையாள அட்டை எண் ஆகியவற்றை கேட்டதும் தெரியவந்தது. விசாரணைக்கு பிறகு அவர்கள் 4 பேரையும் போலீசார் விடுவித்தனர்.

Next Story