தனுஷ்கோடியில் கடற்படை அதிரடி: இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை படகை மடக்கிய ஹெலிகாப்டர் - 5 பேர் கைது; தீவிர விசாரணை
தனுஷ்கோடி கடல் பகுதியில் இந்திய எல்லைக்குள் அத்துமீறி நுழைந்த இலங்கை படகை கடற்படை ஹெலிகாப்டர் மடக்கி கரையை நோக்கி கொண்டு வந்தது. அந்த படகில் இருந்த 5 பேர் அதிரடியாக கைது செய்யப்பட்டனர்.
ராமேசுவரம்,
ராமநாதபுரம் மாவட்ட கடல் பகுதியில் இந்திய கடற்படை வீரர்கள் நேற்று காலை ஹெலிகாப்டர் மூலம் ரோந்து பணியில் ஈடுபட்டு இருந்தனர். அவர்கள் தனுஷ்கோடி அரிச்சல்முனை கடல் பகுதியில் சென்ற போது இலங்கையை சேர்ந்த பிளாஸ்டிக் படகு ஒன்றில் 5 பேர் இருப்பதை கண்டனர்.
ஹெலிகாப்டரை கண்டதும் அந்த படகில் இருந்தவர்கள் வேகமாக தப்பிச்செல்ல முயன்றனர்.
இதனால் சந்தேகம் அடைந்த கடற்படையினர் ஹெலிகாப்டரில் தாழ்வாக பறந்து, உடனடியாக படகை அரிச்சல்முனை கடற்கரையை நோக்கி கொண்டு செல்லுமாறு அந்த படகில் இருந்தவர்களை எச்சரித்தனர். அதன்படி அந்த படகில் இருந்தவர்கள் கடற்கரையை நோக்கி வந்தனர். ஹெலிகாப்டரும் அவர்களை கண்காணித்தபடி பறந்து வந்தது.
இதற்கிடையே இதுபற்றிய தகவல் தெரிவிக்கப்பட்டதை தொடர்ந்து ராமேசுவரம் கடற்படை கமாண்டர் அணில்குமார் தாஸ், ராமேசுவரம் கடலோர போலீஸ் இன்ஸ்பெக்டர் கனகராஜ், சுங்கத்துறை சூப்பிரண்டு ஜோசப் ஜெயராஜ் மற்றும் அதிகாரிகள் கடற்கரைக்கு விரைந்து வந்தனர்.
இலங்கை படகை கரைக்கு கொண்டு வந்ததுடன், அதில் இருந்த 5 பேரையும் பிடித்தனர். அவர்களிடம் முறையான ஆவணங்கள் ஏதும் இல்லை என்பதும், அத்துமீறி இந்திய கடல் பகுதிக்குள் வந்ததும் தெரியவந்ததால் 5 பேரையும் கைது செய்தனர். பின்னர் படகை அங்குலம் அங்குலமாக சோதனையிட்டனர்.
அந்த படகில் மீன்பிடி வலை, டீசல் கேன் போன்றவை இருந்தன. அதனை தொடர்ந்து 5 பேரையும் மண்டபத்தில் உள்ள அலுவலகத்திற்கு அழைத்து சென்று விசாரணை மேற்கொண்ட னர். அவர்கள் நேற்று தலைமன்னாரில் இருந்து மீன்பிடிக்க வந்ததாகவும், கடல் நீரோட்டத்தில் திசைமாறி இந்திய கடல் பகுதிக்குள் வந்து விட்டதாகவும் தெரிவித்தனர்.
ஆனால் ஒரு வாரத்துக்கு முன்பு இதேபகுதியில் ஒரு படகையும், அதில் இருந்த இலங்கையை சேர்ந்த 3 பேரையும் ஹெலிகாப்டர் மூலம் மடக்கி பிடித்தபோது அவர்களிடம் இருந்து 3½ கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது. இதையடுத்து தற்போது பிடிபட்டவர்களும் அதுபோன்று தங்கம் உள்ளிட்ட ஏதாவது ஒன்றை கடத்தி வந்து கைமாற்றியவர்களா? என்ற கோணத்தில் விசாரணை நடந்து வருகிறது.
இந்த அதிரடி நடவடிக்கை அந்த பகுதியில் பரபரப்ைப ஏற்படுத்தியது.
Related Tags :
Next Story