சென்னையில் இருந்து மெக்காவுக்கு புனித பயணம் செல்ல வந்த 170 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர் கொரோனா வைரஸ் பாதிப்பால் நடவடிக்கை


சென்னையில் இருந்து மெக்காவுக்கு   புனித பயணம் செல்ல வந்த 170 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்   கொரோனா வைரஸ் பாதிப்பால் நடவடிக்கை
x
தினத்தந்தி 27 Feb 2020 10:45 PM GMT (Updated: 27 Feb 2020 6:49 PM GMT)

மெக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் வெளிநாட்டினர் யாரும் வரவேண்டாம் என சவுதி அரேபியா அரசு அறிவித்து இருப்பதால் சென்னையில் இருந்து புனித பயணம் செல்ல வந்த 170 பேர் திருப்பி அனுப்பி வைக்கப்பட்டனர்.

ஆலந்தூர், 

சென்னை மீனம்பாக்கம் பன்னாட்டு விமான நிலையத்தில் இருந்து சவுதி அரேபியா தலைநகர் ஜித்தாவுக்கு நேற்று பகல் விமானம் செல்ல தயாராக இருந்தது. அதில் புனித உம்ரா பயணம் செய்ய 170 பேர் உள்பட 258 பயணிகள் பயணம் செய்ய இருந்தனர்.

இவர்கள் விமான நிலைய சோதனைகளை முடித்துவிட்டு விமானத்தில் செல்ல காத்திருந்தனர். அப்போது மெக்காவில் கொரோனா வைரஸ் பாதிப்பு இருப்பதால் மெக்கா நகருக்கு வெளிநாட்டினர் யாரும் வரவேண்டாம் என்று சவுதி அரேபிய அரசு அறிவித்து, அதற்கான உம்ரா விசாவையும் நிறுத்தி வைத்துவிட்டதாக கூறப்படுகிறது.

170 பேரை திருப்பி அனுப்பினர்

இதையடுத்து புனித உம்ரா பயணம் செல்ல இருந்த 170 பேரின் பயணம் ரத்து செய்யப்பட்டதாக கூறி, அவர்களை விமானத்தில் ஏற்றாமல் திருப்பி அனுப்பினார்கள்.

இதையடுத்து மெக்கா நகருக்கு செல்ல கூடியவர்களை தவிர்த்து சவுதி அரேபியாவில் உள்ள பிற நகருக்கு செல்ல இருந்த 88 பயணிகளுடன் அந்த விமானம் பகல் 12.30 மணிக்கு புறப்பட்டு சென்றது.

இதனால் புனித உம்ரா பயணம் செல்ல வந்தவர்கள் ஏமாற்றம் அடைந்தனர். அவர்கள் விமான நிலையத்தில் பரிதவித்தபடி நின்றனர். இதுபற்றி அவர்கள் கூறியதாவது:-

கட்டணம்

கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக மெக்கா நகருக்கு வெளிநாட்டினர் வர சவுதி அரேபிய அரசு தடை விதித்து இருப்பதாக கூறி, சென்னையில் இருந்து புனித பயணம் செல்ல இருந்த பெண்கள், குழந்தைகள் உள்பட 170 பேரின் பயணம் ரத்து செய்யப்பட்டு உள்ளது.

இதற்கான விமான கட்டணம் முறைப்படி திருப்பி வழங்கப்படும் என்று விமான நிறுவன அதிகாரிகள் தெரிவித்தனர். சவுதி அரேபிய அரசு மெக்கா நகருக்கு செல்ல அனுமதி வழங்கிய பின்னர் மீண்டும் நாங்கள் உம்ரா பயணத்தை தொடர்வோம்.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story