குடும்பத்தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை பெண் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு


குடும்பத்தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை   பெண் உள்பட 5 பேருக்கு வலைவீச்சு
x
தினத்தந்தி 28 Feb 2020 3:45 AM IST (Updated: 28 Feb 2020 12:29 AM IST)
t-max-icont-min-icon

குடும்பத்தகராறில் வாலிபர் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக தலைமறைவாக உள்ள பெண் உள்பட 5 பேரை போலீசார் தேடி வருகின்றனர்.

பெரம்பூர், 

சென்னை கொடுங்கையூர் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்தவர் சீனிவாசன். இவருடைய மகன்கள் சந்துரு மற்றும் தயாளன்(வயது 25). தயாளனுக்கு திருமணமாகி திவ்யா என்ற மனைவி உள்ளார். தற்போது அவர், மனைவியுடன் எண்ணூரில் வசித்து வந்தார்.

சந்துருவுக்கும், கொடுங்கையூர் அன்னை இந்திரா நகரைச் சேர்ந்த சுகு என்ற சுகுமார்(48) என்பவருடைய மகள் தாரணி(24) என்பவருக்கும் திருமணமாகி, கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்துவிட்டனர். அதன்பிறகு தாரணி, அதே பகுதியைச்சேர்ந்த தனுஷ் (26) என்பவரை 2-வது திருமணம் செய்து கொண்டார். இதனால் இவர்கள் இரு குடும்பத்தினருக்கும் இடையே அடிக் கடி தகராறு ஏற்பட்டு வந்துள்ளது.

வெட்டிக்கொலை

இந்தநிலையில் சந்துரு, நேற்று தனது தம்பி தயாளனுடன் தாரணி வீட்டுக்கு சென்று தான் கொடுத்த பணம் மற்றும் நகைகளை திரும்ப தரும்படி கேட்டார். இதனால் இவர் களுக்கும், தாரணி, அவருடைய தந்தை சுகுமார், 2-வது கணவர் தனுஷ் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டு, வாக்குவாதம் முற்றியது.

இதில் ஆத்திரம் அடைந்த தாரணி, சுகுமார், தனுஷ் உள்பட 5 பேர் ஒன்று சேர்ந்து அண்ணன்-தம்பி இருவரையும் சரமாரியாக தாக்கினர். மேலும் தாங்கள் மறைத்து வைத்திருந்த கத்தியால் தயாளனின் தலையிலும், கழுத்திலும் சரமாரியாக வெட்டினர். இதில் படுகாயம் அடைந்த அவர், ரத்த வெள்ளத்தில் அதே இடத்தில் பரிதாபமாக இறந்தார்.

5 பேருக்கு வலைவீச்சு

இதுபற்றி தகவல் அறிந்துவந்த கொடுங்கையூர் போலீசார் கொலையான தயாளன் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக ஸ்டான்லி ஆஸ்பத்திரி அனுப்பி வைத்தனர். மேலும் இதுபற்றி போலீசார் வழக்குப்பதிவு செய்து தலைமறைவான தாரணி, சுகுமார், தனுஷ் உள்பட 5 பேரையும் வலைவீசி தேடி வருகின்றனர். இந்த கொலை சம்பவம் அந்த பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Next Story