வாகனங்கள் விற்பனை செய்வதாக கூறி விடுதி உரிமையாளரிடம் ரூ.7 லட்சம் மோசடி - வாலிபர் கைது


வாகனங்கள் விற்பனை செய்வதாக கூறி விடுதி உரிமையாளரிடம் ரூ.7 லட்சம் மோசடி - வாலிபர் கைது
x
தினத்தந்தி 27 Feb 2020 10:15 PM GMT (Updated: 27 Feb 2020 7:20 PM GMT)

விழுப்புரத்தில் வாகனங்கள் விற்பனை செய்வதாக கூறி விடுதி உரிமையாளரிடம் ரூ.7 லட்சம் மோசடி செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.

விழுப்புரம், 

விழுப்புரம் கீழ்பெரும்பாக்கம் பகுதியை சேர்ந்தவர் விக்னேஸ்வரன் (வயது 31). இவர் விழுப்புரத்தில் திருச்சி நெடுஞ்சாலையில் தங்கும் விடுதி நடத்தி வருகிறார். இந்த நிலையில் அவரது விடுதிக்கு கடந்த ஆண்டு வந்த விழுப்புரம் வண்டிமேடு பகுதியை சேர்ந்த வேணுகோபால் மகன் மோகன்ராஜ்(35) என்பவர், தன்னை மோட்டார் வாகன புரோக்கர் என அறிமுகப்படுத்திக் கொண்டார். இதையடுத்து அவரது விடுதிக்கு மோகன்ராஜ் அடிக்கடி வந்து சென்றதால், அவருக்கும் விக்னேஸ்வரனுக்கும் இடையே பழக்கம் ஏற்பட்டது.

இதையடுத்து மோகன்ராஜ் தன்னிடம் 3 நான்கு சக்கர வாகனங்களும், 18 இருசக்கர வாகனங்களும் விற்பனைக்காக உள்ளது. உங்களுக்கு வேண்டுமானால் வாங்கிக்கொள்ளுங்கள் என்று கூறி அதற்கான விலை பட்டியலை விக்னேஸ்வரனிடம் கொடுத்தார். அதை வாங்கிய விக்னேஸ்வரன் தனக்கு 3 நான்கு சக்கர வாகனம், 13 இருசக்கர வாகனமும், தன்னுடைய சகோதரர் விஜயசங்கருக்கு 2 இருசக்கர வாகனமும், அவரது நண்பர் வெங்கடேசனுக்கு 3 இருசக்கர வாகனம் வேண்டும் என்று கூறி, அதற்காக மோகன்ராஜிடம் விலை பேசினார்.

இதையடுத்து, விக்னேஸ்வரன் முன்பணமாக மோகன்ராஜிடம் நேரிடையாக ஒரு லட்சம் ரூபாயும், அவரது மாமியாரின் வங்கி கணக்கு மூலம் ரூ.6 லட்சமும் கொடுத்ததாக தெரிகிறது. பணத்தை பெற்றுக்கொண்ட மோகன்ராஜ், வாகனங்களை விக்னேஸ்வரனுக்கு வழங்கவில்லை. இதனால் அவர் மோகன்ராஜிடம் சென்று தனக்கு வாகனங்கள் வழங்க வேண்டும், இல்லையென்றால் பணத்தை திருப்பி கொடுங்கள் என கேட்டுள்ளார்.

உடனே அவர் 4 இருசக்கர வாகனங்களை விக்னேஸ்வரனிடம் கொடுத்துள்ளார். அந்த வாகனங்களுக்கு உரிய ஆவணங்கள் ஏதும் இல்லாததால், அதுபற்றி விக்னேஸ்வரன், மோகன்ராஜிடம் கேட்டார். அப்போது அவர் ரூ.95 ஆயிரத்துக்கான காசோலையை விக்னேஸ்வரனிடம் கொடுத்துள்ளார். காசோலையை பெற்றுக்கொண்ட அவர் வங்கியில் செலுத்திய போது, அதில் பணம் இல்லாதது தெரியவந்தது. அப்போது தான் மோகன்ராஜ் தன்னிடம் வாகனங்கள் விற்பனை செய்வதாக கூறி பணம் பெற்று மோசடி செய்தது விக்னேஸ்வரனுக்கு தெரியவந்தது.

இதுகுறித்து அவர் விழுப்புரம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசில் புகார் கொடுத்தார். அதன் பேரில், போலீசார் வழக்குப்பதிந்து மோகன்ராஜை கைது செய்து, கோர்ட்டில் ஆஜர்படுத்தி, வேடம்பட்டு சிறையில் அடைத்தனர்.

Next Story