பணி பாதுகாப்புக்கு உத்தரவாதம்: ஒரத்தநாடு அரசு கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்கள் போராட்டம் வாபஸ்


பணி பாதுகாப்புக்கு உத்தரவாதம்: ஒரத்தநாடு அரசு கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்கள் போராட்டம் வாபஸ்
x
தினத்தந்தி 27 Feb 2020 11:30 PM GMT (Updated: 2020-02-28T01:04:02+05:30)

பணி பாதுகாப்புக்கு உத்தரவாதம் அளிக்கப்பட்டதை தொடர்ந்து ஒரத்தநாடு அரசு கல்லூரி தற்காலிக விரிவுரையாளர்கள் தர்ணா போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

ஒரத்தநாடு,

திருச்சியில் உள்ள பாரதிதாசன் பல்கலைகழகத்தின் உறுப்பு மகளிர் கல்லூரியாக செயல்பட்ட ஒரத்தநாடு மகளிர் கல்லூரியை தமிழக அரசு கடந்த 2018-ம் ஆண்டு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியாக அறிவித்தது. இக்கல்லூரியில் பாரதிதாசன் பல்கலைகத்தால் நியமிக்கப்பட்ட 110 கவுரவ (தற்காலிக) விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்கள் பணியாற்றி வருகின்றனர்.

இந்தநிலையில் இக்கல்லூரியில் பி.பி.ஏ. பாடப்பிரிவில் பணியாற்றி வரும் தற்காலிக விரிவுரையாளர்களுக்கு பதிலாக அண்ணாமலை பல்கலைகழகத்தை சேர்ந்த 3 விரிவுரையாளர்களை நியமனம் செய்து அரசு கல்லூரி கல்வி இயக்குனர் சில தினங்களுக்கு முன் உத்தரவிட்டார்.

தர்ணா போராட்டம்

இதற்கு ஒரத்தநாடு அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் பணியாற்றும் தற்காலிக விரிவுரையாளர்கள் மற்றும் ஊழியர்கள் எதிர்ப்பு தெரிவித்து நேற்று முன்தினம் கல்லூரிக்கு முன்பாக தரையில் அமர்ந்து தர்ணா போராட்டத்திலும், சாலை மறியலிலும் ஈடுபட்டனர். இவர்களுக்கு ஆதரவாக மாணவிகளும் வகுப்புகளை புறக்கணித்து உள்ளிருப்பு போராட்டம் நடத்தினர்.

அப்போது, இக்கல்லூரி தொடங்கப்பட்டதில் இருந்து பணியாற்றி வரும் தற்காலிக விரிவுரையாளர்கள் மற்றும் அலுவலக ஊழியர்களின் பணியை பறிக்க முயற்சி நடப்பதாகவும், எனவே பணி பாதுகாப்புக்கு உத்தரவாதம் வழங்க வேண்டும் எனக்கூறி இரவிலும் தர்ணா போராட்டத்தை தொடர்ந்தனர். உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதியளித்ததை தொடர்ந்து தற்காலிக விரிவுரையாளர்கள் அங்கிருந்து புறப்பட்டு சென்றனர்.

எம்.பிக்கள்., எம்.எல்.ஏ. சந்திப்பு

இதற்கிடையே சம்பந்தப்பட்ட ஒரத்தநாடு அரசு மகளிர் கல்லூரி நிர்வாக காரணங்களால் நேற்றும், இன்றும்(வெள்ளிக்கிழமை) அனைத்து வகுப்புகளும் ரத்து செய்யப்படுவதாக கல்லூரி முதல்வர் சார்பில் அறிவிக்கப்பட்டிருந்தது. மறுமுனையில் தற்காலிக விரிவுரையாளர்கள் நேற்று காலை கல்லூரிக்கு முன்பாக அமர்ந்து 2-வது நாளாக தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டனர். அரசியல் கட்சிகள், அமைப்புகளின் நிர்வாகிகள் மற்றும் ஒரத்தநாடு வக்கீல் சங்கத்தினர் தர்ணா போராட்டத்தில் ஈடுபட்டிருந்தவர்களை நேரில் சந்தித்து ஆதரவு தெரிவித்தனர்.

இந்தநிலையில் எஸ்.எஸ்.பழனிமாணிக்கம் எம்.பி., ராமச்சந்திரன் எம்.எல்.ஏ ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்ட தற்காலிக விரிவுரையாளர்களை நேரில் சந்தித்து பேசினர். பழனிமாணிக்கம் எம்.பி, கூறுகையில், இக்கல்லூரி தி.மு.க ஆட்சியில் கொண்டு வரப்பட்டது. இங்கு பணிசெய்பவர்களின் பணிக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும், யாரும் கவலைப்பட வேண்டாம் என்று உறுதியளித்தார். இதனை ஏற்றுக்கொண்ட தற்காலிக விரிவுரையாளர்கள் தர்ணா போராட்டத்தை கைவிட்டனர்.

இதனை தொடர்ந்து சற்று நேரத்தில், ஆர்.வைத்திலிங்கம் எம்.பி. விரிவுரையாளர்களை நேரில் சந்தித்து பேசினார், அப்போது அவர் கூறுகையில், இந்த பிரச்சினை தொடர்பாக சம்பந்தப்பட்ட அமைச்சரிடம் தொலைபேசி வாயிலாக பேசினேன், இக்கல்லூரியில் பணி செய்யும் தற்காலிக விரிவுரையாளர்களின் பணிக்கு பாதிப்பு ஏற்படாது என்று தெரிவித்துள்ளார். எனவே தற்காலிக விரிவுரையாளர்களில் சிலர் வருகிற 2-ந்தேதி சம்மந்தப்பட்ட அமைச்சரை நேரில் சந்தித்து கோரிக்கையினை தெரிவியுங்கள். இங்கு பணிசெய்யும் தற்காலிக விரிவுரையாளர்களின் பணிக்கு பாதிப்பு ஏற்படாமல் இருக்க இயன்றவரை தேவையான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படும் என்று உத்தரவாதம் அளித்தார். இதனை தொடர்ந்து தற்காலிக விரிவுரையாளர்கள் போராட்டத்தை கைவிட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.

Next Story