பெங்களூருவில் கைதான பயங்கரவாதி வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி பெற்றது அம்பலம்
பெங்களூருவில் கைதான பயங்கரவாதி வெடிகுண்டு தயாரிக்கும் பயிற்சி பெற்றது விசாரணையில் அம்பலமாகி உள்ளது.
பெங்களூரு,
பெங்களூரு, கோலார், சாம்ராஜ்நகர் மாவட்டங்களில் பதுங்கி இருந்த மெகபூப் பாஷா உள்பட 5 பயங்கரவாதிகளை பெங்களூரு மத்திய குற்றப்பிரிவு போலீசார் சமீபத்தில் கைது செய்திருந்தனர். தற்போது 5 பயங்கரவாதிகளிடமும் தேசிய புலனாய்வு முகமை அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். இந்த நிலையில், பயங்கரவாதி மெகபூப் பாஷாவிடம் நடத்திய விசாரணையின் போது கிடைத்த தகவலின் பேரில் பெங்களூரு டி.ஜே.ஹள்ளி அருகே டேனரி ரோடு, காபி போர்டு காலனியில் வசித்து வந்த பயங்கரவாதி பஷி உர் ரகுமானை தேசிய புலனாய்வு அதிகாரிகள் கைது செய்துள்ளனர். அவரை காவலில் எடுத்து அதிகாரிகள் விசாரித்து வருகின்றனர். பஷி உர் ரகுமான், பெங்களூருவில் நிகழ்ச்சி ஒருங்கிணைப்பு குழு ஒன்றை நடத்தி வந்தது தெரியவந்தது.
மேலும் பயங்கரவாதி பஷி உர் ரகுமானிடம் நடத்திய விசாரணையில் பரபரப்பு தகவல்கள் வெளியாகி உள்ளது. அதாவது பஷி உர் ரகுமான், பயங்கரவாதி மெகபூப் பாஷாவின் நெருங்கிய கூட்டாளியாக இருந்து வந்துள்ளார். அல்-ஹிந்த் அமைப்பின் கர்நாடக பொறுப்பாளராக இருந்த மெகபூப் பாஷா கூறியபடியே பஷி உர் ரகுமான் நடந்து கொண்டு வந்துள்ளார்.
வெடிகுண்டு தயாரிக்க பயிற்சி
குறிப்பாக வெடிகுண்டு தயாரிக்க தேவையான பொருட்களை திரட்டுவது மற்றும் வெடிகுண்டு தயாரிப்பதற்கான பயிற்சியையும் பஷி உர் ரகுமான் எடுத்து வந்துள்ளார். மேலும் அல்-ஹிந்த் அமைப்பில் சேரும் நபர்களுக்கு, சாம்ராஜ்நகர் மாவட்டம் குண்டலுபேட்டை அருகே பந்திப்பூர் வனப்பகுதியில் பயிற்சி அளிப்பதற்கு தேவையான நடவடிக்கைகளை அவர் எடுத்து வந்தது தெரியவந்துள்ளது. மேலும் சமீபத்தில் சுத்தகுண்டே பாளையாவில் போலீசார் சோதனை நடத்தியதும், பெங்களூருவில் இருந்து அவர் வெளியேறி தலைமறைவாக இருந்து வந்துள்ளார். கடந்த சில நாட்களுக்கு முன்பு டி.ஜே.ஹள்ளிக்கு அவர் வந்துள்ளார்.
இதுபற்றி தேசிய புலனாய்வு அதிகாரிகளுக்கு தகவல் கிடைத்ததும், அவரை கைது செய்திருந்தது தெரியவந்துள்ளது. இதற்கிடையில், டி.ஜே.ஹள்ளியில் உள்ள பஷி உர் ரகுமானின் வீடு, அவரது உறவினர் வீடுகளில் நேற்று முன்தினம் அதிகாரிகள் சோதனை நடத்தினார்கள். அப்போது அங்கிருந்து சில பொருட்களை அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றதாகவும் கூறப்படுகிறது.
Related Tags :
Next Story