டெல்லி வன்முறை குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி இடமாற்றம் நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை சித்தராமையா பேச்சு
நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் இருப்பதாகவும், டெல்லி வன்முறை குறித்து கேள்வி எழுப்பிய நீதிபதி இடமாற்றம் செய்யப்பட்டுள்ளதாகவும் சித்தராமையா கூறினார்.
பெங்களூரு,
கர்நாடக மகளிர் காங்கிரஸ் சார்பில் குடியுரிமை திருத்த சட்டம், தேசிய குடியுரிமை பதிவேடு குறித்த கருத்தரங்கம் பெங்களூருவில் நேற்று நடைபெற்றது. இதில் சட்டசபை எதிர்க்கட்சி தலைவர் சித்தராமையா கலந்து கொண்டு பேசியதாவது:-
நாட்டில் அறிவிக்கப்படாத நெருக்கடி நிலை அமலில் உள்ளது. பிரதமர் மோடி மற்றும் உள்துறை மந்திரி அமித்ஷா ஆகியோர் பேரழிவை ஏற்படுத்துபவர்களாக இருக்கிறார்கள். ஜனநாயகத்தை காப்பாற்றுவது நமது கடமை. மிக மோசமானவர்களின் கைகளில் ஆட்சி அதிகாரம் சிக்கியுள்ளது. மனிதநேயம் இல்லாதவர்கள் ஆட்சி நடத்துகிறார்கள். பிரதமர் மோடி, அமித்ஷா ஆகியோர் பொய் பேசுகிறார்கள்.
ஏன் வழக்கு போடவில்லை
வன்முறையில் டெல்லியில் பலர் இறந்துள்ளனர். டெல்லி பல்கலைக்கழகத்திற்குள் நுழைந்து தாக்கிய பிறகும், பா.ஜனதாவினர் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்யவில்லை. ஆர்.எஸ்.எஸ். அமைப்பினர் போலீஸ் உடை அணிந்து தாக்குதல் நடத்தினர். அவர்கள் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. வன்முறையை தூண்டும் விதத்தில் பேசியவர்கள் மீது ஏன் வழக்கு போடவில்லை என்று கேள்வி எழுப்பிய டெல்லி ஐகோர்ட்டு நீதிபதியை உடனே இடமாற்றம் செய்துள்ளனர். இவர்கள் மிக கொடூரமானவர்கள் மற்றும் அரசியல் சாசன விரோதிகள்.
நாடு குழப்பத்தில் உள்ளது. ஆட்சியில் இருப்பவர்கள் அரசியல் சாசனத்தை அழிக்க முயற்சி செய்கிறார்கள். காங்கிரஸ் கட்சி, பாதிக்கப்பட்ட மக்களுக்கு ஆதரவாக நின்று அநீதியை எதிர்த்து போராட வேண்டும். நாம் அமைதியான முறையில் போராட வழி உள்ளது. அசாமில் மக்கள்தொகை 3 கோடி. அங்கு ரூ.19 ஆயிரம் கோடி செலவு செய்து தேசிய குடியுரிமை பதிவேட்டை தயாரித்துள்ளனர். நாடு முழுவதும் இந்த பதிவேட்டை தயாரிக்க ரூ.1 லட்சம் கோடி செலவாகும்.
ஆவணங்கள் இல்லை
அசாமில் 19 லட்சம் பேருக்கு ஆவணங்கள் இல்லை. இவர்களில் இந்துக்களே அதிகம். நாட்டின் எல்லா பகுதிகளிலும் இத்தகைய பதிவேட்டை நடத்துவது அவசியம்தானா?. 10 மாநிலங்கள் இந்த சட்டத்தை எதிர்த்துள்ளன. நாம் அனைவரும் இந்த சட்டத்தை கண்டிக்க வேண்டும். எனது பிறந்தநாள் சான்று இல்லை. அது மாயமாகி விட்டது. எனது பள்ளி ஆசிரியர் என்னுடைய சான்றிதழில் குறிப்பிட்டுள்ளது தான் எனது பிறந்த நாள். இதன்படி பார்த்தால் நான் சந்தேகப்படும் குடிமகன். என்னை சிறையில் தள்ளுவார்களா?. எனது வாக்குரிமையை பறித்துக் கொள்வார்களா?.
இவ்வாறு சித்தராமையா பேசினார்.
Related Tags :
Next Story