பெங்களூருவில் 23 நகைக்கடைகளில் வணிக வரித்துறை அதிகாரிகள் திடீர் சோதனை 63 கிேலா தங்க நகைகள் சிக்கியது
பெங்களூருவில் 23 நகைக்கடைகளில் வணிக வரித்துறை அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனை நடத்தினார்கள்.
பெங்களூரு,
பெங்களூரு நகரில் உள்ள நகைக்கடைகளில் உரிய ஆவணங்கள் இல்லாமல் தங்க நகைகளை விற்பனை செய்யப்படுவதாகவும், அரசுக்கு முறையாக ஜி.எஸ்.டி. வரி செலுத்தாமல் வரி ஏய்ப்பு செய்வதாகவும் வணிக வரித்துறை அதிகாரிகளுக்கு ஏராளமான புகார்கள் வந்தது. இதையடுத்து, சிக்பேட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளில் உள்ள 23 நகைக்கடைகளில் வணிக வரித்துறை அதிகாரிகள் திடீரென அதிரடி சோதனை நடத்தினார்கள்.
இந்த சோதனையின் போது 23 நகைக்கடைகளிலும் உரிய ஆவணங்கள் இல்லாமல் 63 கிலோ எடை கொண்ட தங்க நகைகள் சிக்கியது. அந்த நகைகள் குறித்து உரிமையாளர்களிடம் விசாரித்த போது, அவர்கள் முன்னுக்கு பின் முரணாக பதில் சொன்னார்கள். இதையடுத்து, 63 கிலோ நகைகளும் அதிகாரிகள் கைப்பற்றி எடுத்து சென்றிருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
உரிமையாளர்களுக்கு அபராதம்
இந்த நிலையில், வணிக வரித்துறை அதிகாரிகள் நடத்திய விசாரணையில் வெளிமாநிலங்களில் இருந்து நகை வியாபாரத்திற்காக வருபவர்கள், இங்கு கடைகள் நடத்தி வருபவர்களிடம் நகைகளை விற்கும் போது ரசீது கொடுக்காமலும், அதற்கான முறையான ஆவணங்களை வழங்காமலும் விற்று வந்துள்ளனர். இவ்வாறு ரசீது பெறாமல் நகைகளை வாங்கி விற்கும் போது, நகைக்கடை உரிமையாளர்கள் தாங்கள் விற்கும் தங்க நகைகளுக்கு அரசுக்கு உரிய வரி செலுத்தாமல் மோசடி செய்தது தெரியவந்துள்ளது.
இதையடுத்து, 63 கிலோ தங்க நகைகளை உரிய ஆவணங்கள் இல்லாமல் வந்திருந்ததாக 23 கடைகளின் உரிமையாளர்களுக்கும் அபராதம் விதித்துள்ளனர். அந்த கடைகளின் உரிமையாளர்களிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.
Related Tags :
Next Story