போதைபொருட்கள் விற்பனை குறித்து தகவல் கொடுத்தால் ஊக்கத்தொகை அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு


போதைபொருட்கள் விற்பனை குறித்து தகவல் கொடுத்தால் ஊக்கத்தொகை அமைச்சர் கந்தசாமி அறிவிப்பு
x
தினத்தந்தி 28 Feb 2020 5:14 AM IST (Updated: 28 Feb 2020 5:14 AM IST)
t-max-icont-min-icon

புதுவையில் போதை பொருட்கள் விற்பனை குறித்து தகவல் கொடுத்தால் ஊக்கத்தொகை வழங்கப்படும் என அமைச்சர் கந்தசாமி தெரிவித்தார்.

புதுச்சேரி,

புதுச்சேரி அரசு சமூக நலத்துறை சார்பில் கடந்த 24-ந் தேதி முதல் ‘போதையில்லா புதுச்சேரி விழிப்புணர்வு வாரம்’ கடைபிடிக்கப்பட்டது. இதையொட்டி மனிதசங்கிலி, பள்ளி மாணவர்கள் ரோலர் ஸ்கேட்டிங் ஊர்வலம், தேசிய மாணவர் படையினர் மற்றும் கல்லூரி மாணவர்களின் நாடகம், ஓவியம், நடனம், கபடி போட்டி உள்ளிட்ட பல்வேறு விழிப்புணர்வு நிகழ்ச்சிகள் நடந்தது.

இதன் நிறைவு விழா கடற்கரை காந்தி திடலில் நேற்று மாலை நடந்தது. விழாவுக்கு சமூக நலத்துறை அமைச்சர் கந்தசாமி தலைமை தாங்கினார். லட்சுமி நாராயணன் எம்.எல்.ஏ. முன்னிலை வகித்தார். பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ-மாணவிகளுக்கு பரிசுகள், சான்றிதழ்கள் வழங்கப் பட்டன.

ஊக்கத்தொகை

விழாவில் அமைச்சர் கந்தசாமி பேசியதாவது:-

புதுவையில் புகையிலை மற்றும் போதை பழக்கத்திற்கு பலர் அடிமையாகி உள்ளனர். அதில் இருந்து அவர்களை மீட்டு கொண்டு வர அரசு பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகிறது. ஆனாலும் மாணவர்கள், இளைஞர்கள் கஞ்சாவுக்கு அடிமையாகி வருகிறார்கள். இதனால் அவர்களுடைய எதிர்காலம் கேள்விக் குறியாகிறது. புகையிலை மற்றும் கஞ்சா விற்பனை குறித்து தகவல் தெரிவிக்கும் மகளிர் சுய உதவிக்குழுவினர், பொதுமக்களுக்கு சமூகநலத்துறை சார்பில் ஊக்கத்தொகை மற்றும் சான்றிதழ்கள் வழங்கப்படும்.

இவ்வாறு அவர் பேசினார்.

விழாவில் அரசு செயலர் ஆலிஸ்வாஸ், கலெக்டர் அருண், சமூகநலத்துறை இயக்குனர் சாரங்கபாணி, துணை இயக்குனர் கலாவதி மற்றும் துறை அதிகாரிகள், ஊழியர்கள், மாணவ-மாணவிகள் கலந்துகொண்டனர். போதை அரக்கன் போல் வேடமிட்டு மாணவர்கள் கலைநிகழ்ச்சிகளை நடத்தி விழிப்புணர்வு நிகழ்ச்சிகளை நடத்திக் காட்டினர்.

Next Story