மதுரை போலீசாரின் தொடர் நடவடிக்கை, சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பரப்பிய டிரைவர் கைது


மதுரை போலீசாரின் தொடர் நடவடிக்கை, சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பரப்பிய டிரைவர் கைது
x
தினத்தந்தி 28 Feb 2020 4:00 AM IST (Updated: 28 Feb 2020 5:58 AM IST)
t-max-icont-min-icon

சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பரப்பிய டிரைவர் கைது செய்யப்பட்டார்.

மதுரை,

சிறுமிகளின் ஆபாச படங்களை இணையதளத்தில் பதிவேற்றம் செய்வதில் தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக மத்திய அரசு சில மாதங்களுக்கு முன்பு அதிர்ச்சி தகவல் ஒன்றை வெளியிட்டது. அதை தொடர்ந்து தமிழக போலீசார் தீவிர விசாரணை நடத்தி ஆபாச படத்தை பதிவேற்றம் செய்து இணையதளத்தில் பரப்புபவர்களை கைது செய்து வந்தனர். அதன் ஒரு பகுதியாக தேசிய குழந்தைகள் பாதுகாப்பு மையத்தின் சார்பில் மதுரை நகர் போலீசாருக்கு ஒரு தகவல் வந்தது. அதன் அடிப்படையில் மதுரை ஆரப்பாளையம் சண்முகநாதபுரத்தை சேர்ந்த குமார்(வயது 40), அவரது நண்பர் செந்தில்குமார்(36) உள்பட 3 பேரை போலீசார் போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர்.

இதே போன்று மதுரை மாவட்ட போலீசாருக்கும் ஒரு தகவல் வந்தது. அதில் ஒத்தக்கடையை சேர்ந்த ஒருவர் சிறுமி களின் ஆபாச படங்களை பதிவேற்றம் செய்து அதனை இணையதளத்தில் பரப்பி வருவதாக தெரிவிக்கப்பட்டிருந்தது. அந்த நபரை பிடிக்க மதுரை மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு உத்தரவிட்டார். அதை தொடர்ந்து ஒத்தக்கடை போலீசார் தீவிர விசாரணை மேற்கொண்டனர். அதில் இவ்வாறு படங்களை பரப்பியவர் ஒத்தக்கடை அய்யப்பன் நகரை சேர்ந்த சுந்தரபாண்டி(33) என்பது கண்டுபிடிக்கப்பட்டது. டிரைவரான இவருக்கு திருமணமாகி குழந்தைகள் உள்ளனர். மேலும் அவரது செல்போனை போலீசார் வாங்கி சோதனை செய்த போது அதில் 10-க்கும் மேற்பட்ட ஆபாச படங்கள் இருப்பது தெரியவந்தது. அதை தொடர்ந்து போலீசார் அவரை போக்சோ சட்டத்தின் கீழ் கைது செய்தனர். மதுரை நகரை தொடர்ந்து மாவட்ட போலீசாரும் இது தொடர்பாக தீவிர நடவடிக்ைக எடுத்து வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி வருகிறது.

Next Story