பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் பந்தல் அமைக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை டிராபிக் ராமசாமி வலியுறுத்தல்


பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் பந்தல் அமைக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை  டிராபிக் ராமசாமி வலியுறுத்தல்
x
தினத்தந்தி 29 Feb 2020 4:00 AM IST (Updated: 28 Feb 2020 6:56 PM IST)
t-max-icont-min-icon

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கபடி போட்டி நடந்து வருகிறது.

நெல்லை, 

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் குழிதோண்டி பந்தல் அமைக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று டிராபிக் ராமசாமி வலியுறுத்தினார்.

புகார் 

பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்தில் ஜெயலலிதா பிறந்தநாளையொட்டி கபடி போட்டி நடந்து வருகிறது. இதற்காக அங்கு குழிதோண்டி பந்தல் மற்றும் பார்வையாளர் அரங்கு அமைத்து உள்ளனர். மேலும் சில பேனர்கள் வைக்கப்பட்டு இருந்தன. இதுதவிர வ.உ.சி. மைதானத்தில் நடைபயிற்சி மேற்கொள்ள போலீசார் அனுமதிக்கவில்லை என்று தமிழக மக்கள் பாதுகாப்பு இயக்க நிறுவன தலைவர் டிராபிக் ராமசாமிக்கு புகார் வந்தது.

இதையடுத்து நேற்று காலையில் பாளையங்கோட்டை வ.உ.சி. மைதானத்துக்கு வந்த டிராபிக் ராமசாமி, போலீசாரின் அனுமதியுடன் அங்கிருந்த பேனர்களை அப்புறப்படுத்தினார். பின்னர் அவர் நிருபர்களிடம் கூறியதாவது:–

வழக்கு

பொதுமக்களை பாதிக்கும் வகையில் பேனர், பதாகைகள் வைப்பதில்லை என்று சென்னை உயர்நீதிமன்றத்தில் அ.தி.மு.க. சார்பில் உறுதிமொழி அளிக்கப்பட்டு உள்ளது. ஆனால் அதை மீறி வ.உ.சி. மைதானத்தில் பேனர் வைத்து உள்ளனர். இதுகுறித்து எனக்கு வந்த புகாரின் பேரில் இங்கு வந்து போலீஸ் பாதுகாப்புடன் பேனர்களை அகற்றினேன்.

விளையாட்டு மைதானங்களில் குழிதோண்டி பந்தல் அமைக்க அனுமதி கிடையாது. மாநகராட்சிக்கு சொந்தமான வ.உ.சி. மைதானத்தில் குழிதோண்டி பந்தல் அமைக்க அனுமதி அளித்த அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும். இதுகுறித்து சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கு தொடர உள்ளேன்.

பதவி விலக வேண்டும் 

டெல்லி கலவரத்தில் 40 பேர் இறந்து உள்ளனர். இதுகுறித்து மத்திய அரசு கண்டுகொள்ளாத நிலை உள்ளது. இதற்கு பொறுப்பு ஏற்று பாரதீய ஜனதா அரசு பதவி விலக வேண்டும். பாரதீய ஜனதா அரசு பதவி விலக வலியுறுத்தி உச்சநீதிமன்றத்தில் வழக்கு தொடருவேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story