ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா; 9–ந் தேதி நடக்கிறது


ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் பொங்கல் விழா; 9–ந் தேதி நடக்கிறது
x
தினத்தந்தி 29 Feb 2020 3:30 AM IST (Updated: 28 Feb 2020 6:58 PM IST)
t-max-icont-min-icon

பெண்களின் சபரிமலை என்று அழைக்கப்படும் ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவிலில் வருகிற 9–ந் தேதி பொங்கல் விழா நடைபெறுகிறது.

நாகர்கோவில், 

கேரள மாநிலம் திருவனந்தபுரம் அருகே ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் உள்ளது. இந்த கோவிலின் அறக்கட்டளை சேர்மன் சசிதரன் நாயர் மற்றும் நிர்வாகி நந்தகுமார் ஆகியோர் நாகர்கோவிலில் நிருபர்களுக்கு கூட்டாக பேட்டி அளித்தனர்.  அப்போது அவர்கள் கூறியதாவது:–

 ஆற்றுக்கால் பகவதி அம்மன் கோவில் பொங்கல் விழா நாளை(ஞாயிற்றுக்கிழமை) தொடங்குகிறது. நாளை காலை 9.30 மணிக்கு வாழ்த்து பாடலுடன் அம்மனுக்கு காப்பு கட்டப்படும். தொடர்ந்து 10 நாட்கள் விழா நடக்கிறது. மார்ச் 9–ந் தேதி பொங்கல் வழிபாடு நடைபெற உள்ளது. அன்று காலை 10.20 மணிக்கு பண்டார அடுப்பில் தீ மூட்டப்பட்டு பொங்கல் விழா நடைபெறும்.

இரவு தேவி நகர்வலம் எழுந்தருளி மார்ச் 10–ந் தேதி காலை 8 மணிக்கு மீண்டும் கோவிலுக்கு வந்தடைவார். பின்னர் இரவு 9.20 மணிக்கு காப்பு அவிழ்க்கப்படும்.

பொங்கல் வழிபாட்டில் சாதி, மத வேறுபாடின்றி 45 லட்சம் பெண் பக்தர்கள் பங்கேற்பார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இதில் கேரளா மட்டும் இன்றி தமிழகம் மற்றும் பல மாநிலங்களில் இருந்து பக்தர்கள் கலந்து கொள்வார்கள்.

 பக்தர்களுக்கு தேவையான அனைத்து வசதிகளும் செய்யப்பட்டு வருகின்றன. பஸ் வசதியும் ஏற்பாடு செய்யப்பட்டு வருகிறது.

இவ்வாறு அவர்கள் கூறினர்.

Next Story