திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளான பக்தர்கள் சாமி தரிசனம்


திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது திரளான பக்தர்கள் சாமி தரிசனம்
x
தினத்தந்தி 29 Feb 2020 4:00 AM IST (Updated: 28 Feb 2020 7:09 PM IST)
t-max-icont-min-icon

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது.

திருச்செந்தூர், 

திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் மாசி திருவிழா கொடியேற்றத்துடன் தொடங்கியது. விழாவில் திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

மாசி திருவிழா 

முருக பெருமானின் அறுபடை வீடுகளில் 2–ம் படை வீடான திருச்செந்தூர் சுப்பிரமணிய சுவாமி கோவிலில் ஆண்டுதோறும் பல்வேறு திருவிழாக்கள் கொண்டாடப்படுகிறது. அவற்றில் மிகவும் சிறப்பு வாய்ந்த திருவிழாவான மாசி திருவிழா நேற்று கொடியேற்றத்துடன் தொடங்கியது.

இதனை முன்னிட்டு, அதிகாலை 1 மணிக்கு நடை திறக்கப்பட்டு, விசுவரூப தீபாராதனை, உதய மார்த்தாண்ட அபிஷேகம் நடந்தது. அதிகாலை 4 மணிக்கு அலங்கரிக்கப்பட்ட பல்லக்கில் கொடிப்பட்டம் ஊர்வலமாக ஒன்பது சந்திகளிலும் வலம் வந்து, மீண்டும் கோவிலை சேர்ந்தது. தொடர்ந்து கொடிப்பட்டத்துக்கு சிறப்பு பூஜைகள் நடந்தன.

கொடியேற்றம் 

பின்னர் அதிகாலை 5.20 மணிக்கு கோவில் உள்பிரகாரத்தில் உள்ள செப்பு கொடிமரத்தில் வீரபாகு பட்டர் கொடியேற்றினார். தொடர்ந்து கொடிமரம் தர்ப்பை புற்களால் அலங்கரிக்கப்பட்டது. பின்னர் கொடிமர பீடத்துக்கு எண்ணெய், தைலம், தேன், இளநீர், பஞ்சாமிர்தம், பால், பன்னீர், சந்தனம், விபூதி போன்ற திரவியங்களால் சிறப்பு அபிஷேகம் நடந்தது. தொடர்ந்து பூஜையில் கும்பத்தில் வைக்கப்பட்ட புனித நீரால் அபிஷேகம் செய்யப்பட்டது.

பின்னர் பட்டு ஆடைகளாலும், வண்ண மலர்களாலும் கொடிமர பீடம் அலங்கரிக்கப்பட்டு, சோட‌ஷ தீபாராதனை நடைபெற்றது. தொடர்ந்து கட்டியம் கூறப்பட்டு, பஞ்சாங்கம் வாசிக்கப்பட்டது. நான்குவகை வேதங்கள் பாராயணம், தேவாரம், திருப்புகழ் பாடப்பட்டது. பின்னர் பக்தர்களுக்கு பிரசாதம் வழங்கப்பட்டது.

சாமி தரிசனம் 

விழாவில் திருவாவடுதுறை ஆதீனம் அம்பலவாண தம்பிரான் சுவாமி, கோவில் செயல் அலுவலர் அம்ரித், திருச்செந்தூர் குற்றவியல் நீதித்துறை நடுவர் சுப்பிரமணியன், அறநிலையத்துறை இணை ஆணையர் பரஞ்ஜோதி, தக்கார் பிரதிநிதியும், ஓய்வுபெற்ற கால்நடைத்துறை உதவி இயக்குனருமான டாக்டர் பாலசுப்பிரமணிய ஆதித்தன், ஏரல் சேர்மன் அருணாசலசாமி கோவில் பரம்பரை அக்தார் அ.ரா.க.அ.கருத்தப்பாண்டி நாடார், கோவில் உதவி ஆணையர் செல்வராஜ், உள்துறை கண்காணிப்பாளர்கள் ஆனந்த், ராஜ் மோகன், மாரிமுத்து, கண்காணிப்பாளர் ராமசுப்பிரமணியன்,

இந்து முன்னணி மாநில துணை தலைவர் வி.பி.ஜெயக்குமார், திருச்செந்தூர் காந்தி தினசரி மார்க்கெட் வியாபாரிகள் சங்க தலைவர் பழக்கடை திருப்பதி, தொழில் அதிபர்கள் ஹரி கிருஷ்ணன் வடமலைபாண்டியன், மாரியப்பன், ஓய்வுபெற்ற கூடுதல் கலெக்டர் விஜயகுமார், ஓய்வுபெற்ற உதவி செயற்பொறியாளர் சீதாமோகன், பிராமணர் சங்க ஆலோசகர் கிருஷ்ணன் உள்பட திரளான பக்தர்கள் கலந்து கொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

சுவாமி வீதி உலா 

மாலையில் அப்பர் சுவாமி தங்க சப்பரத்தில் எழுந்தருளி, வீதிகளில் உழவாரப்பணி செய்து கோவிலை சேர்ந்தார். இரவில் ஸ்ரீபெலிநாயகர், அஸ்திரதேவருடன் யானைத்தந்த பல்லக்கில் கோவிலில் இருந்து புறப்பட்டு, ஒன்பது சந்திகளில் உலா வந்து கோவிலை சேர்ந்தார்.

விழாவை முன்னிட்டு, திருச்செந்தூர் கோவில் போலீஸ் இன்ஸ்பெக்டர் ரஞ்சித்குமார் தலைமையில், ஏராளமான போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டனர்.

தொடர்ந்து 12 நாட்கள் நடைபெறும் விழா நாட்களில் தினமும் காலை, மாலையில் சுவாமி–அம்பாள் பல்வேறு வாகனங்களில் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர். விழா நாட்களில் கோவில் வளாகத்தில் உள்ள கோவிந்தசாமி பிள்ளை கலையரங்கத்தில் தினமும் காலை முதல் இரவு வரையிலும் பக்தி சொற்பொழிவு, பக்தி இன்னிசை, திருவாசகம் முற்றோதுதல், பரதநாட்டியம், திருப்புகழ் வீணை இன்னிசை, திருப்புகழ் நடனம் போன்ற பல்சுவை நிகழ்ச்சிகள் நடைபெறுகிறது.

இன்று, சுவாமி சிங்க கேடய சப்பரத்தில் எழுந்தருளல் 

2–ம் நாளான இன்று (சனிக்கிழமை) காலையில் சுவாமி குமரவிடங்க பெருமான் சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் சிறிய பல்லக்கிலும் எழுந்தருளி, வீதி உலா சென்று பக்தர்களுக்கு காட்சி அளிக்கின்றனர். மாலையில் சுவாமி சிங்க கேடய சப்பரத்திலும், தெய்வானை அம்பாள் பெரிய கேடய சப்பரத்திலும் எழுந்தருளி, பரிவார மூர்த்திகளுடன் வீதி உலா சென்று பக்தர்களுக்கு அருள்பாலிக்கின்றனர்.

10–ம் நாளான வருகிற 8–ந்தேதி (ஞாயிற்றுக்கிழமை) காலை 6 மணிக்கு விழாவின் சிகர நிகழ்ச்சியான தேரோட்டம் நடைபெறுகிறது. விழா ஏற்பாடுகளை கோவில் தக்கார் இரா.கண்ணன் ஆதித்தன், செயல் அலுவலர் அம்ரித் மற்றும் கோவில் பணியாளர்கள் செய்து வருகின்றனர்.

Next Story