பாளையங்கோட்டையில் ஆயுள் தண்டனை கைதி திடீர் சாவு
பாளையங்கோட்டையில் ஆயுள் தண்டனை கைதி திடீரென்று இறந்தார்.
நெல்லை,
பாளையங்கோட்டையில் ஆயுள் தண்டனை கைதி திடீரென்று இறந்தார்.
தொழிலாளி
கன்னியாகுமரி மாவட்டம் கருங்கல் அருகே உள்ள மாதாபுரம் பகுதியை சேர்ந்தவர் வினோஜ் பால்டன் (வயது 41). கூலி தொழிலாளி. இவருக்கு மது குடிக்கும் பழக்கம் இருந்ததாக கூறப்படுகிறது. மது குடித்து விட்டு சரியாக வேலைக்கு செல்வது இல்லையாம். இதனால் வினோஜ் பால்டனிடம் இருந்து அவருடைய மனைவி பிரிந்து சென்று விட்டார்.
இதையடுத்து அவர் தன்னை மனைவியுடன் சேர்த்து வைக்கும்படி கூறி தாயிடம் வற்புறுத்தி வந்தார். அதற்கு அவர், தினந்தோறும் வேலைக்கு சென்றால் தான் உனது மனைவியிடம் பேசி அழைத்து வருவேன் என்றார்.
ஆயுள் தண்டனை
இதனால் ஆத்திரம் அடைந்த வினோஜ் பால்டன் கடந்த 2012–ம் ஆண்டு தனது தாயை அடித்துக் கொலை செய்தார். இந்த வழக்கில் அவருக்கு ஆயுள் தண்டனை விதிக்கப்பட்டது.
இதையடுத்து அவர் பாளையங்கோட்டை மத்திய சிறையில் அடைக்கப்பட்டார். கடந்த சில ஆண்டுகளாக சிறையில் இருந்து வந்தார்.
சாவு
வினோஜ் பால்டனுக்கு ஆஸ்துமா நோய் இருந்ததாக கூறப்படுகிறது. இந்த நிலையில் அவருக்கு நேற்று காலை திடீரென்று மூச்சு திணறல் ஏற்பட்டது. அவரை சிகிச்சைக்காக சிறை காவலர்கள் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் அவர் செல்லும் வழியிலேயே பரிதாபமாக இறந்தார்.
இதுகுறித்து சிறை அதிகாரிகள் கொடுத்த புகாரின் அடிப்படையில், பெருமாள்புரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Related Tags :
Next Story