விருது பெற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்


விருது பெற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம்; கலெக்டர் தகவல்
x
தினத்தந்தி 28 Feb 2020 10:15 PM GMT (Updated: 28 Feb 2020 2:46 PM GMT)

விருது பெற கலைஞர்கள் விண்ணப்பிக்கலாம் என்று கலெக்டர் உமா மகேஸ்வரி தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் வெளியிட்டுள்ள ஒரு செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளதாவது:-

புதுக்கோட்டை,

தமிழ்நாட்டின் கலை பண்புகளை மேம்படுத்தும் மற்றும் பாதுகாக்கும் நோக்கிலும், கலைஞர்களின் கலை பண்புகளை சிறப்பிக்கும் வகையிலும் மாவட்ட கலெக்டர் தலைமையில் செயல்படும் மாவட்ட கலை மன்றம் மூலமாக 18 வயதுக்கு உட்பட்டோருக்கு கலை இளமணி, 19 வயது முதல் 35 வயது பிரிவினருக்கு கலை வளர்மணி, 36 வயது முதல் 50 வயது பிரிவினருக்கு கலை சுடர்மணி, 51 வயது முதல் 60 வயது பிரிவினருக்கு கலை நன்மணி, 61 வயதுக்கு மேற்பட்ட பிரிவினருக்கு கலை முதுமணி என வயதுக்கு தக்க விருதுகள் ஆண்டுதோறும் வழங்கப்பட்டு வருகிறது.

இதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் குரலிசை, பரத நாட்டியம், ஓவியம், சிற்பம் மற்றும் நாடக கலைஞர்கள், நாதசுரம், தவில், வயலின், மிருதங்கம், வீணை, புல்லாங்குழல் உள்ளிட்ட இசைக்கருவிகள் இசைக்கும் கலைஞர்கள், கரகம், காவடி, பொய்க்கால் குதிரை, அரசன் அரசி ஆட்டம், கூத்து முதலிய கலைகள் உள்ளிட்ட அனைத்து நாட்டுப்புறக்கலைகள் மற்றும் பாடல் ஆசிரியர்கள் ஆகியோர் புதுக்கோட்டை மாவட்ட கலைஞர்களுக்கான விருது பெற தங்களது சுய விவர குறிப்புடன் வயது மற்றும் பணியறிவு ஆகியவற்றை குறிப்பிட்டு புகைப்படம் இணைத்து சான்றுகளுடன் மண்டல உதவி இயக்குனர், கலை பண்பாட்டுத்துறை, நைட்சாயில் டெப்போ ரோடு, மூலத்தோப்பு, ஸ்ரீரங்கம், திருச்சி என்ற முகவரிக்கு வருகிற 10-ந் தேதிக்குள் அனுப்பி வைக்க வேண்டும்.

மாவட்ட கலை மன்ற விருதாளர் தேர்வுக்குழுவினரால் தேர்வு செய்யப்படும் கலைஞர்களுக்கு அரசு விழாவில் இவ்விருது வழங்கப் படும். இறுதி தேதிக்கு பிறகு பெறும் விண்ணப்பங்கள் மற்றும் வயது சான்று, கலைத்துறையில் ஆற்றியுள்ள பணி விவரங்கள் போதிய அளவு இல்லாத விண்ணப்பங்கள் நிராகரிக்கப்படும். ஏற்கனவே இவ்விருதுக்கான விண்ணப்பம் அளித்து உள்ளவர்கள் மீண்டும் விண்ணப்பிக்க தேவையில்லை. இவ்விருதுக்கு விண்ணப்பிப்பது தொடர்பாக மேலும் விவரம் வேண்டுவோர் கலை பண்பாட்டுத்துறையின் திருச்சி மண்டல அலுவலகத்தை 0431-2434122 என்ற தொலைபேசி எண்ணில் தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் தெரிவித்துள்ளார்.

Next Story