தொழிலாளியை சுட்டுக்கொன்ற செம்மரக் கடத்தல்காரருக்கு ஆயுள் தண்டனை


தொழிலாளியை சுட்டுக்கொன்ற செம்மரக் கடத்தல்காரருக்கு ஆயுள் தண்டனை
x
தினத்தந்தி 28 Feb 2020 10:00 PM GMT (Updated: 28 Feb 2020 4:17 PM GMT)

வனத்துறையினரிடம் காட்டிக் கொடுப்பதாக மிரட்டிய கூலித்தொழிலாளியை துப்பாக்கியால் சுட்டுக்கொலை செய்த செம்மரக்கடத்தல்காரருக்கு ஆயுள் தண்டனை விதித்து வேலூர் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியது.

வேலூர், 

அணைக்கட்டு தாலுகா முள்பாடி கிராமத்ைத சேர்ந்தவர் அண்ணாமலை. இவரது மகன் தியாகராஜன் (வயது 36). செம்மரக்கடத்தலில் ஈடுபட்டு வந்தார். ஒடுகத்தூர் ஓராஜபாளையம் பகுதியை சேர்ந்த கூலித்தொழிலாளியான சம்பத் (49) என்பவர் வனத்துறை அதிகாரிகளுக்கு உதவியாக இருந்து வந்தார்.

இந்த நிலையில் தியாகராஜனின் செம்மரக்கடத்தல் குறித்து சம்பத்துக்கு தெரியவந்தது. இதையடுத்து சம்பத், தியாகராஜனை மிரட்டி அவ்வப்போது பணம் வாங்கி வந்ததாக தெரிகிறது. சம்பத்தின் தொந்தரவு நாளுக்குநாள் அதிகரித்தது. ஒருகட்டத்தில் தியாகராஜன் பணம் கொடுக்காமல் இருந்துள்ளார். இதனால் ஆத்திரமடைந்த சம்பத் பணம் தரவில்லை என்றால் செம்மரம் கடத்துவது குறித்து வனத்துறை அதிகாரிகளிடம் தெரிவித்து விடுவதாக மிரட்டினார்.

இதனால் ஆத்திரமடைந்த தியாகராஜன், அவரை கொலை செய்ய திட்டமிட்டார். அதன்படி கடந்த 2013-ம் ஆண்டு, தியாகராஜன் ஒடுகத்தூர் பறவைமலை சுடுகாடு அருகே உள்ள ஒரு கோவிலுக்கு அழைத்துச் சென்றுள்ளார். அங்கு தான் மறைத்து வைத்திருந்த நாட்டுத்துப்பாக்கியால் சம்பத்தை சுட்டுக் கொலை செய்தார்.

இதுகுறித்து வேப்பங்குப்பம் போலீசார் வழக்குப்பதிவு செய்து தியாகராஜனை கைது செய்தனர்.

இந்த வழக்கு வேலூர் மாவட்ட கூடுதல் அமர்வு நீதிமன்றத்தில் நடந்து வந்தது. நேற்று இந்த வழக்கின் மீதான தீர்ப்பை நீதிபதி வெற்றிச்செல்வி வழங்கினார். அந்த தீர்ப்பில், தியாகராஜனுக்கு ஆயுள் தண்டனையும், ரூ.7 ஆயிரம் அபராதமும் விதிக்கப்பட்டது.

பின்னர் தியாகராஜனை போலீசார் வேலூர் மத்திய ஆண்கள் ெஜயிலில் அடைக்க அழைத்துச் சென்றனர்.

Next Story