மாமல்லபுரத்தில் டெம்போவில் ஏற்றி சென்ற கண்ணாடிகள் குத்தி வாலிபர் சாவு


மாமல்லபுரத்தில் டெம்போவில் ஏற்றி சென்ற கண்ணாடிகள் குத்தி வாலிபர் சாவு
x
தினத்தந்தி 29 Feb 2020 4:30 AM IST (Updated: 29 Feb 2020 1:29 AM IST)
t-max-icont-min-icon

மாமல்லபுரத்தில் டெம்போவில் ஏற்றி சென்ற கண்ணாடிகள் குத்தி வாலிபர் பரிதாபமாக இறந்தார்.

மாமல்லபுரம்,

செங்கல்பட்டு மாவட்டம், மாமல்லபுரத்தை அடுத்த புலியூரை சேர்ந்தவர் நவாப், இவரது மகன் சர்தார் (வயது25). பழைய கண்ணாடிகளை வியாபாரம் செய்யக்கூடியவர். இவர் மாமல்லபுரத்தில் பல இடங்களில் சேகரித்த பழைய கண்ணாடிகளை ஏற்றிக்கொண்டு மினி டெம்போவில் திருக்கழுக்குன்றம் நோக்கி சென்று கொண்டிருந்தார். டெம்போவின் பின்புறம் சர்தார் அமர்ந்து இருந்தார்.

மாமல்லபுரம் அருகே அம்பாள் நகரை டெம்போ நெருங்கும்போது அங்குள்ள வேகத்தடையில் ஏறி குலுங்கும்போது திடீரென கண்ணாடிகள் சரிந்து டேம்போவில் அமர்ந்து இருந்த சர்தார் வயிற்றில் குத்தியது.

இதில் அவரது வயிற்றில் கண்ணாடி துண்டுகள் அறுத்து ரத்தம் கொட்டிய நிலையில் மயங்கி விழுந்தார். அவர் ஆம்புலன்ஸ் மூலம் மாமல்லபுரம் அரசு ஆஸ்பத்திரிக்கு அழைத்து செல்லப்பட்டார். அங்கு அவர் சிகிச்சை பலனின்றி பரிதாபமாக இறந்தார். அவரது உடல் பிரேத பரிசோதனைக்காக செங்கல்பட்டு அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது.

இந்த விபத்து குறித்து மாமல்லபுரம் போலீஸ் இன்ஸ்பெக்டர் வடிவேல்முருகன், சப்-இன்ஸ்பெக்டர் குப்புசாமி ஆகியோர் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.

Next Story