குழந்தையை அடித்ததால் ஆத்திரம் கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி உடலை தூக்கில் தொங்க விட்டு நாடகமாடியது அம்பலம்


குழந்தையை அடித்ததால் ஆத்திரம்   கணவரை கழுத்தை நெரித்து கொன்ற மனைவி   உடலை தூக்கில் தொங்க விட்டு நாடகமாடியது அம்பலம்
x
தினத்தந்தி 29 Feb 2020 3:30 AM IST (Updated: 29 Feb 2020 1:39 AM IST)
t-max-icont-min-icon

குழந்தையை அடித்ததால் ஆத்திரத்தில் கணவரின் கழுத்தை நெரித்துக்கொலை செய்த பெண், அவரது உடலை தூக்கில் தொங்கவிட்டு, அவர் தற்கொலை செய்து கொண்டதாக நாடகமாடினார். அவரை போலீசார் கைது செய்தனர்.

திருவொற்றியூர், 

சென்னை புதுவண்ணாரப்பேட்டை வ.உ.சி.நகரைச் சேர்ந்தவர் தணிகைவேல் (வயது 46). இவர், எண்ணூரில் உள்ள தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வந்தார்.

இவருடைய மனைவி ரேகா (40). இவர்களுக்கு 2 குழந்தைகள் உள்ளனர். கடந்த 2 நாட்களுக்கு முன்பு மதுபோதையில் வீட்டுக்கு வந்த தணிகைவேல் மனைவியிடம் தகராறில் ஈடுபட்டதுடன், குழந்தைகளை அடித்து உதைத்தார்.

இதனால் கணவன்-மனைவி இடையே கடும் மோதல் ஏற்பட்டது. இதில் விரக்தி அடைந்த தணிகைவேல் வீட்டில் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டதாக புதுவண்ணாரப்பேட்டை போலீசில் ரேகா புகார் செய்தார்.

கழுத்தை நெரித்துக்கொலை

அதன்பேரில் போலீசார், தணிகைவேல் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்கு அனுப்பி வைத்தனர். பிரேத பரிசோதனை அறிக்கையில் தணிகைவேல் கழுத்தை நெரித்துகொலை செய்யப்பட்டு இருப்பது தெரிந்தது.

இது குறித்து திருவொற்றியூர் போலீஸ் உதவி கமிஷனர் ஆனந்தகுமார், புதுவண்ணாரப்பேட்டை போலீஸ் இன்ஸ்பெக்டர் சரவணன் ஆகியோர் ரேகாவிடம் விசாரணை செய்தனர். அதில் ரேகா, தனது கணவரை கழுத்தை நெரித்து கொலை செய்தது தெரிந்தது.

இதையடுத்து ரேகாவை போலீசார் கைது செய்தனர். போலீசாரிடம் அவர் அளித்துள்ள வாக்குமூலம் வருமாறு:-

குழந்தையை அடித்ததால் ஆத்திரம்

சம்பவத்தன்று குடித்துவிட்டு தகராறு செய்த தணிகைவேல், குழந்தையை அடித்ததால் எனக்கு கோபம் வந்தது. ஆத்திரத்தில் அவருடைய கழுத்தை பிடித்து நெரித்தேன். இதில் அவர் இறந்து விட்டதால் உடலை தூக்கில் தொங்க விட்டு அவர் தற்கொலை செய்துகொண்டதாக போலீசில் கூறி நாடகமாடினேன்.

இவ்வாறு அவர் கூறினார்.

ரேகா மட்டும் அவரது கணவரை கொலை செய்தாரா? அல்லது அவருக்கு வேறு யாரேனும் உதவினார்களா? என்று போலீசார் விசாரித்து வருகிறார்கள்.

Next Story