கிராமசபை கூட்டத்துக்கு அழைப்பு இல்லை - யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர் புகார்
கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள முறையாக அழைப்பிதழ் அனுப்பவில்லை என்று யூனியன் கூட்டத்தில் கவுன்சிலர் புகார் தெரிவித்தனர்.
சிவகாசி,
சிவகாசி ஊராட்சி ஒன்றிய கவுன்சில் முதல் கூட்டம் யூனியன் அலுவலகத்தில் உள்ள கூட்டஅரங்கில் நடைபெற்றது. யூனியன் தலைவர் முத்துலட்சுமி தலைமை தாங்கினார். இதில் துணைத்தலைவர் விவேகன்ராஜ், வட்டார வளர்ச்சி அதிகாரிகள் ரவி, ராமமூர்த்தி மற்றும் ஒன்றிய கவுன்சிலர்கள் கலந்து கொண்டனர். வட்டார வளர்ச்சி அதிகாரி ராமமூர்த்தி வரவேற்று பேசினார்.
பின்னர் ஒன்றிய அதிகாரிகளை, வட்டார வளர்ச்சி அலுவலர் ரவி கவுன்சிலர் களுக்கு அறிமுகம் செய்து வைத்தார். பின்னர் தீர்மானங்கள் வாசிக்கப்பட்டன.
கூட்டத்தில் வளர்ச்சி திட்ட பணிகள், செலவினங்கள், புதிய தினக்கூலி ஊழியர்கள் நியமனம் உள்ளிட்ட 25 தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. பின்னர் தீர்மானங்களின் மீது விவாதம் நடைபெற்றது. அதன் விவரம் வருமாறு:-
ராமானுஜம்: வாக்குப்பதிவு எண்ணிக்கைக்கு அதிகஅளவில் செலவு செய்யப்பட்டுள்ளதாக இங்கே மன்றத்தில் தீர்மானம் வாசிக்கப்பட்டது. அந்த செலவு விவரங்களை விரிவாக தெரிவிக்க வேண்டும். அதிகாரிகள் அதற்கான செலவு விவரத்தை வழங்க வேண்டும்.
வட்டார வளர்ச்சி அதிகாரி ரவி: செலவு விவரங்கள் குறித்து அனைத்து தகவல்களும் கவுன்சிலர்களுக்கு தர ஏற்பாடு செய்கிறேன். வாக்கு எண்ணிக்கையின் போது பணியில் இருந்த அதிகாரிகள் சிலர் தற்போது இங்கு பணியில் இல்லை. இடமாற்றம் காரணமாக வெளி இடங்களுக்கு சென்றுவிட்டனர். மேலும் செலவு விவரங்கள் குறித்த தகவல்கள் அலுவலகத்தில் இருக்கிறது. அதை கொண்டு உங்கள் சந்தேகங்கள் தீர்க்கப்படும்.
மீனாட்சி சுந்தரி: எனது வார்டுக்கு உட்பட்ட வெள்ளூர் கிராமத்தில் பல இடங்களில் சாலைகள் மிகவும் மோசமாக உள்ளது. இந்த சாலைகளை சரி செய்து தர வேண்டும்.
தலைவர் முத்துலட்சுமி: உங்கள் கோரிக்கைகள் அனைத்தும் நிறைவேற்றிதரப்படும். அதிகாரிகளை அனுப்பி அங்கு ஆய்வு நடத்தி சாலைகளை புதுப்பிக்க நடவடிக்கை எடுக்கப்படும்.
ஜெகத்சிங்பிரபு: சிவகாசி ஊராட்சி ஒன்றியத்துக்கு உட்பட்ட பகுதியில் இருந்து தேர்வு செய்யப்பட்ட அனைத்து கவுன்சில் பகுதிகளுக்கும் வளர்ச்சி திட்டபணிகள் சமமாக இருக்க வேண்டும். அ.தி.மு.க. கவுன்சிலர்களை மாற்றாந்தாய் கண்ணோட்டத்தோடு பார்க்கக்கூடாது. ஓட்டு போட்ட மக்களுக்கு நாம் அனைவரும் நல்லது செய்ய வேண்டும்.
தலைவர்: அனைத்து வார்டுகளில் உள்ள பிரச்சினைகளும் தீர்க்கப்படும். யாரையும் மாற்றாந்தாய் கண்ணோட்டத்தில் பார்க்க மாட்டோம். முருகவேல்:எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் வாருகால் நிரம்பி கவுநீர் செல்ல முடியாத நிலையில் உள்ளது. இதனால் அந்தபகுதியில் வைரஸ் காய்ச்சல் பரவுகிறது. இதை சரி செய்து கொடுக்க வேண்டும்.
சுடர்வள்ளி: பள்ளப்பட்டி பஞ்சாயத்து பகுதியில் ராஜீவ்காந்தி குடிநீர் திட்டத்தின் கீழ் குடிநீர் வினியோகம் செய்யப்படுகிறது. ஆனால் இந்த குடிநீர் சில பகுதிக்கு வினியோகம் செய்யப்படுவதில்லை. இதனால் அதே பஞ்சாயத்தில் வசிக்கும் பல குடும்பத்தினர் குடிநீர் கிடைக்காமல் அவதிஅடைகிறார்கள். காசு கொடுத்து வாங்கி குடிநீரைபயன்படுத்தும்நிலை தொடர்கிறது.
இந்த பிரச்சினையை சரி செய்ய தலைவர் உரியநடவடிக்கை எடுக்க வேண்டும்.
கணேசன்: எனது வார்டுக்கு உட்பட்ட பகுதியில் உள்ள பிரச்சினைகளை நான் ஒன்றிய அலுவலகத்தில் தெரிவிக்க வேண்டுமா? பஞ்சாயத்து நிர்வாகத்திடம் தெரிவிக்க வேண்டுமா? என்னை ஓட்டு போட்டு வெற்றி பெற செய்த மக்களுக்கு நல்லது செய்ய எனக்கு ஒரு வழி சொல்லுங்கள். கவுன்சிலர்களின் குறைகளை கேட்டு நிர்வர்த்தி செய்ய அதிகாரிகளை நியமியுங்கள். கடந்த மாதம் நடந்த கிராமசபை கூட்டத்தில் கலந்து கொள்ள முறையாக அழைப்பிதழ் அனுப்ப வில்லை.
நிகழ்ச்சி தொடங்குவதற்கு சிறிது நேரத்துக்கு முன்னர் போனில் தொடர்பு கொண்டு என்னை நிகழ்ச்சியில் கலந்துகொள்ள அழைக்கின்றனர். அரசு விழாக்கள் நடைபெறும்போது ஒன்றிய கவுன்சிலர்களை கட்டாயம் அழைக்க வேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் ஒரு வாரத்திற்கு முன்னர் தகவல் தெரிவிக்க வேண்டும்.
தனலட்சுமி கண்ணன்: எனக்கும் உரிய அழைப்பு அனுப்பவில்லை. யூனியன் தலைவர் கலந்து கொள்கிறார் என்ற தகவல் கிடைத்து நான் கலந்து கொண்டேன்.
வட்டார வளர்ச்சி அதிகாரி ரவி: பஞ்சாயத்து நிர்வாகிகளை அழைத்து தனிகூட்டம் போட்டு உரிய அறிவுறுத்தல் செய்யப்படும். இனி இதுபோன்ற தவறுகள் நடக்காது.
இவ்வாறுவிவாதம் நடைபெற்றது. முடிவில் துணைத் தலைவர் விவேகன்ராஜ் நன்றி கூறினார்.
Related Tags :
Next Story