மருதேப்பள்ளியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்


மருதேப்பள்ளியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி முகாம் கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 Feb 2020 4:15 AM IST (Updated: 29 Feb 2020 2:14 AM IST)
t-max-icont-min-icon

மருதேப்பள்ளியில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாமினை கலெக்டர் பிரபாகர் தொடங்கி வைத்தார்.

பர்கூர்,

கிரு‌‌ஷ்ணகிரி மாவட்டம் பர்கூர் ஊராட்சி ஒன்றியத்திற்குட்பட்ட மருதேப்பள்ளி கிராமத்தில் கால்நடைகளுக்கு கோமாரி நோய் தடுப்பூசி போடும் முகாம் நடந்தது. இதை கலெக்டர் பிரபாகர், பர்கூர் சட்டமன்ற உறுப்பினர் சி.வி.ராஜேந்திரன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். இதில் கலெக்டர் பிரபாகர் பேசியதாவது:-

கோமாரி தடுப்பூசி திட்டத்தின்கீழ் 2019-20-ம் ஆண்டில் முதலாவது சுற்று தடுப்பூசி போடும் முகாம் இன்று தொடங்கி உள்ளது. வருகிற மார்ச் 19-ந் தேதி வரை 21 நாட்கள் தொடர்ந்து போடப்படும். இத்திட்டத்தின்கீழ் மாவட்டத்தில் உள்ள 4 லட்சத்து 19 ஆயிரம் பசு மற்றும் எருமையினங்களுக்கு தொடர்ச்சியாக தடுப்பூசி போடும் பணி கால்நடை பராமரிப்புத்துறையினரால் மேற்கொள்ளப்பட உள்ளது.

மாவட்டத்தில் உள்ள அனைத்து கிராமத்திலும் பசுவினம் மற்றும் எருமையினம் கால்நடைகளுக்கு அந்தந்த பகுதி கால்நடை உதவி மருத்துவர் தலைமையிலான குழு முகாமிட்டு, 100 சதவீதம் விடுபடாமல் கோமாரி நோய் தடுப்பூசி போடும் பணி மேற்கொள்ளப்படும். எனவே, கால்நடை விவசாயிகள் இந்த முகாம்களில் தங்களது கால்நடைகளை கொண்டு வந்து கோமாரி நோய் தடுப்பூசி தவறாது போட்டுக்கொள்ளுமாறு கேட்டுக்கொள்கிறேன். இவ்வாறு அவர் பேசினார்.

இந்த நிகழ்ச்சியில் கால்நடை பராமரிப்புத்துறை மண்டல இணை இயக்குனர் டாக்டர் மனோகரன், துணை இயக்குனர் டாக்டர் இளங்கோவன், உதவி இயக்குனர்கள் மரியசுந்தர், அருள்ராஜ், டாக்டர்கள் சிவசங்கர், சரவணகுமார், ஊராட்சி மன்ற தலைவர் செல்வம் மற்றும் கால்நடை பராமரிப்புத்துறை அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

Next Story