குடியுரிமை திருத்த சட்டம் பிரதமர் மோடி எந்தநிலையிலும் பின் வாங்க மாட்டார் பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில், இல.கணேசன் பேச்சு
குடியுரிமை திருத்த சட்டத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி எந்தநிலையிலும் பின் வாங்க மாட்டார் என்று சென்னையில் நடந்த பா.ஜ.க. ஆர்ப்பாட்டத்தில், இல.கணேசன் கூறினார்.
சென்னை,
குடியுரிமை திருத்த சட்டம் (சி.ஏ.ஏ.), தேசிய குடிமக்கள் பதிவேடு (என்.ஆர்.சி.), தேசிய மக்கள் தொகை பதிவேடு (என்.பி.ஆர்.) ஆகியவற்றிற்கு எதிராக தி.மு.க. மற்றும் அதன் கூட்டணிகள் முஸ்லிம்களிடம் பொய்யான தகவலை பரப்பி பீதியை உருவாக்குவதாக கூறியும், அவர்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதை வலியுறுத்தியும் தமிழக பா.ஜ.க. சார்பில் நேற்று பல்வேறு மாவட்டங்களில் பேரணி நடைபெற்றது.
சென்னையில் சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே இருந்து தலைமைச் செயலகம் நோக்கி பேரணியாக சென்று தலைமை செயலாளரிடம் மனு அளிக்கப்படும் என்று அறிவிக்கப்பட்டிருந்தது.
அதன்படி சென்னை சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே நேற்று மாலையில் பா.ஜ.க.வினர் பேரணியாக திரண்டு வந்தனர். அங்கு சி.ஏ.ஏ., என்.ஆர்.சி., என்.பி.ஆர். ஆகிய சட்டங்களுக்கு ஆதரவாகவும், தி.மு.க. உள்ளிட்ட கட்சிகளை கண்டித்தும் கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
வடமாநிலத்தவர்கள்
ஆர்ப்பாட்டத்துக்கு பா.ஜ.க. மூத்த தலைவர் இல.கணேசன் தலைமை தாங்கினார். நடிகர் ராதாரவி, பொதுச்செயலாளர் கே.எஸ்.நரேந்திரன், சென்னை கோட்ட பொறுப்பாளர் எம்.சக்கரவர்த்தி, இணை பொறுப்பாளர் எம்.ஜெய் சங்கர் மற்றும் மாவட்டத் தலைவர்கள் முன்னிலை வகித்தனர்.
பா.ஜ.க. செயற்குழு உறுப்பினர் ம.பொ.சி.மாதவி பாஸ்கரன், இளைஞரணி தலைவர் வினோஜ் பி.செல்வம், செயலாளர் ஜி.சுரேஷ் கர்ணா, மீனவரணி தலைவர் சதீஷ்குமார், சிறுபான்மை பிரிவு செயலாளர் எம்.ஜே.கிளாரன்ஸ் உள்பட ஏராளமான நிர்வாகிகளும், தொண்டர்களும் கலந்துகொண்டனர். குறிப்பாக சென்னையில் வசிக்கும் வடமாநிலத்தை சேர்ந்த பா.ஜ.க.வினர் அதிகளவில் கலந்துகொண்டனர். அவர்கள் தண்ணீர் பாட்டில், பிஸ்கெட் போன்ற பொருட்களை அனைவருக்கும் வழங்கினர்.
இந்து முன்னணி மாநகர தலைவர் ஏ.டி.இளங்கோவன், முஸ்லிம் மகிளா இயக்க தலைவர் பாத்திமா அலி, அகில இந்திய தெலுங்கு சம்மேளனத்தின் தலைவர் டாக்டர் சி.எம்.கே.ரெட்டி, பொதுச்செயலாளர் ஆர்.நந்தகோபால் உள்ளிட்டோர் போராட்டத்துக்கு ஆதரவு தெரிவித்து பங்கேற்றனர்.
இல.கணேசன் பேச்சு
பேரணியை முன்னெடுத்து செல்வதற்காக சேப்பாக்கம் விருந்தினர் மாளிகை அருகே வேன் நிறுத்தப்பட்டு இருந்தது. அந்த வேன் மேடையாக பயன்படுத்தப்பட்டது. அந்த வேனில் நின்றவாறு இல.கணேசன் கூட்டத்தில் பேசினார். அப்போது அவர் கூறியதாவது:-
குடியுரிமை திருத்த சட்டம் நாடாளுமன்றத்தில் நிறைவேறிவிட்டது. ஜனாதிபதியும் ஒப்புதல் அளித்துவிட்டார். இனி எந்த கொம்பனாலும் அதை மாற்ற முடியாது. சட்டவிரோதமாக குடியேறியவர்களை வாக்காளர்களாக மாற்றி விட்டனர். இவ்வாறு லட்சக்கணக்கான வாக்காளர்களை உருவாக்கிய நேரத்தில், குடியுரிமை திருத்த சட்டத்தின் மூலம் அவர்களை வெளியேற்றினால் தன்னுடைய முதல்-அமைச்சர் கனவு நிறைவேறாது என்று மு.க.ஸ்டாலின் கருதுகிறார். கள்ளத்தனமான ஓட்டுக்காக சொந்த நாட்டை துண்டாட நினைக்கிறார். ஓட்டு வங்கிக்காக நாட்டின் நலனுக்கு எதிரான துரோகத்தை தி.மு.க. செய்கிறது.
குடியுரிமை திருத்த சட்டத்தால் இந்தியாவில் வசிக்கும் முஸ்லிம்களுக்கும், தமிழ்நாட்டில் வசிக்கும் முஸ்லிம்களுக்கும் எந்தவித பாதிப்பும் இல்லை. ஆனால் காங்கிரசும், தி.மு.க.வும் பொய்யை திரும்ப, திரும்ப பரப்புகிறார்கள். முஸ்லிம்கள் தெளிவானவர்கள். தேச பக்தர்கள். பாகிஸ்தான் பிரிந்தபோது, நாங்கள் இந்தியாவில்தான் இருப்போம் என்று இருக்கிறார்கள்.
குடியுரிமை திருத்த சட்டத்தில் இருந்து பிரதமர் நரேந்திர மோடி எந்தநிலையிலும் பின் வாங்க மாட்டார். விரைவில் கணக்கெடுப்பு பணி தொடங்கும். எனவே தி.மு.க.வை நம்பி முஸ்லிம்கள் ஏமாற வேண்டாம்.
இவ்வாறு அவர் பேசினார்.
ராதாரவி பேச்சு
நடிகர் ராதாரவி பேசுகையில், “தமிழ்நாடு நலன் காக்கப்பட வேண்டும் என்றால் பிரதமர் நரேந்திர மோடியின் கரத்தை வலுப்படுத்த வேண்டும். பிரதமர் நரேந்திர மோடி, மத்திய மந்திரி அமித்ஷா 200 கருணாநிதி, 200 ஜெயலலிதா, 300 எம்.ஜி.ஆருக்கு சமமானவர்கள்.’ என்றார்.
ஆர்ப்பாட்டம் முடிந்தவுடன் அனைவரும் பேரணியாக தலைமை செயலகம் நோக்கி செல்வார்கள் என்று எதிர்பார்க்கப்பட்டது. இந்தநிலையில் மேடையில் பேசிய பொதுச்செயலாளர் நரேந்திரன், பா.ஜ.க.வினர் அனைவரும் அமைதியாக கலைந்து செல்லும்படி கேட்டுக்கொண்டார். அதை ஏற்று அனைவரும் கலைந்து சென்றனர்.
தலைமை செயலாளரிடம் மனு
பின்னர் இல.கணேசன் தலைமையில் நிர்வாகிகள் நரேந்திரன், சக்கரவர்த்தி, ஜெய்சங்கர் ஆகியோர் சென்னை தலைமை செயலகம் சென்றனர். அங்கு தலைமை செயலாளர் க.சண்முகத்தை சந்தித்து மனு அளித்தனர். அந்த மனுவில் கூறியிருப்பதாவது:-
குடியுரிமை திருத்த சட்ட எதிர்ப்பு போராட்டத்துக்கு நீதிமன்றமும், போலீஸ்துறையும் தடை விதித்த போதிலும், போலீசார் மீதே வன்முறை தாக்குதலில் ஈடுபடுகிறார்கள். அதுபோல் பொதுமேடைகளில் பேசும் தி.மு.க. மற்றும் அதன் கூட்டணி கட்சி தலைவர்கள் அநாகரீகமாகவும், தரம் தாழ்ந்தும், மத கலவரங்களை தூண்டும் வகையிலும் இந்து மதத்தை கொச்சைப்படுத்தியும், இந்து கடவுள்களை இழிவுப்படுத்தியும் பேசி வருகிறார்கள்.
தமிழகத்தை கலவர பூமியாக மாற்றத் துடிக்கும் தீய சக்திகள் மீது தக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். இவர்களது போராட்டத்துக்கு தடை விதிக்க வேண்டும்.
இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.
பா.ஜ.க. போராட்டத்தையொட்டி சென்னை சேப்பாக்கம் பகுதியில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டிருந்தது.
இதுபோல மதுரை, திருச்சி, தூத்துக்குடி, சிவகங்கை, திண்டுக்கல், தேனி, ராமநாதபுரம், தஞ்சை, கரூர் உள்ளிட்ட இடங்களிலும் ஊர்வலம் நடைபெற்றது.
Related Tags :
Next Story