மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி தொழிலாளர்கள் குடும்பத்துடன் சாலை மறியல் போக்குவரத்து பாதிப்பு


மீண்டும் வேலை வழங்க வலியுறுத்தி   தொழிலாளர்கள் குடும்பத்துடன் சாலை மறியல்   போக்குவரத்து பாதிப்பு
x
தினத்தந்தி 29 Feb 2020 4:15 AM IST (Updated: 29 Feb 2020 3:41 AM IST)
t-max-icont-min-icon

திருவள்ளூர் அருகே தொழிற்சாலையில் இருந்து நீக்கப்பட்ட தொழிலாளர்களுக்கு மீண்டும் வேலை தர வலியுறுத்தி தொழிலாளர்கள் குடும்பத்துடன் சாலை மறியலில் ஈடுபட்டனர்.

திருவள்ளூர், 

திருவள்ளூரை அடுத்த கடம்பத்தூர் ஒன்றியம் அதிகத்தூர் கிராமத்தில் தனியார் நிறுவனம் ஒன்று இயங்கி வருகிறது. இந்த தனியார் நிறுசனத்தில் 1000-க்கும் மேற்பட்ட தொழிலாளர்கள் பணிபுரிந்து வருகின்றனர்.

இந்நிலையில் அந்த நிறுவனத்துக்கு நிலம் கொடுத்த குடும்பத்தினர்கள் 22 பேர் தொழிலாளர்களாகவும், 173 பேர் நிரந்தர தொழிலாளர்களாகவும், 145 பேர் ஒப்பந்த தொழிலாளர்கள் என மொத்தம் 340 பேர் பணிபுரிந்து வந்தனர்.

இதற்கிடையே அந்த தனியார் நிறுவனத்தை பிரான்ஸ் நாட்டு நிறுவனத்திற்கு விற்று விட்டனர். இதைத் தொடர்ந்து புதிய தொழிற்சாலை நிர்வாகத்தினர் பணிபுரிந்த அனைத்து பணியாளர்களையும் வேலையில் இருந்து நீக்கிவிட்டதாக கூறப்படுகிறது.

சாலை மறியல்

இதை அறிந்த அந்த நிறுவனத்துக்கு நிலம் கொடுத்து பணிபுரிந்து வந்த தொழிலாளர்கள், மீண்டும் அனைவருக்கும் வேலை தர வலியுறுத்தி, கடந்த 65 நாட்களாக நிறுவனத்தின் முன்பு போராட்டத்தில் ஈடுபட்டு வந்தனர்.

ஆனால் இதுவரை அவர்களுக்கு வேலை தருவதற்கு நிர்வாகம் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை என்று கூறப்படுகிறது.

இதைத்தொடர்ந்து திருவள்ளூர்-ஸ்ரீபெரும்புதூர் நெடுஞ்சாலையான அதிகத்தூர் சாலை சந்திப்பு பகுதியில் பாதிக்கப்பட்ட தொழிலாளர்கள் தங்கள் குடும்பத்தாருடன் நேற்று திடீர் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

இந்த போராட்டத்தில் இந்திய கம்யூனிஸ்டு் கட்சியின் தமிழ்நாடு மாநிலச் செயலாளர் முத்தரசன், ஏ.ஐ.டி.யு.சி மாநில பொது செயலாளர் மூர்த்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

போக்குவரத்து பாதிப்பு

இதை தொடர்ந்து திருவள்ளூர் துணை போலீஸ் சூப்பிரண்டு கங்காதரன் தலைமையில் அங்கு 100-க்கும் மேற்பட்ட போலீசார் குவிக்கப்பட்டனர்.

அப்போது சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் மறியலை கைவிட்டு கலைந்து செல்லுமாறு போலீசார் தெரிவித்தனர். இதையடுத்து, போலீசார் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்ட முத்தரசன் உள்பட 300-க்கும் மேற் பட்டோரை கைது செய் தனர். பின்பு அவர்களை திருவள்ளூரில் உள்ள தனியார் திருமண மண்டபத்தில் தங்க வைத்தனர்.

இதன் காரணமாக சுமார் 2 மணி நேரம் போக்குவரத்து பாதிக்கப்பட்டது.

Next Story