தாய், மகளை தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர்கள் 2 பேர் கைது


தாய், மகளை தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர்கள் 2 பேர் கைது
x
தினத்தந்தி 29 Feb 2020 4:20 AM IST (Updated: 29 Feb 2020 4:20 AM IST)
t-max-icont-min-icon

பழவேற்காடு முகத்துவாரத்தில் தாய், மகள் உடல்கள் கரை ஒதுங்கிய வழக்கில், அவர்களை தற்கொலைக்கு தூண்டியதாக உறவினர்கள் 2 பேர் கைது செய்யப்பட்டனர்.

கும்மிடிப்பூண்டி,

திருவள்ளூர் மாவட்டம் கும்மிடிப்பூண்டி அடுத்த சுண்ணாம்புகுளம் கிராமத்தை சேர்ந்தவர் ரவி (வயது 54). கொத்தனார். இவரது மனைவி வீரம்மாள்(43). மகன் பாலமுரளி(24) மற்றும் மகள் தேவயானி (20). ரவி குடும்பத்தினருக்கும் அவரது அண்ணன் சிவா(56) குடும்பத்தினருக்கும் இடையே சொத்து தகராறு காரணமாக முன்விரோதம் இருந்து வந்தது.

இந்த நிலையில், கடந்த சில நாட்களுக்கு முன்பாக சொத்து பிரச்சினை தொடர்பாக ரவியை அவரது அண்ணன் சிவாவும், அவரது குடும்பத்தாரும் சேர்ந்து தாக்கியதாக கூறப்படுகிறது.

இந்த நிலையில், கடந்த 22-ந்தேதி முதல் ரவி தனது குடும்பத்தோடு மாயமாகி விட்டார். இது குறித்து ஆரம்பாக்கம் போலீசார் வழக்கு பதிவு செய்து மாயமான ரவியையும், அவரது குடும்பத்தினரையும் தேடிவந்தனர்.

அதே சமயத்தில் தான் குடும்பத்தோடு தற்கொலை செய்து கொள்ளப்போவதாகவும், அதற்கு அண்ணன் சிவாவின் குடும்பத்தினரே காரணம் எனவும் மாயமான ரவி பேசிய வீடியோ ஒன்று வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியது.

கைது

இந்த நிலையில், பழவேற்காடு முகத்துவாரத்தில் ரவியின் மனைவி வீரம்மாள் மற்றும் அவரது மகள் தேவயானியின் உடல்கள் கரை ஒதுங்கியது. அவர்கள் 2 பேரும் தற்கொலை செய்து கொண்டிருக்கலாம் என்ற சந்தேகத்தில் திருப்பாலைவனம் போலீசார் விசாரணை மேற்கொண்டு வந்தனர்.

இதனைத் தொடர்ந்து மாயமான ரவியும், அவரது மகன் பாலமுரளியும் தற்கொலை செய்துகொண்டார்களா? அவர்களின் கதி என்ன? என்பது குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

கடந்த சில நாட்களாக பழவேற்காடு முகத்துவாரத்தில் ரவியையும், அவரது மகன் பாலமுரளியையும் தொடர்ந்து மீனவர்கள் உதவியோடு தேடும்பணியை போலீசார் மேற்கொண்டனர். ஆனால் அவர்களைப்பற்றி வரை எந்த தகவலும் இதுவரை கிடைக்கவில்லை.

மேலும், வீரம்மாள் மற்றும் மகள் தேவயானி ஆகியோரின் உடல்கள் பிரேத பரிசோதனை முடிந்து உறவினர்களிடம் ஒப்படைக்கப்பட்டது.

இந்த நிலையில் திருப்பாலைவனம் போலீசார், பழவேற்காடு ஏரியில் கரை ஒதுங்கிய தாய், மகள் ஆகியோர் குறித்த வழக்கை, சொத்து பிரச்சினையால் ஏற்பட்ட தகராறில் அவர்களை தற்கொலைக்கு தூண்டிய வழக்காக மாற்றினர். இதையடுத்து அவர்களை தற்கொலைக்கு தூண்டியதாக ரவியின் அண்ணன் சிவா மற்றும் அவரது மகன் அஜித் ஆகியோர் மீது வழக்கு பதிவு செய்து நேற்று கைது செய்தனர்.

Next Story