திருத்துறைப்பூண்டி பகுதியில் நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்


திருத்துறைப்பூண்டி பகுதியில் நேரடி கொள்முதல் நிலையங்களில் தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகள்
x
தினத்தந்தி 28 Feb 2020 11:00 PM GMT (Updated: 2020-02-29T04:30:26+05:30)

திருத்துறைப்பூண்டி பகுதியில் நேரடி கொள்முதல் நிலையங்களில் நெல் மூட்டைகள் தேங்கி கிடக்கின்றன.சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கூடுதலாக தொழிலாளர்களை நியமித்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்யப்படுமா? என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

திருத்துறைப்பூண்டி,

காவிரி டெல்டா பகுதிகளான திருவாரூர், நாகை, தஞ்சாவூர் மாவட்டங்களில் இந்தாண்டு கணிசமான முறையில் நெல் விளைந்துள்ளது. திருவாரூர் மாவட்டம் திருத்துறைப்பூண்டி பகுதியில் 14 ஆயிரத்து 680 ஏக்கர் நிலங்களில் சம்பா நெல் சாகுபடி செய்யப்பட்டு அறுவடை பணி நடைபெற்று வருகிறது.

இதில் 54 இடங்களில் அரசு நேரடி நெல் கொள்முதல் நிலையம் அமைக்கப்பட்டு விவசாயிகளிடம் இருந்து நெல் கொள்முதல் செய்யப்படுகிறது. கொள்முதல் செய்யப்பட்ட நெல் மூட்டைகளை சுந்தரபுரி, கொக்கலாடி, பள்ளங்கோவில், பாமணி, உள்பட 6 இடங்களில் மொத்தமாக சேமித்து வைக்கப்பட்டு லாரிகள் மூலம் அரவைக்காக ஆலைகளுக்கு அனுப்பி வைக்கப்படுகிறது.

தற்போது அறுவடை செய்யப்படும் நெல்லை எந்திரம் மூலம் தூற்றி எடை வைத்து கொள்முதல் செய்ய கூடுதல் சுமைதூக்கும் தொழிலாளர்கள் இல்லாததால் நெல் மூட்டைகள் கொள்முதல் நிலையங்களில் வார கணக்கில் தேங்கி கிடக்கிறது. இவ்வாறு தேங்கி கிடக்கும் நெல் மூட்டைகளை எலிகள் சேதப்படுத்தும் நிலை உள்ளது. எனவே சம்பந்தப்பட்ட துறை அதிகாரிகள் உடனடியாக நடவடிக்கை மேற்கொண்டு கூடுதல் தொழிலாளர்களை நியமித்து நெல் மூட்டைகளை கொள்முதல் செய்ய வேண்டும்.

மேலும் சேமிக்கப்படும் நெல்லை வெயில் மற்றும் மழையில் வீணாகாமல் இருக்க சேமிப்பு கிடங்குகளுக்கு தார்பாய் வழங்க வேண்டும் என விவசாயிகள் எதிர்பார்த்துள்ளனர்.

Next Story