முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. பதிலடி என்னை குறை கூற தகுதி இல்லை என சாடல்


முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமாருக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. பதிலடி என்னை குறை கூற தகுதி இல்லை என சாடல்
x
தினத்தந்தி 28 Feb 2020 11:37 PM GMT (Updated: 28 Feb 2020 11:37 PM GMT)

கோட்சே பரம்பரையில் வந்தவர் சட்டசபையில் அமர தகுதியற்றவர் என்று கூறிய முன்னாள் சபாநாயகர் ரமேஷ் குமாருக்கு பா.ஜனதா எம்.எல்.ஏ. பசனகவுடா பட்டீல் யத்னால் பதிலடி கொடுத்துள்ளார்.

பெங்களூரு, 

பா.ஜனதாவை சேர்ந்த பசனகவுடா பட்டீல் யத்னால் எம்.எல்.ஏ. சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்து வருகிறார். கர்நாடகத்தை சேர்ந்த மூத்த சுதந்திர போராட்ட தியாகி எச்.எஸ்.துரைசாமி பாகிஸ்தான் ஏஜெண்டு என்று அவர் குற்றம்சாட்டினார்.

மேலும் டெல்லி கலவரம் குறித்து கருத்து தெரிவித்த பசனகவுடா பட்டீல் யத்னால், தேசத்துரோகிகளை இனி நேரடியாக மேலே அனுப்பும் பணி தொடங்கிவிட்டதாக கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.

என்னை குறை சொல்ல தகுதி இல்லை

இந்தநிலையில் பசனகவுடா பட்டீல் யத்னால் சித்ரதுர்காவில் நேற்று நிருபர்களுக்கு பேட்டி அளிக்கையில் கூறியதாவது:-

நாதுராம் கோட்சே பரம்பரையில் வந்த பசனகவுடா பட்டீல் யத்னால் சட்டசபையில் இருக்க தகுதியற்றவர் என்று முன்னாள் சபாநாயகர் ரமேஷ்குமார் குறை கூறியுள்ளார். அப்படி என்றால் அவர் அரிச்சந்திரனின் பரம்பரையில் 19-வது சந்ததியா?. அவரது வரலாறு என்ன?, அவர் எவ்வளவு அரசு நிலத்தை ஆக்கிரமித்துள்ளார் என்பது அனைவருக்கும் தெரியும்.

அவர் தான் ஒரு நேர்மையானவர் என்பதை போல் பேசுகிறார். என்னை பற்றி குறை சொல்ல அவருக்கு தகுதி இல்லை. என் மீது விவசாயிகளுக்கு ஆதரவாக நடத்திய போராட்டம் தொடர்பாக 23 வழக்குகள் நிலுவையில் உள்ளன. ஆனால் என் மீது நில முறைகேடு, கற்பழிப்பு, கள்ள ரூபாய் நோட்டுகள் அச்சடிப்பு போன்ற எந்த வழக்கும் இல்லை. அவரிடம் இருந்து தத்துவங்கள், சித்தாந்தங்களை கற்க வேண்டிய அவசியம் எனக்கு இல்லை.

எனக்கு பயம் இல்லை

நான் ஆர்.எஸ்.எஸ். அமைப்பை சேர்ந்தவன் தான் என்பதை ஒப்புக்கொள்கிறேன். ஆனால் நான் தேசவிரோத, பாகிஸ்தானின் ஏஜெண்டு அல்ல. நான் நமது நாட்டுக்கு ஆதரவாக பேசுகிறேன். யாரை கண்டும் எனக்கு பயமில்லை. குடியுரிமை திருத்த சட்ட பிரச்சினையில் மங்களூரு போலீசார் ஒரு திடமான முடிவு எடுத்தனர். இல்லாவிட்டால் மங்களூருவில் டெல்லியை போல் வன்முறை ஏற்பட்டிருக்கும்.

டெல்லி போலீசாரிடம், போராட்டக்காரர்கள் துப்பாக்கியை காட்டுகிறார்கள். அதை எதிர்ப்பதை விட்டுவிட்டு அவர்களுக்கு ஆதரவாக போராட்டம் நடத்தும் காங்கிரசுக்கு வெட்கம் இல்லையா?. எச்.எஸ்.துரைசாமி எந்த வயதில் சுதந்திர போராட்டத்தில் பங்கேற்றார்?. சாவர்க்கரை போல் அவர் தடியடி வாங்கினாரா?. அவரை சிலர் யானை என்று வர்ணித்துள்ளனர். அவர் யானையோ அல்லது பன்றியோ யாருக்கு தெரியும். சாவர்க்கர் பற்றி தரக்குறைவாக பேசிய காங்கிரஸ் தான் முதலில் மன்னிப்பு கேட்க வேண்டும்.

மராட்டியம் வாழ்க

எச்.எஸ்.துரைசாமி போராடியபோது, பசனகவுடா பட்டீல் யத்னால் பிறந்திருந்தாரா? என்று குமாரசாமி கேட்டுள்ளார். குமாரசாமிக்கு ஆயிரக்கணக்கான கோடி ரூபாய் சொத்து எங்கிருந்து வந்தது?. வயிற்று பிழைப்புக்கு வழி இல்லாதவர்கள் ராணுவத்தில் சேருகிறார்கள் என்று ராணுவ வீரர்களை அவர் தரம் தாழ்த்தி பேசினார். எனது பிறப்பை பற்றி பேசும் குமாரசாமியின் தந்தை தேவேகவுடா சுதந்திர போராட்டத்தில் கலந்துகொண்டாரா?.

நகரசபை நிர்வாகம் மற்றும் தோட்டக்கலைத்துறை மந்திரி நாராயணகவுடா, மராட்டியம் வாழ்க என்று முழக்கமிட்டதில் என்ன தவறு உள்ளது?. அவர் நமது நாட்டின் ஒரு பகுதிக்கு வாழ்க என்று கூறியுள்ளாரே தவிர, பாகிஸ்தானுக்கு ஆதரவாக கோஷமிடவில்லை. பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசியவர்களை கண்டித்து கன்னட அமைப்பினர் போராட்டம் நடத்தாதது ஏன்?.

இவ்வாறு பசனகவுடா பட்டீல் யத்னால் கூறினார்.

Next Story