தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்திய நிலங்களுக்கு, உரிய இழப்பீடு வழங்கிய பின்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் - விவசாயிகள் வலியுறுத்தல்
தேசிய நெடுஞ்சாலைக்காக திருப்பத்தூர் பகுதியில் கையகப்படு்த்திய நிலங்களுக்கு உரிய இழப்பீடு தொகை வழங்கிய பின்பு பணிகளை மேற்கொள்ள வேண்டும் என விவசாயிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
திருப்பத்தூர்,
திருப்பத்தூரை சுற்றி காட்டாம்பூர், தேவாரம்பூர், பிராமணப்பட்டி, சுண்ணாம்பிருப்பு, குண்டேந்தல்பட்டி, வாணியன்காடு, தென்மாபட்டு, பட்டாக்குறிச்சி ஆகிய பகுதிகள் உள்ளன. இந்த பகுதிகளுக்குட்பட்ட விளை நிலங்களை கடந்த 2019-ம் ஆண்டு நெடுஞ்சாலைத்துறை ஆணையம் நான்குவழிச் சாலைக்காக கையகப்படுத்தியது. அப்போது ஒரு சென்டுக்கு ரூ.800 முதல் ரூ.3 ஆயிரம் வரை இழப்பீடு அறிவித்தது. ஆனால் இழப்பீடு கூடுதலாக வழங்க வேண்டும் என அப்பகுதி விவசாயிகள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதுகுறித்து கலெக்டர் ஜெயகாந்தன், மாவட்ட வருவாய் ஆய்வாளர் மற்றும் தனி வட்டாட்சியர் ஆகியோரிடம் விவசாயிகள் சார்பில் மனு கொடுக்கப்பட்டுள்ளது. அதில், திருப்பத்தூர் பகுதியில் தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு குறைவாகவே இழப்பீடு நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது.
கடந்த 2015-ம் ஆண்டு இதேபகுதியில் மானாமதுரை தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சென்டுக்கு ரூ.1 லட்சம் வரை வழங்கப்பட்டது. எனவே கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என கோரப்பட்டிருந்தது. இந்த நிலையில் விவசாயிகளுக்கு எவ்வித அறிவிப்புமின்றி வாணியன்காடு பகுதியில் நிலங்களையும் மரங்களையும், தேசிய நெடுஞ்சாலைப்பணி ஒப்பந்தகாரர்கள் சுத்தம் செய்யும் பணியில் ஈடுபட்டனர். இதுகுறித்து விவசாயிகளிடம் கேட்டபோது, நெடுஞ்சாலைத்துறை ஆணையம் மற்றும் மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின்பேரில் பணிகள் மேற்ெகாள்ளப்பட்டு வருவதாக கூறினர்.
இகுறித்து அப்பகுதி விவசாயிகள் கூறும்போது, தேசிய நெடுஞ்சாலைக்காக கையகப்படுத்தப்பட்ட நிலங்களுக்கு சென்டுக்கு ரூ.800 வீதம் ஏக்கருக்கு ரூ.80 ஆயிரம் மட்டுமே வழங்கப்படும் என்று நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது எங்கள் வாழ்வா தாரத்தை பாதிப்பதாக உள்ளது. எனவே இந்த இழப்பீடு தொகைக்கு அரசு மறு பரிசீலனை செய்து கூடுதலாக இழப்பீடு தொகை வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும். அதன் பின்பு தேசிய நெடுஞ்சாலைப்பணிகளை தொடர வேண்டும் என்று கோரிக்கை விடுத்துள்ளனர்.
Related Tags :
Next Story