பரமக்குடி-ராமநாதபுரம் சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி வழக்கு, மத்திய-மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்


பரமக்குடி-ராமநாதபுரம் சாலையில் சுங்கக்கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி வழக்கு, மத்திய-மாநில அரசுகளுக்கு ஐகோர்ட்டு நோட்டீஸ்
x
தினத்தந்தி 28 Feb 2020 10:00 PM GMT (Updated: 28 Feb 2020 11:49 PM GMT)

பரமக்குடி-ராமநாதபுரம் சாலையில் சுங்கக் கட்டணம் வசூலிக்க தடை விதிக்கக் கோரி தொடரப்பட்ட வழக்கில் மத்திய, மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப மதுரை ஐகோர்ட்டு உத்தரவிட்டுள்ளது. ராமநாதபுரத்தைச் சேர்ந்த வக்கீல் முகமது ரஸ்வி, மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மதுரை,

மதுரை-ராமேசுவரம் 4 வழிச்சாலை திட்டத்தில் மதுரையில் இருந்து பரமக்குடி வரை சுமார் 76 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. ஆனால் பரமக்குடியில் இருந்து ராமேசுவரம் வரை 99 கிலோ மீட்டர் தூரத்துக்கு 4 வழிச்சாலை பணிகள் இன்னும் தொடங்கப்படவில்லை.

இந்த நிலையில் பரமக்குடியிலிருந்து ராமநாதபுரம் செல்லும் சாலையில் சுமார் 18 கிலோமீட்டர் தூரம் தரமற்ற சாதாரண இரு வழிச்சாலையில் தான் வாகனங்கள் பயணிக்க வேண்டிய நிலை உள்ளது. இந்த நிலையில் திடீரென தேசிய நெடுஞ்சாலை ஆணையத்தினர் எந்தவித முன் அறிவிப்பும் இன்றி போகலூர் என்ற கிராமத்தின் அருகில் மூவலூரில் சுங்கச்சாவடி மையம் அமைத்து அந்த வழியாக செல்லும் வாகனங்களிடம் சுங்கக்கட்டணம் வசூலித்து வருகின்றனர்.

இந்த சுங்கச்சாவடியில் ஆம்புலன்ஸ், மருத்துவ வசதி, நெடுஞ்சாலைத்துறை ரோந்து வாகனம், கிரேன் வசதி, கழிப்பறை போன்ற எவ்வித அடிப்படை வசதிகளும் செய்து தரப்படவில்லை. ஆம்புலன்ஸ் செல்வதற்கு தனியாக வழி ஏற்படுத்தி தரப்படவில்லை. அவசர சிகிச்சை தேவைப்படுபவர்கள் இவ்வழியில் அவசரமாக செல்வதற்கு வசதிகள் இல்லை. எனவே மூவலூர் சுங்கச்சாவடியில் வாகனங்களிடம் கட்டணம் வசூலிக்க தடை விதிக்க வேண்டும்.

இந்த சுங்கச்சாவடியை உடனடியாக மூடுவதற்கு உத்தரவிட வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த வழக்கு நீதிபதிகள் துரைசாமி, ரவீந்திரன் ஆகியோர் முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது மனுதாரர் வக்கீல் நீலமேகம் ஆஜராகி, பரமக்குடி-ராமநாதபுரம் சாலையானது இரு வழி போக்குவரத்தை கொண்டுள்ளது. அங்கு சுங்கச்சாவடி அமைத்துள்ளது தேசிய நெடுஞ்சாலை சட்டம்-1956 மற்றும் சுப்ரீம் கோர்ட்டு, ஐகோர்ட்டு தீர்ப்புகளுக்கு எதிரானது. எனவே அதை உடனடியாக மூட வேண்டும் என்று வாதாடினார்.

முடிவில், இந்த வழக்கு குறித்து மத்திய-மாநில அரசுகளுக்கு நோட்டீஸ் அனுப்ப நீதிபதிகள் உத்தரவிட்டனர். விசாரணையை 4 வாரங்களுக்கு ஒத்தி வைத்தனர்.

Next Story