குடித்து விட்டு மனைவியுடன் தகராறு: தொழிலாளி உயிருடன் எரித்து கொலை; மாமனார் உள்பட 4 பேர் கைது - கூலிப்படையை ஏவியது அம்பலம்


குடித்து விட்டு மனைவியுடன் தகராறு: தொழிலாளி உயிருடன் எரித்து கொலை; மாமனார் உள்பட 4 பேர் கைது - கூலிப்படையை ஏவியது அம்பலம்
x
தினத்தந்தி 28 Feb 2020 10:15 PM GMT (Updated: 28 Feb 2020 11:49 PM GMT)

கடமலைக்குண்டு அருகே குடித்து விட்டு மனைவியுடன் தகராறு செய்த தொழிலாளி, கூலிப்படையை ஏவி எரித்து கொலை செய்யப்பட்டார். இதுதொடர்பாக அவருடைய மாமனார் உள்பட 4 பேர் கைது செய்யப்பட்டனர்.

கடமலைக்குண்டு,

தேனி மாவட்டம் கடமலைக்குண்டு அருகே உள்ள மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்தவர் செல்லப்பாண்டியன்(வயது 45). இவருடைய மனைவி சித்ரா(38). இவர்களுக்கு 3 குழந்தைகள் உள்ளனர். செல்லப்பாண்டியனுக்கு மதுகுடிக்கும் பழக்கம் இருந்தது. இதனால் கணவன், மனைவிக்கு இடையே கடந்த சில வருடங்களாக தொடர்ந்து தகராறு ஏற்பட்டது.

இந்த நிலையில் கேரளாவில் கூலித்தொழிலாளியாக இருந்த செல்லப்பாண்டியன் கடந்த 6 மாதங்களுக்கு முன்பு கடமலைக்குண்டு கிராமத்திற்கு வந்திருந்தார். அங்கு தனது குழந்தைகளை பார்த்துவிட்டு மீண்டும் கேரளாவிற்கு செல்வதாக கூறிவிட்டு சென்ற செல்லப்பாண்டியன் அதன்பின்னர் வீடு திரும்பவில்லை.

இதுதொடர்பாக சித்ராவிடம் செல்லப்பாண்டியனின் தம்பி ராமராஜ் கேட்டுள்ளார். அப்போது சித்ரா முன்னுக்கு பின் முரணாக பதில்அளித்துள்ளார். இதனால் சந்தேகம் அடைந்த ராமராஜ் தனது அண்ணன் செல்லப்பாண்டியனை கண்டுபிடித்து தருமாறு கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் புகார் செய்தார். இதுதொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து செல்லப்பாண்டியனை தேடி வந்தனர்.

இந்த நிலையில் ராமநாதபுரம் மாவட்டம் உச்சிப்புளி போலீஸ் சரகத்திற்கு உட்பட்ட முத்துப்பேட்டை என்ற பகுதியில் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர். அப்போது சாலையில் சந்தேகப்படும்படி சுற்றித்திரிந்த அதே பகுதியை சேர்ந்த கிஷோர்(25), தூத்துக்குடியை சேர்ந்த அன்பு(35), நாகர்கோவிலை சேர்ந்த செந்தில்(39) ஆகியோரை பிடித்து போலீசார் விசாரணை மேற்கொண்டனர்.

அப்போது அந்த 3 பேரும் முன்னுக்கு பின் முரணாக பதில் கூறினர். இதனால் போலீசார் சந்தேகம் அடைந்து அவர்களை போலீஸ் நிலையம் அழைத்து வந்து விசாரணை நடத்தினர். அப்போது அவர்கள் கடமலைக்குண்டு அருகே உள்ள மேலப்பட்டி கிராமத்தை சேர்ந்த செல்லப்பாண்டியன் என்பவரை எரித்து கொலை செய்து விட்டதாக தெரிவித்தனர்.

இதனையடுத்து அவர்கள் 3 பேரையும் உச்சிப்புளி போலீசார் கடமலைக்குண்டு போலீஸ் நிலையத்தில் ஒப்படைத்தனர். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து 3 பேரையும் கைது செய்தனர். மேலும் அவர்களிடம் போலீசார் தொடர்ந்து துருவித்துருவி விசாரணை நடத்தினர். இதில் வெளியான தகவல்கள் குறித்து போலீசார் கூறியதாவது:-

மதுவுக்கு அடிமையான செல்லப்பாண்டியன் போதையில் தினமும் சித்ராவிடம் தகராறில் ஈடுபட்டு வந்தார். இதுதொடர்பாக சித்ரா தனது தந்தை மகாராசனிடம் தெரிவித்துள்ளார். எனவே மகாராசன், செல்லப்பாண்டியனை பலமுறை கண்டித்தார். எனினும் செல்லப்பாண்டியன் மதுபழக்கத்தை கைவிடவில்லை. இதனால் கூலிப்படையை ஏவி செல்லப்பாண்டியனை கொலை செய்ய மகாராசன் முடிவு செய்தார். இதற்காக கூலிப்படையை சேர்ந்த கிஷோர், தூத்துக்குடியை சேர்ந்த அன்பு, நாகர்கோவிலை சேர்ந்த செந்தில் ஆகியோரை சந்தித்து செல்லப்பாண்டியனை கொலை செய்ய ரூ.5 லட்சம் கொடுத்துள்ளார். இதனையடுத்து கிஷோர், செந்தில், அன்பு ஆகிய 3 பேரும் மேலப்பட்டிக்கு வந்து செல்லப்பாண்டியனுக்கு மது வாங்கி கொடுத்து ராமநாதபுரம் அழைத்து சென்றனர். அங்கு அவருக்கு மேலும் அதிக அளவில் மது வாங்கி கொடுத்தனர். பின்னர் போதையில் இருக்கும் போது அவரை உயிருடன் எரித்து கொலை செய்து அங்கேயே புதைத்துள்ளனர். செல்லப்பாண்டியனின் உடலை தோண்டி எடுத்து விசாரணை நடத்த திட்டமிடப்பட்டுள்ளது.

இவ்வாறு போலீசார் கூறினார்கள்.

இந்த கொலை வழக்கில் மகாராசனை(65) நேற்று முன்தினம் போலீசார் கைது செய்தனர். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது. இதில் செல்லப்பாண்டியன் கொலையில் சித்ரா உள்பட மேலும் யார், யாருக்கு தொடர்பு உள்ளது? என்பது குறித்த தகவல்கள் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

Next Story