மகதாயி நடுவர்மன்ற தீர்ப்பு அரசிதழில் வெளியீடு இன்னும் 15 நாட்களில் கலசா-பண்டூரி திட்டப்பணிகள் தொடங்கும் நீர்ப்பாசனத்துறை மந்திரி அறிவிப்பு
கலசா- பண்டூரி திட்டத்தில் நீடித்த சிக்கல் தீர்ந்துள்ளது என்றும், இன்னும் 15 நாளில் இந்த திட்டம் தொடங்கப்படும் என்றும் நீர்ப்பாசனத் துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி தெரிவித்தார்.
பெங்களூரு,
கர்நாடகம், கோவா, மராட்டியம் ஆகிய 3 மாநிலங்களில் ஓடும் மகதாயி நதிநீரை பங்கிட்டு கொள்வதில் பிரச்சினை எழுந்தது.
கர்நாடகத்திற்கு 13.42 டி.எம்.சி. நீர்
இந்த பிரச்சினை 40 ஆண்டுகளுக்கும் மேலாக நீடித்து வருகிறது. இதையடுத்து கடந்த 2010-ம் ஆண்டு மத்திய அரசு மகதாயி நடுவர் மன்றம் அமைத்தது. 8 ஆண்டுகள் நடைபெற்ற விசாரணை முடிவடைந்து கடந்த 2018-ம் ஆண்டு ஆகஸ்டு 14-ந் தேதி இறுதி தீர்ப்பை மகதாயி நடுவர் மன்றம் வழங்கியது.
இதில் கர்நாடகத்திற்கு 13.42 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் ஒதுக்கீடு செய்யப்பட்டது. கோவாவுக்கு 24 டி.எம்.சி.யும், மராட்டியத்திற்கு 1.33 டி.எம்.சி.யும் ஒதுக்கப்பட்டது. நடுவர் மன்றத்தின் இந்த தீர்ப்பை எதிர்த்து கோவா அரசு, சுப்ரீம் கோர்ட்டில் மேல்முறையீடு செய்துள்ளது. இந்த வழக்கு விசாரணை நடைபெற்று வருகிறது.
சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு
இந்த நிலையில் நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட மத்திய அரசுக்கு உத்தரவிட கோரி சுப்ரீம் கோர்ட்டில் கர்நாடகம் மனு ஒன்றை தாக்கல் செய்தது. அந்த மனு மீது கடந்த 20-ந் தேதி சுப்ரீம் கோர்ட்டு உத்தரவு ஒன்றை பிறப்பித்தது. அதாவது மகதாயி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடும்படி மத்திய அரசுக்கு உத்தரவிடப்பட்டது.
இந்த நிலையில் கர்நாடக நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கடந்த 26-ந்தேதி டெல்லியில் மத்திய ஜல்சக்தி மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து, சுப்ரீம் கோர்ட்டு பிறப்பித்துள்ள உத்தரவுப்படி மகதாயி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடுமாறு கோரிக்கை மனு வழங்கினார்.
மகிழ்ச்சி கொண்டாட்டம்
இந்த நிலையில் மறுநாள் (நேற்று முன்தினம்) இரவே, மத்திய அரசு மகதாயி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிட்டது. இதை கர்நாடக அரசு வரவேற்றுள்ளது. வடகர்நாடக விவசாயிகள் பட்டாசு வெடித்து தங்களின் மகிழ்ச்சியை கொண்டாடினர். மகதாயி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடப்பட்டு இருப்பதன் மூலம் வடகர்நாடக மக்களின் நீண்டநாள் கனவு நனவாகிறது.
இந்த நிலையில் கர்நாட நீர்ப்பாசனத்துறை மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி பெங்களூருவில் நேற்று நிருபர் களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:-
மத்திய அரசுக்கு நன்றி
எனது தலைமையில் மந்திரிகள் மற்றும் அதிகாரிகள் குழுவினர் டெல்லியில் மத்திய ஜல்சக்தி மந்திரி கஜேந்திரசிங் ஷெகாவத்தை நேரில் சந்தித்து பேசினோம். அப்போது சுப்ரீம் கோர்ட்டு உத்தரவிட்டுள்ளதால், மகதாயி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடுமாறு கேட்டுக் கொண்டோம். அதை ஏற்றுக்கொண்ட மத்திய அரசு, நடுவர் மன்ற தீர்ப்பை உடனே அரசிதழில் வெளியிட்டுள்ளது.
வடகர்நாடக விவசாயிகள் நீண்டநாள் நடத்திய போராட்டம் மற்றும் கர்நாடக அரசு மேற்கொண்ட சட்ட போராட்டத்திற்கு உரிய பலன் கிடைத்துள்ளது. இதற்காக மத்திய அரசுக்கு நன்றி தெரிவிக்கிறேன். இதன் மூலம் கர்நாடகத்திற்கு 13.42 டி.எம்.சி. (ஒரு டி.எம்.சி. என்பது 100 கோடி கனஅடி) நீர் கிடைக்கும். இதையடுத்து கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்தை செயல்படுத்த இருந்து சிக்கல்கள் தீர்ந்துள்ளன.
கலசா-பண்டூரி கால்வாய் திட்டம்
முதல்-மந்திரி எடியூரப்பா, நீர்ப்பாசன திட்டங்களுக்கு முன்னுரிமை அளிப்பதாக ஏற்கனவே கூறியுள்ளார். கலசா-பண்டூரி கால்வாய திட்டத்திற்கான விரிவான அறிக்கை தயாரிக்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் சில மாற்றங்களை செய்து, மத்திய அரசு மற்றும் சுப்ரீம் கோர்ட்டின் கவனத்திற்கு கொண்டு செல்லப்படும். இந்த திட்டத்தை செயல்படுத்த மத்திய அரசிடம் இருந்து 3 வகையான அனுமதி தேவைப்படுகிறது. அதற்கு கர்நாடக அரசு அனைத்து ரீதியிலும் முயற்சி செய்யும்.
கர்நாடக பட்ஜெட்டில் கலசா-பண்டூரி கால்வாய் திட்டத்திற்கு அதிக நிதி ஒதுக்கீடு செய்யுமாறு முதல்-மந்திரியிடம் கேட்டுள்ளோம். இந்த திட்டம் குறித்து அனைத்து விஷயங்களையும் பகிரங்கப்படுத்த முடியாது. பொதுமக்கள் மற்றும் ஊடகத்துறையினர் ஒத்துழைப்பு வழங்க வேண்டும். ஒருவேளை கோவா ஆட்சேபனை தெரிவித்தால், அந்த மாநிலத்துடன் பேச்சுவார்த்தை நடத்தி பிரச்சினைக்கு தீர்வு காணப்படும். 15 நாட்களில் கலசா-பண்டூரி கால்வாய் திட்ட பணிகளை தொடங்க நடவடிக்கை எடுக்கப்படும்.
காவிரி பிரச்சினை
மகதாயி பிரச்சினையில் போராடிய விவசாயிகள் மீது போடப்பட்டுள்ள வழக்குகளை வாபஸ் பெற அரசு பரிசீலனை நடத்தும். முதல்-மந்திரியுடன் பேசி அந்த வழக்குகளை விரைவாக வாபஸ் பெறுமாறு வலியுறுத்தப்படும். மகதாயி நடுவர் மன்ற தீர்ப்பை அரசிதழில் வெளியிடப்பட்டதை கொண்டாடுவதை தவிர்க்க வேண்டும்.
இது உணர்வுப்பூர்வமான பிரச்சினை. இந்த பிரச்சினையை மிகவும் எச்சரிக்கையுடன் கையாள வேண்டியுள்ளது. காவிரி பிரச்சினை தொடர்பான சட்ட போராட்டத்தில் இறுதிக்கட்டத்தை எட்டியுள்ளோம். மேகதாது அணை கட்டும் திட்டத்திற்கு விரைவாக அனுமதி வழங்குமாறு மத்திய அரசிடம் கேட்டுள்ளோம். இதை பரிசீலிப்பதாக உறுதி அளித்துள்ளனர். அதே போல் கிருஷ்ணா நடுவர் மன்ற தீர்ப்பு வந்துள்ளது. நமக்கு ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ள நீரை முழுமையாக பயன்படுத்த திட்டங்கள் வகுக்கப்படும்.
இவ்வாறு மந்திரி ரமேஷ் ஜார்கிகோளி கூறினார்.
Related Tags :
Next Story