காலாவதியான சுங்கச்சாவடிகளை மூடாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம் மோட்டார் டிரான்ஸ்போர்ட் நலச்சங்கம் அறிவிப்பு


காலாவதியான   சுங்கச்சாவடிகளை மூடாவிட்டால் காலவரையற்ற வேலை நிறுத்தம் மோட்டார் டிரான்ஸ்போர்ட் நலச்சங்கம் அறிவிப்பு
x
தினத்தந்தி 29 Feb 2020 6:02 AM IST (Updated: 29 Feb 2020 6:02 AM IST)
t-max-icont-min-icon

தென் மாநிலங்களில் காலாவதியான அனைத்து சுங்கச்சாவடிகளையும் மூடாவிட்டால் காலவரையற்ற வேலைநிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம் என தென் மண்டல மோட்டார் டிரான்ஸ்போர்ட் நலச்சங்க பொதுச்செயலாளர் தெரிவித்தார்.

பூந்தமல்லி, 

தென் மண்டல மோட்டார் டிரான்ஸ்போர்ட் நலச்சங்கத்தின் 26-வது நிர்வாககுழு கூட்டம் சென்னை மதுரவாயலை அடுத்த வேலப்பன்சாவடியில் நடைபெற்றது. கூட்டத்துக்கு சங்கத்தின் தலைவர் கோபால் நாயுடு தலைமை தாங்கினார்.

இதில் தமிழக லாரி உரிமையாளர் சங்க தலைவர் குமாரசாமி, புதுச்சேரி மாநில தலைவர் செந்தில்குமார் மற்றும் மணல் லாரி உரிமையாளர்கள் சங்க தலைவர் யுவராஜ் உள்பட பல்வேறு மாநிலங்களைச் சேர்ந்த நிர்வாகிகள், லாரி உரிமையாளர்கள் பங்கேற்றனர். கூட்டத்தில் பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன. முன்னதாக தங்களது சங்கத்தின் ‘லோகோ ஸ்டிக்கரை’ அறிமுகம் செய்தனர்.

பின்னர் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள் குறித்து சங்கத்தின் பொதுச்செயலாளர் சண்முகப்பா, நிருபர்களிடம் கூறியதாவது:-

சுங்கச்சாவடிகளை மூடவேண்டும்

இந்த கூட்டத்தில் பல்வேறு முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு உள்ளன. அதன்படி தென் மாநிலங்களில் 112 சுங்கச்சாவடிகள் உள்ளன. இங்கு 10 ஆண்டுகளாக சுங்க கட்டணம் வசூலித்து வருகிறார்கள். எனவே மத்திய அரசாங்கம் காலாவதியான அனைத்து சுங்கச்சாவடிகளையும் ரத்து செய்து, பராமரிப்பு கட்டணம் மட்டும் வசூலிக்க வேண்டும். கோடிக்கணக்கான ரூபாய் வசூலாகி விட்டது. எனவே தென்மாநிலங்களில் உள்ள அனைத்து காலாவதியான சுங்கச்சாவடிகளையும் மூடவேண்டும்.

நெடுஞ்சாலைகளில் அதிகளவில் விபத்துகள் ஏற்படுகிறது. இதை தடுக்க மத்திய, மாநில அரசுகள் நடவடிக்கை எடுக்கவேண்டும். டிரைவர்கள் ஓய்வு எடுக்கும் இடங்களை அதிகப்படுத்தி தரவேண்டும். ஒரே வரி, ஒரே இந்தியா என்பதுபோல இந்தியா முழுவதும் ஒரே வரியை விதிக்க வேண்டும். இதனால் ஊழல் இருக்காது.

டீசல் விலை

மாநில எல்லைகளில் உள்ள சோதனை சாவடிகளை அகற்றவேண்டும். டீசல் விலையை 3 மாதங்களுக்கு ஒருமுறை நிர்ணயிக்க வேண்டும். இதனால் லாரி உரிமையாளர்கள் பயனடைவார்கள். ‘பாஸ்டேக்’ முறையை இன்னும் மேம்படுத்த வேண்டும். அதில் தொழில்நுட்ப ரீதியாக சில குறைகள் உள்ளன. இதனால் பிரச்சினைகள் வருகின்றன.

பல இடங்களில் சர்வீஸ் சாலைகள் இல்லை. 4 வழிச்சாலைகளை 6 வழி சாலைகளாக மாற்றும் பணி முடிவடையாத நிலையில் பல இடங்களில் சுங்க கட்டணம் வசூலிக்கிறார்கள். இதை உடனடியாக நிறுத்த வேண்டும். எங்களின் இந்த முக்கிய கோரிக்கைகளை மத்திய, மாநில அரசுகளுக்கு தெரிவித்துள்ளோம். இதன் மீது அரசாங்கம் நடவடிக்கை எடுக்கவில்லை என்றால் காலவரையற்ற வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபடுவோம். பெங்களூருவில் நடைபெற உள்ள அடுத்த கூட்டத்தில் இதுதொடர்பாக கண்டிப்பாக அறிவிப்போம்.

இவ்வாறு அவர் கூறினார்.

Next Story