இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள் ; கலெக்டர் தொடங்கி வைத்தார்


இளைஞர்களுக்கு விளையாட்டு போட்டிகள் ; கலெக்டர் தொடங்கி வைத்தார்
x
தினத்தந்தி 29 Feb 2020 10:30 PM GMT (Updated: 29 Feb 2020 4:20 PM GMT)

நேரு யுவகேந்திரா சார்பில் ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட அளவில் இளைஞர்களுக்கான விளையாட்டு போட்டிகளை கலெக்டர் சண்முகசுந்தரம் தொடங்கி வைத்தார்.

வேலூர், 

இளைஞர்நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை சார்பில் நாடு முழுவதும் உள்ள இளைஞர்கள் திறனை கண்டறிந்து, அதனை மேம்படுத்துவதற்கான நடவடிக்கையை மத்திய அரசு மேற்கொண்டு வருகிறது. அதன்படி ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள இளைஞர்களை ஊக்குவிக்கும் வகையில் நேரு யுவகேந்திரா சார்பில் வேலூர் நேதாஜி விளையாட்டு மைதானத்தில் 2 நாள் விளையாட்டு போட்டிகள் நேற்று தொடங்கியது.

நிகழ்ச்சிக்கு நேரு யுவகேந்திரா மாவட்ட ஒருங்கிணைப்பாளர் பிரேம் பரத்குமார் தலைமை தாங்கினார். மாவட்ட விளையாட்டு அலுவலர் (பொறுப்பு) நோயலின் ஜான் முன்னிலை வகித்தார்.

சிறப்பு அழைப்பாளராக வேலூர் மாவட்ட கலெக்டர் சண்முகசுந்தரம் கலந்து கொண்டு வாலிபால் போட்டியை தொடங்கி வைத்தார். அதைத்தொடர்ந்து போட்டிகள் நடைபெற்றது. முதல்நாளான நேற்று கால்பந்து, வாலிபால், கபடி ஆகிய போட்டிகள் நடந்தது. இதில் 15 அணிகள் பங்கேற்றன.

விளையாட்டு போட்டிகள் 15 வயது முதல் 25 வயது வரையிலான இளைஞர்களுக்காக நடத்தப்படுகிறது. இதில் வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர் ஆகிய 3 மாவட்டங்களை சேர்ந்த 200-க்கும் மேற்பட்டவர்கள் பங்கேற்றனர். 2-வது நாளான இன்று நீளம் தாண்டுதல், ஓட்டப்பந்தயம் உள்ளிட்ட போட்டிகள் நடக்கிறது.

தனிநபர் பிரிவில் முதல் 3 இடங்களை பிடிப்பவர்களுக்கும், குழு போட்டிகளில் முதல் 2 இடங்களை பிடிக்கும் அணிகளுக்கும் சான்றிதழ் வழங்கப்படும். தனிநபர் பிரிவில் முதலிடம் பிடித்தவர்கள் மற்றும் குழு போட்டிகளில் முதலிடம் பிடித்த அணிகள் மாநில அளவிலான போட்டிகளில் பங்கேற்க அனுமதிக்கப்படுவார்கள் என்று விளையாட்டு ஒருங்கிணைப்பாளர் தெரிவித்தார்.


Next Story