நிலபத்திரத்தை விடுவிக்க விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலூர் துணை கலெக்டர் கைது


நிலபத்திரத்தை விடுவிக்க விவசாயியிடம் ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலூர் துணை கலெக்டர் கைது
x
தினத்தந்தி 1 March 2020 12:30 AM GMT (Updated: 29 Feb 2020 6:36 PM GMT)

நிலபத்திரத்தை விடுவிக்க விவசாயியிடம் இருந்து ரூ.50 ஆயிரம் லஞ்சம் வாங்கிய வேலூர் தனித்துணை கலெக்டரை லஞ்ச ஒழிப்பு போலீசார் கைது செய்தனர். மேலும் அவரது வீட்டில் பதுக்கி வைத்திருந்த ரூ.76½ லட்சம் கைப்பற்றப்பட்டது.

வேலூர்,

திருவண்ணாமலை மாவட்டம் போளூர் தாலுகா இரும்புலி கிராமத்தை சேர்ந்தவர் ரஞ்சித்குமார் (வயது 31). விவசாயி. இவருக்கு பூர்வீக சொத்தாக 1 ஏக்கர் 47 சென்ட் நிலம் உள்ளது. இந்த நிலத்தை கடந்தாண்டு தனது பெயருக்கு ரஞ்சித்குமார் மாற்றினார். பின்னர் அவர், அதனை கண்ணமங்கலம் சார் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வதற்காக விண்ணப்பம் அளித்தார். அதனை அதிகாரிகள் ஆய்வு செய்தபோது ரஞ்சித்குமார் நிலத்தின் மதிப்பை விட முத்திரைத்தாள் கட்டணம் குறைவாக செலுத்தி இருந்தது தெரிய வந்தது.

இதுதொடர்பாக அதிகாரிகள் வேலூர் கலெக்டர் அலுவலக வளாகத்தில் செயல்பட்டு வரும் வேலூர், திருவண்ணாமலை மாவட்ட முத்திரைதாள் கட்டண அலுவலகத்துக்கு கடிதம் அனுப்பினர். அதன்பேரில் இதுதொடர்பாக விசாரிக்க 21 நாட்களுக்குள் நேரில் ஆஜராக வேண்டும் என்று ரஞ்சித்குமாருக்கு அந்த அலுவலகத்தில் இருந்து கடிதம் அனுப்பப்பட்டது.

ரூ.50 ஆயிரம் லஞ்சம்

அதைத்தொடர்ந்து கடந்த மாதம் 9-ந் தேதி ரஞ்சித்குமார் முத்திரைதாள் கட்டண அலுவலகத்துக்கு வந்தார். அங்கிருந்த தனித்துணை கலெக்டர் (முத்திரைதாள் கட்டணம்) தினகரன் முத்திரைதாள் கட்டணமாக கூடுதலாக ரூ.1 லட்சத்து 25 ஆயிரம் செலுத்த வேண்டும் என்று தெரிவித்துள்ளார். அதற்கு ரஞ்சித்குமார், நான் விவசாயம் செய்து வருகிறேன். என்னிடம் இவ்வளவு பெரிய தொகை கிடையாது என்று கூறிவிட்டு அங்கிருந்து சென்றுள்ளார்.

இந்த நிலையில் கடந்த சில நாட்களுக்கு முன்பு தினகரன் வேலூர் மாவட்ட ஆய்வுக்குழு அலுவலராக பணி இடமாற்றம் செய்யப்பட்டார். இதையடுத்து தினகரன் செல்போன் மூலம் ரஞ்சித்குமாரை தொடர்பு கொண்டு நான் சில நாட்களில் இப்பணியில் இருந்து செல்ல உள்ளேன். எனவே முத்திரைத்தாள் கட்டணம் தொடர்பான உனது நிலப்பத்திரத்தை விடுவித்து, பிரச்சினையை முடித்து வைக்கிறேன். அதற்கு ரூ.50 ஆயிரம் லஞ்சம் கொடுக்க வேண்டும் என்று கூறி உள்ளார்.

சினிமா பாணியில் விரட்டி சென்று...

ஆனால் லஞ்சம் கொடுக்க விரும்பாத ரஞ்சித்குமார் இதுகுறித்து வேலூர் லஞ்ச ஒழிப்பு போலீசில் புகார் செய்தார். லஞ்ச ஒழிப்பு போலீசார் தினகரனை கையும், களவுமாக பிடிக்க முடிவு செய்தனர். அதன்படி ரசாயன பவுடர் தடவிய ரூ.50 ஆயிரத்தை ரஞ்சித்குமாரிடம் போலீசார் வழங்கி, அதனை தினகரனிடம் கொடுக்கும்படி கூறினர். அதையடுத்து ரஞ்சித்குமார் நேற்று முன்தினம் செல்போனில் தினகரனை தொடர்பு கொண்டு ரூ.50 ஆயிரம் தயாராக இருப்பதாகவும், அதனை எங்கு வந்து கொடுப்பது என்று கேட்டுள்ளார்.

அதற்கு தினகரன் இரவு 10 மணியளவில் வேலூர் கலெக்டர் அலுவலகம் அருகே உள்ள ஏ.டி.எம். மையத்துக்கு வந்து தரும்படி தெரிவித்துள்ளார். அதன்படி இரவு 9.30 மணியளவில் ரஞ்சித்குமாரும் அங்கு சென்றார். சிறிதுநேரத்தில் அங்கு தனது சொந்த காரில் வந்த தினகரன், ரஞ்சித்குமாரை காரில் ஏற்றி சென்றார். அந்த காரை லஞ்ச ஒழிப்பு போலீசார் பின்தொடர்ந்து சென்றனர். காரில் வைத்து ரூ.50 ஆயிரத்தை பெற்றுக்கொண்ட தினகரன் வேலூர் புதிய பஸ்நிலையம் அருகே ரஞ்சித்குமாரை இறக்கிவிட்டு விட்டு சத்துவாச்சாரி சாலையில் சென்றார்.

2 பேர் கைது

ரசாயனம் தடவிய பணத்தை தினகரன் பெற்றதை உறுதிப்படுத்திக் கொண்ட லஞ்ச ஒழிப்பு போலீசார் காரை விரட்டிச் சென்றனர். போலீசார் பின் தொடர்ந்து வருவதை அறிந்த தினகரன் காரை வேகமாக ஓட்டுமாறு போளூரை சேர்ந்த அவரது டிரைவர் ரமேஷ்குமாரிடம் (45) தெரிவித்தார். கார் வேகமாக சென்று கொண்டிருந்தபோது சினிமா பாணியில் போலீசார் விரட்டி சென்று சென்னை-பெங்களூரு தேசிய நெடுஞ்சாலையில் சத்துவாச்சாரி சாலை கெங்கையம்மன் கோவில் அருகே காரை மடக்கினர். தொடர்ந்து போலீசார் அவரை லஞ்ச பணத்துடன் கைது செய்ய முயன்றனர். அதற்கு தினகரன் எதிர்ப்பு தெரிவித்தார். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

தினகரன், டிரைவர் ரமேஷ்குமார் ஆகியோரை காரில் இருந்து வெளியேற்றி போலீசார் சோதனையிட்டனர். காரில், ரசாயனம் தடவிய ரூ.50 ஆயிரம் மற்றும் ரூ.1 லட்சத்து 94 ஆயிரம் என ரூ.2 லட்சத்து 44 ஆயிரம் இருந்தது. அதனை போலீசார் கைப்பற்றினர். தொடர்ந்து தினகரனை அவருடைய அலுவலகத்துக்கு அழைத்து சென்று விசாரணை நடத்தினர். மேலும் அலுவலகத்தை போலீசார் சோதனையிட்டனர். அங்கிருந்த முக்கிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டது. அதைத்தொடர்ந்து தினகரன், டிரைவர் ரமேஷ்குமார் ஆகியோரை போலீசார் கைது செய்தனர்.

இரும்பு பெட்டியில் ரூ.76½ லட்சம்

இந்த நிலையில் நேற்று காலை 8 மணியளவில் காட்பாடி பிரம்மபுரம் தாங்கல் பகுதியில் அமைந்துள்ள தினகரனின் வீட்டில் போலீசார் சோதனை நடத்தினர். அப்போது ஒரு இரும்பு பெட்டியில் ரூ.76 லட்சத்து 64 ஆயிரத்து 600 இருந்தது. வீட்டில் இருந்த மடிக்கணினி, முக்கிய ஆவணங்கள், இரும்பு பெட்டியுடன் பணம் ஆகியவற்றை போலீசார் பறிமுதல் செய்தனர். தொடர்ந்து இரும்பு பெட்டியில் இருந்த பணத்தை துப்பாக்கி ஏந்திய போலீஸ் பாதுகாப்புடன் எடுத்து சென்று வேலூர் கருவூலத்தில் ஒப்படைத்தனர். 7 மணி நேரம் நடந்த சோதனை பிற்பகல் 3 மணிக்கு நிறைவடைந்தது. புதிதாக உருவாக்கப்பட்ட குடியாத்தம் வருவாய் கோட்ட உதவி கலெக்டர் பணியை தினகரன் கூடுதலாக கவனித்து வந்தது குறிப்பிடத்தக்கது.தனித்துணை கலெக்டர் வீட்டில் இருந்து லட்சக்கணக்கில் பணம் கைப்பற்றப்பட்டது வேலூர், காட்பாடியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

போளூரில் சோதனை

மேலும் போளூரில் வசந்தம் நகரில் உள்ள தனித்துணை கலெக்டர் தினகரனின் சொந்த வீட்டிலும் லஞ்ச ஒழிப்பு துணை போலீஸ் சூப்பிரண்டு தேவநாதன், இன்ஸ்பெக்டர் அருள் பிரசாத் தலைமையிலான போலீசார நேற்று மதியம் 12 மணி முதல் மாலை 5 மணி வரை தீவிர சோதனை நடத்தினர். இந்த சோதனையில் முக்கிய ஆவணங்களை கைப்பற்றி எடுத்துச்சென்றனர். 

Next Story