மரபுசாரா எரிசக்தி மின்சாரம் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் அமைச்சர் தங்கமணி பேட்டி


மரபுசாரா எரிசக்தி மின்சாரம் உற்பத்தியில் தமிழகம் முதலிடம் அமைச்சர் தங்கமணி பேட்டி
x
தினத்தந்தி 29 Feb 2020 11:30 PM GMT (Updated: 29 Feb 2020 7:38 PM GMT)

மரபுசாரா எரிசக்தி மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் இந்தியாவிலேயே தமிழகம் முதலிடத்தில் இருப்பதாக அமைச்சர் தங்கமணி கூறினார்.

நாமக்கல்,

நாமக்கல் பஸ்நிலையத்தில் செய்தி, மக்கள் தொடர்புத் துறையின் சார்பில் தமிழக அரசின் சாதனை விளக்க புகைப்பட கண்காட்சி அமைக்கப்பட்டு உள்ளது. இந்த கண்காட்சி தொடக்க விழாவுக்கு கலெக்டர் மெகராஜ் தலைமை தாங்கினார். மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு அருளரசு, உதவி கலெக்டர் கோட்டைக்குமார் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் தமிழக மின்சாரம், மதுவிலக்கு மற்றும் ஆயத்தீர்வைத்துறை அமைச்சர் தங்கமணி சிறப்பு அழைப்பாளராக கலந்து கொண்டு கண்காட்சியை தொடங்கி வைத்து பார்வையிட்டார்.

பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தபோது கூறியதாவது:- சுற்றுச்சூழல் அனுமதி இல்லாமல் எந்த ஒரு அனல் மின்நிலையமும் செயல்பட கூடாது என மத்திய அரசு அறிவித்து உள்ளது. தமிழகத்தை பொறுத்தவரையில் அனைத்து அனல் மின்நிலையங்களுக்கும் சுற்றுச்சூழல் அனுமதி பெற்று உள்ளோம். எனவே எந்த பிரச்சினையும் இல்லை.

தமிழகம் முதலிடம்

நிலக்கரி விலை உயர்வு, அதை ரெயிலில் கொண்டு வர ஆகும் செலவு அதிகரிப்பு, தொழிலாளர்கள் சம்பள உயர்வு உள்ளிட்ட காரணங்களால் மின்உற்பத்திக்கு அதிக ரூபாய் செலவாகிறது. இருப்பினும் தமிழக அரசு அதற்கான மானியதொகையை வழங்கி வருவதால், எவ்வித தடையும் இன்றி மின்சாரம் உற்பத்தி செய்யப்பட்டு வருகிறது.

இந்தியாவிலேயே மரபுசாரா எரிசக்தியின் மூலம் மின்சாரம் உற்பத்தி செய்வதில் தமிழகம் தான் முதலிடத்தில் உள்ளது. காற்றாலை மூலம் 8 ஆயிரத்து 507 மெகாவாட், சூரியசக்தி மூலம் சுமார் 4 ஆயிரத்து 500 மெகாவாட் என மொத்தம் 13,507 மெகாவாட் மின்சாரம் உற்பத்தி செய்யப்படுகிறது. இந்திய அளவில் 43 சதவீத மின்சாரத்தை நாம் உற்பத்தி செய்கிறோம்.

மாற்றுப்பணி

வடசென்னை மின்உற்பத்தி நிலையம் நிறுவப்பட்டு அதிக ஆண்டுகள் ஆவதால், அதற்கான கட்டிடத்தை இடிக்க வேண்டிய நிலை உள்ளது. இருப்பினும் அங்கு வேலைபார்த்த 250 ஊழியர்கள் மாற்றுப்பணிக்கு செல்லாமல் இருந்து வருகின்றனர். அவர்கள் எந்த பணிக்கு செல்ல விருப்பம் தெரிவிக்கிறார்களோ அங்கு பணியில் அமர்த்த நடவடிக்கை மேற்கொண்டு வருகிறோம். ஆன்-லைன் மூலம் விண்ணப்பித்தால் 24 மணி நேரத்தில் மின்இணைப்பு வழங்கும் திட்டம் நடைமுறையில் இருந்து வருகிறது. இத்திட்டத்தின் கீழ் இதுவரை 7 லட்சம் பேர் மின்இணைப்பு கேட்டு விண்ணப்பித்து உள்ளனர். இவ்வாறு அவர் கூறினார்.

இந்த கண்காட்சியில் தமிழக அரசின் சிறப்பு திட்டங்களான விலையில்லா அரிசி வழங்கும் திட்டம், விலையில்லா மிக்சி, கிரைண்டர், மின்விசிறி வழங்கும் திட்டம், குடிமராமத்து திட்டம் உள்ளிட்ட பல்வேறு திட்டப்பணிகள் குறித்த புகைப்படங்கள் இடம்பெற்று இருந்தன. இதில் மாவட்ட ஊராட்சி குழுத்தலைவர் சாரதா, செய்தி-மக்கள் தொடர்பு அலுவலர் சீனிவாசன், உதவி அலுவலர்கள் மோகன்ராஜ், கோகுல், நகராட்சி ஆணையாளர் ஜஹாங்கீர் பா‌ஷா, கூட்டுறவு வீட்டு வசதி சங்கத்தலைவர் விஜய்பாபு, தாசில்தார் பச்சைமுத்து, நகர கூட்டுறவு வங்கித்தலைவர் கண்ணன், மாவட்ட ஊராட்சிக்குழு முன்னாள் உறுப்பினர் மயில்சுந்தரம், ஒன்றியகுழு துணைத்தலைவர் ராஜா உள்பட பலர் கலந்து கொண்டனர்.


Next Story