குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி சென்னையில் 2 இடங்களில் தர்ணா போராட்டம்


குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப் பெறக்கோரி   சென்னையில் 2 இடங்களில் தர்ணா போராட்டம்
x
தினத்தந்தி 1 March 2020 5:00 AM IST (Updated: 1 March 2020 4:35 AM IST)
t-max-icont-min-icon

குடியுரிமை திருத்த சட்டத்தை திரும்பப்பெறக்கோரி தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் சார்பில் சென்னையில் 2 இடங்களில் தர்ணா போராட்டம் நடந்தது.

சென்னை, 

குடியுரிமை திருத்த சட்டத்தை மத்திய அரசு திரும்பப்பெறக்கோரியும், தேசிய மக்கள் தொகை பதிவேட்டை தமிழகத்தில் அமல்படுத்தக்கூடாது என்று தமிழக அரசு தீர்மானம் நிறைவேற்ற வலியுறுத்தியும் மாநிலம் தழுவிய அளவில் தர்ணா போராட்டம் நடத்தப்படும் என்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் அறிவித்திருந்தது.

அதன்படி சென்னையில் திருவல்லிக்கேணி மற்றும் புரசைவாக்கம் ஆகிய 2 இடங்களில் தர்ணா போராட்டம் நடந்தது. தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் தென் சென்னை மாவட்டம் சார்பில் திருவல்லிக்கேணியில் உள்ள சி.என்.கே. சாலையில் நடந்த தர்ணா போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் எம்.ஹபிபுல்லா பாஷா தலைமை தாங்கினார். மாநில பொதுச்செயலாளர் முகமது, மாவட்ட செயலாளர் பயாஸ், சென்னை மாவட்ட துணைத்தலைவர் ஏ.சித்திக், ஊடக பொறுப்பாளர் யாகூப் சேட் உள்பட பலர் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் பங்கேற்ற பெண்கள் குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் வகையில் நெற்றியில் பட்டைகளை அணிந்திருந்தனர். இதனால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து மாணவர்கள் நாடகங்கள் நடத்தினார்கள்.

புரசைவாக்கம்

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத் வடசென்னை மாவட்டம் சார்பில் புரசைவாக்கம் டவுட்டன் மேம்பாலத்தின் கீழே நடந்த தர்ணா போராட்டத்துக்கு மாவட்ட தலைவர் எம்.ஏ.சாகுல் தலைமை தாங்கினார். மாவட்ட செயலாளர் பெரோஸ்கான், துணைத்தலைவர் காஜா, ஊடக பொறுப்பாளர் எம்.அன்சாரி உள்பட நிர்வாகிகள் கலந்துகொண்டனர்.

போராட்டத்தில் முஸ்லிம் பெண்கள், குழந்தைகள் என ஏராளமானோர் பங்கேற்று, குடியுரிமை திருத்த சட்டத்துக்கு எதிராக கோஷங்கள் எழுப்பினர். சென்னையில் நடைபெற்ற இந்த தர்ணா போராட்டங்கள் காலை முதல் மாலை வரை நீடித்தது.

அதேபோல் சென்னை புறநகர் பகுதிகளான ஆலந்தூர், துரைப்பாக்கம், தாம்பரம், குமணன்சாவடி, போரூர் ரவுண்டானா, மதுரவாயல், ஆவடி, பட்டாபிராம் ஆகிய இடங்களிலும் தவ்ஹீத் ஜமாத் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

Next Story