வாகனம் மோதி இறந்ததாக கூறப்பட்ட தொழிலாளி அடித்து கொலை? போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை


வாகனம் மோதி இறந்ததாக கூறப்பட்ட தொழிலாளி அடித்து கொலை? போலீஸ் நிலையத்தை உறவினர்கள் முற்றுகை
x
தினத்தந்தி 29 Feb 2020 11:45 PM GMT (Updated: 29 Feb 2020 11:45 PM GMT)

திருபுவனை அருகே வாகனம் மோதி இறந்ததாக கூறப்பட்ட தொழிலாளி அடித்து கொலை செய்யப்பட்டதாக கூறி அவரது உறவினர்கள் திருபுவனை போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டனர்.

திருபுவனை,

திருபுவனை அருகே மதகடிப்பட்டு புதுகாலனியை சேர்ந்தவர் ராதாகிருஷ்ணன் (வயது 46), கூலித்தொழிலாளி. இவருக்கு வளர்மதி என்ற மனைவியும், 2 மகள்களும் உள்ளனர்.

நேற்று முன்தினம் அதிகாலை வயல்வெளிக்கு சென்ற ராதாகிருஷ்ணன் வீடு திரும்பவில்லை. புதுச்சேரி - விழுப்புரம் சாலையில் காயங்களுடன் பிணமாக கிடந்தார். அடையாளம் தெரியாத வாகனம் மோதியதில் அவர் இறந்ததாக கூறப்பட்டது.

இது பற்றி தகவல் அறிந்த வில்லியனூர் போக்குவரத்து போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து சென்று ராதாகிருஷ்ணனின் உடலை கைப்பற்றி, பிரேத பரிசோதனைக்காக கதிர்காமம் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். மேலும் விபத்து தொடர்பாக வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தினர்.

அடித்து கொலை

இதற்கிடையே ராதாகிருஷ்ணன் உடலில் சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் காயங்கள் இருந்ததால் அவரை யாரோ அடித்து கொலை செய்ததாக அவரது உறவினர்கள் கருதினர்.

எனவே அவர்கள் நேற்று காலை திருபுவனை போலீஸ் நிலையம் முன்பு ஒன்று கூடினர். திடீரென அவர்கள் போலீஸ் நிலையத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்தினர். அப்போது அவர்கள், ராதாகிருஷ்ணனை யாரோ அடித்து கொலை செய்து, சாலையில் வீசியுள்ளனர்.

எனவே விபத்து வழக்கை கொலை வழக்காக மாற்றி குற்றவாளிகளை கைது செய்ய வேண்டும். அதுவரை ராதாகிருஷ்ணனின் உடலை வாங்க மாட்டோம் என்று கூறினர். இதனால் அங்கு பரபரப்பு ஏற்பட்டது.

பேச்சுவார்த்தை

இதனை தொடர்ந்து திருபுவனை போலீஸ் இன்ஸ்பெக்டர் கணேசன், சப்-இன்ஸ்பெக்டர் ராஜசேகர் ஆகியோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களிடம் சமாதான பேச்சுவார்த்தை நடத்தினர். பிரேத பரிசோதனையின் முடிவு வந்தபிறகுதான் ராதாகிருஷ்ணன் கொலை செய்யப்பட்டாரா? என்பது தெரிய வரும். அதன்பின்னர் உரிய நடவடிக்கை எடுப்பதாக போலீசார் உறுதி அளித்தனர். இதன்பின் அவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.

ராதாகிருஷ்ணன் சாவு குறித்து போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர். இந்த சம்பவம் தொடர்பாக அப்பகுதியை சேர்ந்த ஒருவரை போலீசார் சந்தேகத்தின் பேரில் பிடித்து விசாரித்து வருவதாக கூறப்படுகிறது.

Next Story