மாற்றுத்திறனாளிகள் 40 பேருக்கு செயற்கை உபகரணங்கள் அரசு சாரா அமைப்பு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது


மாற்றுத்திறனாளிகள் 40 பேருக்கு செயற்கை உபகரணங்கள் அரசு சாரா அமைப்பு சார்பில் இலவசமாக வழங்கப்பட்டது
x
தினத்தந்தி 2 March 2020 4:15 AM IST (Updated: 1 March 2020 10:34 PM IST)
t-max-icont-min-icon

அரசு சாரா அமைப்பு சார்பில் மாற்றுத்திறனாளிகள் 40 பேருக்கு செயற்கை உபகரணங்கள் இலவசமாக வழங்கப்பட்டது.

சென்னை,

சென்னை அண்ணாநகரில் நடைபயிற்சி செல்லும் 18 தொழில் அதிபர்களை கொண்டு உருவாக்கப்பட்டது, அலையன்ஸ் அரசு சாரா அமைப்பு. இந்த அமைப்பு யாரிடமும் நன்கொடை எதுவும் வாங்காமல், மனிதநேயத்தோடு தாங்களாகவே ஏழை மாணவர்கள், ஆதரவற்றோர், மாற்றுத்திறனாளிகள், கண் பார்வையற்றோர், காது கேளாதோர், எய்ட்ஸ் நோயால் பாதித்தவர்கள் என பல்வேறு தரப்பினருக்கு உதவி செய்து வருகிறது.

அந்தவகையில் மாற்றுத்திறனாளிகள் 40 பேருக்கு, ரூ.5 லட்சம் மதிப்புடைய செயற்கை கால், கை, ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்கள் வழங்கும் நிகழ்ச்சி சென்னை அண்ணாநகரில் உள்ள ‘பர்ம்’ விருந்து அரங்கில் நேற்று நடந்தது. இந்த உபகரணங்களை வில்லிவாக்கத்தில் மாற்றுத்திறனாளிகளுக்கான செயற்கை உபகரணங்களை தயாரித்து வரும் மோகனா ஆர்த்தோடிக்ஸ் மற்றும் பிராஸ்தெடிக்ஸ் நிறுவனம் மிக குறைந்த விலையிலேயே தயாரித்து கொடுத்திருக்கிறது.

அலையன்ஸ் அரசு சாரா அமைப்பின் தலைவர் ஈ.பன்னீர்செல்வம், செயலாளர் கே.ராமதாஸ், பொருளாளர் பி.ஜே.பி.என்.குப்தா, மோகனா ஆர்த்தோடிக்ஸ் மற்றும் பிராஸ்தெடிக்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் ஜி.கிரு‌‌ஷ்ணன், இயக்குனர் விஜயகிரு‌‌ஷ்ணன் உள்பட நிர்வாகிகள் மாற்றுத்திறனாளிகளுக்கு செயற்கை உபகரணங்களை வழங்கினார்கள்.

இதுகுறித்து ஜி.கிரு‌‌ஷ்ணன் கூறும்போது, ‘‘நாங்கள் வெளிநாட்டில் உள்ள நவீன தொழில்நுட்பமுறையின்படி செயற்கை கால், கை, ஊன்றுகோல் உள்ளிட்ட உபகரணங்களை தயாரித்து வருகிறோம். இந்த தொழில்நுட்பத்தின்படி தயாரிக்கப்படும் உபகரணங்களை அதிக ஆண்டுகள் பயன்படுத்தலாம். பழுது ஏற்பட்டால் எளிதில் சரி செய்து கொள்ளலாம். இதை பழுது பார்க்க வசதி இல்லாமலும், புதிய உபகரணங்களை வாங்க வசதி இல்லாமலும் தவிக்கும் ஏழைகளை நாங்கள் தேர்வு செய்து, அலையன்ஸ் அரசு சாரா அமைப்புக்கு பரிந்துரைப்போம். அவர்கள் தகுதியான நபர்களை தேர்ந்தெடுத்து இலவசமாக செயற்கை உபகரணங்களை வழங்குவார்கள்’’ என்றார்.

இந்த நிகழ்ச்சியில் ‘பர்ம்ஸ்’ குழுமத்தின் நிர்வாக இயக்குனர் கஸ்தூரி ராஜா, ஸ்ரீவாரி ஸ்வீட்ஸ் நிறுவனத்தின் உரிமையாளர் வி.திருமாவளவன், அலையன்ஸ் அரசு சாரா அமைப்பின் பிற நிர்வாகிகளும், மோகனா ஆர்த்தோடிக்ஸ் மற்றும் பிராஸ்தெடிக்ஸ் நிறுவனத்தின் ஊழியர்களும் கலந்துகொண்டனர்.

Next Story